மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் தோள்பட்டை இடப்பெயர்வு பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் முழங்கை (Elbow) மூட்டில் ஏற்படும் பிரச்னைகள் பற்றிப் பார்ப்போம்.

முழங்கை

முழங்கை (Elbow) மூட்டு என்பது, ஹுமெரஸ் (Humerus), அல்னா (Ulna) மற்றும் ரேடியஸ் (Radius) என்ற மூன்று எலும்புகள் சேர்ந்த கீல் வகையைச் சேர்ந்த மூட்டு அமைப்பு. நம் அன்றாட வேலைகளுக்கு முழங்கையின் செயல்பாடுகள் மிக அவசியம். உதாரணமாக, முழங்கையை மடக்காமல் ஒரு வேலையைச் செய்ய முயற்சியுங்கள், கண்டிப்பாக எந்த வேலையையும் எளிதாகச் செய்ய முடியாது. முழங்கையில் பிரச்னை ஏற்பட்டால், சாதாரணமாகக் கையை நீட்டி மடக்குவதற்குக்கூட சிரமமாகிவிடும்.

எலும்பின் கதை! - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

முழங்கை மூட்டு தேய்மானம் (Elbow Arthritis)

பொதுவாக கால் மூட்டில் தேய்மானம் ஏற்படுவதை நாம் அறிவோம். அதேபோல, முழங்கை மூட்டிலும் தேய்மானம் ஏற்படலாம். மூட்டில் முறிவு ஏற்பட்டிருந்தாலோ பளு தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை நீண்டகாலம் செய்பவராக இருந்தாலோ ஏற்படும். அதாவது, மூட்டின் உள்ளே உள்ள குருத்தெலும்பில் (Cartilage) மாற்றம் ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படும். இதனால் மூட்டை மடக்கி நீட்டும்போது அதிக வலி ஏற்படுத்தும். மூட்டு அசைவுகளும் குறைந்து காணப்படும்.

பரிசோதனை

எலும்பில் தேய்மானம் ஏற்பட்டுள்ளதா, எந்தளவுக்குப்  பாதிப்புள்ளது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.

தீர்வுகள் என்ன?

ஆரம்பநிலைத் தேய்மானத்துக்குப்  பிசியோதெரபி (Physiotherapy) மற்றும் வலி நிவாரணிகள் கொடுத்துச்  சரிசெய்யலாம். சில நேரங்களில்  ஸ்டெம் செல்  ஊசிகளைச் செலுத்தியும் குணப்படுத்துவார்கள்.
அதிகமான தேய்மானம் ஏற்பட்டிருந்தால், தூங்கக்கூட முடியாத அளவுக்கு வலி உயிர் போகும். அதுபோன்ற சூழலில் பாதிக்கப் பட்டவர்கள், சின்னஞ்சிறு பொருள்களைக்கூட தூக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இந்த நிலையை அடைந்தவருக்கு மூட்டுமாற்று அறுவைசிகிச்சைதான் சிறந்த தீர்வு. இந்தச் சிகிச்சைக்கு ஆங்கிலத்தில் `Total Elbow Replacement’ என்று பெயர். இந்தச் செயற்கை மூட்டுமாற்றுச் சிகிச்சை முறையில் ஹுமெரஸ், உல்னா ஆகிய இரண்டு எலும்புகளுக்குப் பதிலாக கோபால்ட் குரோம் (Cobalt Chrome) என்ற உலோகத்தால் செய்யப்பட்ட செயற்கை மூட்டு பொருத்தப் படுகிறது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னர், பாதிப்புக்கு உள்ளானவருக்குப்  பிசியோதெரபி கொடுக்கப்படும்.

எலும்பின் கதை! - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்படும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்து, நான்கிலிருந்து ஐந்து வாரங்களில் வழக்கமான பணிகளைச் செய்யத் தொடங்கலாம். இந்தச் செயற்கை மூட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை நன்றாகச் செயல்படும். அதன் பிறகு திரும்பவும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

டென்னிஸ் எல்போ (Tennis Elbow)

முழங்கையின் வெளிப்பகுதியில் ஏற்படும் வலியை ஆங்கிலத்தில் ‘டென்னிஸ் எல்போ’ (Tennis elbow)   என்பார்கள். இந்த வலி டென்னிஸ் விளையாடுபவர் களை அதிகம் தாக்குவதால்  இந்தப் பெயர். ஆனால் டென்னிஸ் விளையாடுவது மட்டும் இந்தப் பிரச்னைக்குக் காரணமல்ல. அதிகமாக பளுதூக்குபவர்களுக்கும் தொடர்ச்சியாக மணிக்கட்டைப் பயன்படுத்தி வேலை செய்பவர் களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

இந்தப் பிரச்னை இருப்பவர் களுக்கு முழங்கையின் வெளிப் புறத்தில் அதிகமான வலி இருக்கும். முழங்கையின் கீழ்ப்பகுதியில் உள்ள தசைகள் அனைத்தும் `பக்கவாட்டு எபிகாண்டைல்’ (Lateral Epicondyle) என்று அழைக்கப்படும்  எலும்பிலிருந்து தொடங்குகின்றன. தசைகள் தொடங்கும் இடத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.

என்ன தீர்வு?

90 சதவிகிதப் பிரச்னைகள் பயிற்சிகளிலேயே சரியாகிவிடும். இதற்கு முதல்நிலை சிகிச்சையாகப் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதன் மூலம் தசைகளைத் தளர்வடையச் செய்ய முடியும். ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டுக்கான பட்டை (Elbow Brace) ஆகியவை ஆரம்பநிலையில் பலனளிக்கும். ஆனால், இவை நாள்பட்ட வலியைப் போக்க உதவாது. அப்படியும் வலி குறையவில்லை என்றால், ஸ்டெம் செல் ஊசிகள் பரிந்துரைக்கப்படும்.