மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!

மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்

ர் உடலில் இரண்டு உயிர்கள் இயங்குவதை ஆங்கிலத் திகில் சினிமாப் படங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள். அது இப்போது நிஜமாகியுள்ளது இந்தியாவில்... நம் தமிழ்நாட்டில்!
மருத்துவத்துறைக்குள் புகுந்துள்ள இந்த நவீனத் தொழில்நுட்ப அதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், இயல்பான ‘இதயமாற்று அறுவை சிகிச்சை’ (Heart transplantation) குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!

வரலாற்றுப் பின்னணி

இதயத்தில் அறுவைசிகிச்சை செய்யும் முறை      1897-ம் ஆண்டில் தொடங்கியது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த லட்விக் ரேன் (Ludwig Rehn) என்ற மருத்துவர், இதயத்தில் அடிபட்டு வந்த ஒரு நோயாளிக்கு, கிழிந்திருந்த அவருடைய இதயச் சுவரில் தையல் போட்டுச் சரிசெய்தார். இதுவே உலகில் முதன் முறையாகச் செய்யப்பட்ட இதய அறுவைசிகிச்சை. பிறகு, 1930-ம் ஆண்டில் ராபர்ட் கிராஸ் (Robert Gross)  எனும்  அமெரிக்க மருத்துவர் முதன்முதலில் ஒரு குழந்தையின் ‘சுருங்காத கருந்தமனி’ (Patent Ductus Arteriosus - PDA) எனும் பிறவி இதயக் கோளாறைச் சரிசெய்தார்.

இதன் பின்னர், 1944-ம் ஆண்டில் ஹெலன் புரூக் டாவ்ஸிங் (Helen Brooke Taussing) மற்றும் ஆல்ஃபிரெட் பிளாலாக் (Alfred Blalock) எனும் இரண்டு அமெரிக்க அறுவைசிகிச்சை மருத்துவர்கள், உடலில் நீலநிறத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய அறுவைசிகிச்சை செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். இதுவரை செய்யப்பட்ட இதய அறுவைசிகிச்சைகள் எல்லாமே இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே செய்யப்பட்டவை.

‘இதயம் - நுரையீரல் எந்திரம்’ கண்டுபிடிப்பு

1953-ம் ஆண்டில் மற்றோர் அமெரிக்க அறுவைசிகிச்சை மருத்துவர் ஜான் கிப்பன் (John Gibbon) ‘இதயம் -  நுரையீரல் எந்திரம்’ (Heart Lung Machine) எனும் கருவியைக் கண்டுபிடித்து,  இதயத் துடிப்பைத்  தற்காலிகமாக நிறுத்திவைத்து, இதயச் சுவர்களைப் பிளந்து, ‘திறப்பு இதய அறுவைசிகிச்சை’ (Open Heart Surgery) செய்யும் முறையை நடைமுறைப் படுத்தினார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி இதயக் கோளாறுகளைச் சரிசெய்யவும் பழுதான இதய வால்வுகளை அகற்றிவிட்டு, செயற்கை வால்வுகளைப் பொருத்தவும்தான், இந்தப் புதிய இதய அறுவைசிகிச்சை முதலில் பயன்பட்டது. 1960-ம் ஆண்டில் ரெனே ஃபவலோரா (Rene Favaloro) எனும் அர்ஜென்டைனா மருத்துவர் முதன்முறையாக ‘பைபாஸ் அறுவைசிகிச்சை’யை, திறப்பு இதய அறுவைசிகிச்சை முறையில் மேற்கொண்டு வெற்றி கண்டார்.

மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!

இதயமாற்று அறுவைசிகிச்சை

1967-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3-ம் தேதி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அறுவைசிகிச்சையாளர் கிறிஸ்டியன் பர்னார்ட் (Christian Barnard) பெரியவர்களுக்கு முதன்முதலில் இதயமாற்று அறுவைசிகிச்சையை மேற்கொண்டார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில்,  குரூட் சர் மருத்துவமனையில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 55 வயது நிரம்பிய லூயிஸ் வாஸ்கன்ஸ்கி (Louis Washkansky) என்பவரின் பழுதான இதயத்தை அகற்றிவிட்டு, சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு, மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த 25 வயது வாலிபன் டெனிஸ் ஆன் டார்வல் (Denise Ann Darvall) என்பவனின் இதயத்தைப் பொருத்தி, சாதனை படைத்தார். அதற்குப் பிறகு உலக அளவில் இதயமாற்று அறுவைசிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டன. இந்தியாவில் புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) டாக்டர் வேணுகோபால், 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி முதன்முதலில் இதயமாற்று அறுவைசிகிச்சையைச் செய்து வெற்றிகண்டார்.

மாற்று இதயம் பெறப்படும் முறை

மாற்று இதயம் பொருத்துவதற்குத் தேவையான இதயத்தை மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரிடமிருந்து பெறுகின்றனர். பொதுவாக, 15 முதல் 35 வயது வரையுள்ள ஆண்களிடமும் 15 முதல் 40 வயது வரையுள்ள பெண்களிடமும் மாற்று இதயம் பெறப்படுகிறது. மாற்று இதயம் தேவைப்படும் நோயாளி, இதயத் தானம் செய்யும் நபர் ஆகிய இருவருக்கும் ரத்தம், தசை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாற்று இதயம் பொருத்தப்படுவதற்கு எல்லா வகையிலும் பொருத்தம் உள்ளதா என்பது உறுதியான பிறகு தானமாகத் தரப்படும் இதயத்தை அகற்றுகின்றனர்.

அந்த இதயத்தை 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில், உப்பு நீரில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். என்றாலும், எவ்வளவு விரைவில் அதை அடுத்தவருக்குப் பொருத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் பொருத்துவதற்குத்தான் மருத்துவர்கள் ஏற்பாடு செய்வார்கள்.

அறுவைசிகிச்சை – செயல்முறை

மாற்று இதயம் பெற்றுக்கொள்பவரின் மார்பின் நடு எலும்பை விலக்கி, நெஞ்சைத் திறப்பார் அறுவை மருத்துவர். பெருந்தமனியும் நுரையீரல் தமனியும் இடுக்கியால் குறுக்காக மூடப்பட்ட பின்னர், இதய மேலறைகள் வெட்டப்பட்டு, பழுதான இதயம் அகற்றப்படும். அந்த இடத்தில் மாற்று இதயம் வைக்கப்பட்டு, மேலறைகள் பொருத்தப்படும். நுரையீரல் தமனி நேரடியாக இணைக்கப்படும். பிறகு, பெருந்தமனியின் இடுக்கி அகற்றப்படும். இப்பொழுது ரத்த ஓட்டம் தொடங்கும். இது பொதுவான செயல்முறை.

இரண்டு இதயங்கள் ஏன்?

சிலருடைய இதயம் வான்கோழிமுட்டை அளவுக்குச் சிறியதாக இருக்கும். அல்லது அதன் செயல்திறன் மிகவும் பலவீனமாக இருக்கும். நோயாளிக்கு ‘நுரையீரல் உயர் ரத்த அழுத்தம்’ (Pulmonary Hypertension) இருக்கும். இம்மாதிரி ஆனவர்களுக்கு இதயத்தை அகற்றக் கூடாது. பழைய இதயம் மார்பின் இடது பக்கம் எப்போதும்போல் இருக்கும். புதிய இதயத்தை மார்பின் வலது பக்கத்தில் பொருத்துவார்கள்.

இவர்களின் பழுதான இதயத்தின் மேலறையுடன் புதிய இதயத்தின் மேலறையை இணைத்து, புதிய இதயத்தின் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனிகளையும் ஏற்கெனவே உள்ள இதயத்தின் ரத்தக் குழாய்களுடன் இணைத்துவிடுவார்கள். இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி துடிப்பதற்கு  பேஸ்மேக்கரைப்  பயன்படுத்துவார்கள். ஆக, இப்போது இரண்டு இதயங்களும் ஒருங்கிணைந்து இயங்கும். இதன் பலனாக, உடலுக்கு ரத்த ஓட்டம் சீராகக் கிடைத்து, நோயாளியின் உயிர் காக்கப்படும். இந்த அரிய இதய அறுவைசிகிச்சை (Heterotopic transplant) கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து இதயம் முழுவதும் செயல் இழந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த ஓர் ஆண் நோயாளிக்கு, மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு பெண் நோயாளியின் இதயத்தைப்பெற்று இந்தச் சிகிச்சையைச் செய்திருக்கின்றனர்.

இந்தப் புதிய அறுவைசிகிச்சை ‘ஓர் உடல், ஓர் உயிர், இரண்டு இதயங்களுடன் இந்தியாவில் செய்யப்பட்ட முதல் அறுவைசிகிச்சை’ என்ற பெயரைப் பெற்றுள்ளது.

(தேடுவோம்...)

மாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல்! ஓர் உயிர்! இரண்டு இதயங்கள்!

மாற்று இதயம் பொருத்துவதற்குத் தகுதி உடையவர்கள் யார்?

இதயம் செயலிழந்து, இதயத்தின் கீழ் அறை மிக அதிகமாக விரிவடைந்த நிலையில் உள்ளவர்கள், இதய வால்வுக் கோளாறுகளுடன் இதயத் தசை நோய் உடையவர்கள், காரணம் அறிய முடியாத இதய நோயால் உடனே மரணம் அடைய வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோர் மாற்று இதயம் பொருத்துவதற்குத் தகுதி உடையவர்கள்.