
உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0ஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்
சென்ற இதழில் தோள்பட்டை இடப்பெயர்வு பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் மணிக்கட்டு மூட்டுப் பிரச்னைகள், மற்றும் மணிக்கட்டைச்சுற்றி ஏற்படும் பிரச்னைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
ஆதியில் மனிதர்கள் கைகால்களைக் கொண்டு நடக்கப் பழகும்வரை மணிக்கட்டுகளின் வேலை நிலத்தைத் தாங்குவது மட்டுமே. ஆனால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இன்று மணிக்கட்டை நாம் உபயோகப்படுத்தும் விதங்கள் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்கின்றன.

இந்த மூட்டில் மேல் கீழ் அசைப்பது, பக்க வாட்டில் அசைப்பது மட்டுமல்லாமல் சுற்றும் அசைவுகளும் இருப்பது சிறப்பாகவுள்ளது. இந்த மணிக்கட்டு மூட்டு எந்த அளவுக்குச் சிறப்பானது என்றால், இதைப்போன்று ஒரு மாடல் அமைப்பைக்கூட மருத்துவ ஆராய்ச்சியாளர் களால் இன்று வரை தயாரிக்க முடியவில்லை. மணிக்கட்டு அசையக்கூடியதாக இல்லாமல் இருந்திருந்தால் கையின் உபயோகமே அர்த்தமில்லாமல் போயிருக்கும். கையைக் கொண்டு சாதத்தைப் பிசைந்து சாப்பிடும் சாதாரண வேலைக்கே மணிக்கட்டைச் சேர்ந்த 10 எலும்புகள் ஒருசேர வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இத்தனை அருமையான மணிக்கட்டு அமைப்பில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது Carpal Tunnel Syndrome எனப்படுவது.
‘சுருக் சுருக்’ என வலியை உண்டாக்கும் இந்தப் பிரச்னை ஏன் உண்டாகிறது?
Median Nerve எனப்படும் நரம்பு, மணிக்கட்டு மூட்டைக் கடந்து செல்லும்போது அழுத்தம் ஏற்படலாம். இந்த அழுத்தத்தினால் கட்டைவிரல், சுட்டுவிரல், மற்றும் நடுவிரல்களில் வலி மற்றும் ஊசி குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்படலாம். ஆரம்பத்தில் சிறிய பிரச்னை என்று இதை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் கைகளின் தசைகளில் பலவீனம் ஏற்படலாம்.

இந்த Carpal Tunnel Syndrome பிரச்னை சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். இன்றைய ஐடி தலைமுறை இளைஞர்களுக்கு மவுஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை அதிகம் உருவாகிறது. கருவுற்ற பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். Median Nerve எனப்படும் நரம்பில் ஏற்படும் அழுத்தத்தால் வலி, உணர்ச்சி குறைவு, மரத்துப்போதல் போன்றவை உண்டாகும்.
Carpal Tunnel Syndrome எனும் மணிக்கட்டுப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை நாடவேண்டும். இதற்கான சிறப்பு மருத்துவர் Nerve Conduction Test என்ற பரிசோதனையை மேற்கொள்வார். அதாவது டெஸ்டரை வைத்து மின்சாரத்தை ஆய்வு செய்வதைப்போல, மணிக்கட்டில் இருக்கும் நரம்புகளை ஆய்வு செய்து எங்கே சிக்கல் என்று அறிந்து சிகிச்சையை மேற்கொள்வார். Carpal Tunnel Syndrome பிரச்னை இருந்தால் ஆரம்பத்தில் Splint Treatment என்ற எளிய சிகிச்சையை ஆரம்பிக்கலாம். இரவில் மட்டும் வல்க்ரோ ஸ்டிக்கரை மணிக்கட்டைச் சுற்றி ஒட்டும் சிகிச்சை தான் இது
இதில் குணமடையவில்லை என்றால், மணிக்கட்டில் ஸ்டீராய்டு ஊசி போட்டுக் குணப்படுத்தலாம். அப்படியும் வலி இருந்தால், மணிக்கட்டில் மரத்துப்போகும் ஊசியைப் போட்டுச் சிறிய அளவிலான அறுவைசிகிச்சையை மேற்கொண்டு அங்குள்ள நரம்புகளைச் சீர் செய்வார்கள். இது அச்சப்படக்கூடிய அறுவை சிகிச்சை இல்லை. அரைநாளில் முடிந்து விடக்கூடியது. எனவே உங்கள் மணிக்கட்டில் ஏதேனும் வலியோ, மாறுதலோ இருந்தால் அலட்சியம் வேண்டாம். உடனே மருத்துவரைப் பார்க்கச் செல்லுங்கள்.
- மு.ஹரி காமராஜ்