மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

ஹெல்த்கு.கணேசன், பொதுநல மருத்துவர்

முன்பெல்லாம் மழைக்காலத் தொடக்கத்திலும் பனிப்பொழிவுக் காலத்திலும் பருவநிலை மாறும்போது மட்டும் தமிழகத்தில் அங்குமிங்குமாக டெங்கு காய்ச்சல் பரவுவது உண்டு. ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாகவும், சுத்தமும் சுகாதாரமும் கெட்டுவருகின்ற காரணத்தாலும், கொசுக்களை ஒழிக்க முடியாததாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் நிரந்தரமாகிவிட்டது.

கடந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் 2,000-க்கும் அதிகம். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை இது அதிகமாகத் தாக்குகிறது என்பதால், உயிர்ப்பலிகளைத் தடுக்க முடியாமல் தமிழகத்தின் சுகாதாரத் துறை திணறிவருகிறது. இந்தக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரம் மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் டெங்குவை ஜெயிக்க முடியும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

எது டெங்கு?

`டெங்கு’ (Dengue) காய்ச்சல் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருவது. இந்தக் கிருமிகளில் மொத்தம் நான்கு வகை உள்ளன. ஏதேனும் ஒரு வகை நம்மைத் தாக்கினால் போதும் , டெங்கு காய்ச்சல் வந்துவிடும். இப்போது பரவும் டெங்கு காய்ச்சல் 1-வது, 3-வது வகையைச் சேர்ந்தது. இது தண்ணீர், காற்று, இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை. கொசுக்களால் மட்டுமே பரவுகிறது.

‘ஏடிஸ் ஏஜிப்தி’  (Aedes  Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு வருகிறது. பொதுவாக, கொசுக்கள் என்பவை சாக்கடை, அசுத்தமான நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும்  தண்ணீர் போன்றவற்றில் வாழ்வது வழக்கம்.  ஆனால், டெங்கு கொசுக்களோ சுத்தமான  நீர்நிலைகளில் மட்டுமே வளரக் கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், டெங்கு கொசுக்களோ பகலில்தான் கடிக்கும். அதுவும் பெண் கொசுதான் கடிக்கும். காரணம், அது முட்டையிடுவதற்கு நம் ரத்தத்தில் உள்ள புரதம் தேவைப்படுகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

ஆபத்து எப்போது?

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும், ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்களுக்குத் தான்  ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கைகால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்.  சுவாசிக்க ச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ்  ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள்.  இவற்றின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.  இதற்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.

   என்னென்ன பரிசோதனைகள்?

இந்த நோயைத் தொடக்கத்திலேயே சரியாகக் கணிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆரம்பகட்ட அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதிசெய்ய இயலாது.

என்எஸ்1 ஆன்டிஜென் (Non – Structural 1 Protein அல்லது NS1 Antigen), டெங்கு ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி (Dengue IgM, IgG), எலிசா (Elisa), பிசிஆர் (PCR) ஆகிய பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உள்ளது தெரிய வரும்.

இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு வசதி இல்லாத ஊர்களில் குழந்தையின் ரத்தத்தில் தட்டணுக்களின் அளவைத் தெரிந்துகொண்டு இந்த நோயை மறைமுகமாகக் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக, ஒருவருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு இது 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். 

ரத்த அணுக்கள் பரிசோதனை    

இந்தப் பரிசோதனையில், டெங்கு நோயாளிக்கு ரத்த வெள்ளையணுக்கள் குறைவாக இருக்கும். அடுத்து, ஹெமட்டோகிரிட் (Haematocrit - HCT) எனும் பரிசோதனை முக்கியமானது. இது ரத்தச் சிவப்பணுக்களின் கன அளவு எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்பதைப் பரிசோதிப்பது. இதன் இயல்பான அளவு 36 - 38 சதவிகிதம். காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாள்களில் இந்த அளவு சரியாக இருக்கும். அதற்கடுத்த இரண்டு நாள்களில் இதன் அளவு அதிகரித்தால், டெங்கு என்று கணிக்கப்படும். சிகிச்சையைத் தொடங்குவதற்கும் நோய்க் கட்டுப்படுகிறதா என்று கணிப்பதற்கும் இது உதவுகிறது. எனவே, குறிப்பிட்ட இடை வெளிகளில்  இதை மறுபடியும் செய்துகொள்ள வேண்டும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!எலிசா ஐஜிஎம் (ELISA IgM) பரிசோதனை

இப்போது டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த இந்தப் பரிசோதனைதான் மேற்கொள்ளப்படுகிறது. இது ஐஜிஎம் எதிர் அணுக்களைக் (Antibodies) கண்டறியும் பரிசோதனை. அதிநவீனத் தொழில்நுட்பம்கொண்டது. காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாம் நாளில் இதைச் செய்துகொள்ள வேண்டும். நோயை 90 சதவிகிதம் உறுதிப்படுத்தும். நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதன்முறையாக இருந்தால் ஐஜிஎம் அளவு அதிகமாகவும்  மறுமுறை  தாக்குகிறது என்றால் இதன் அளவு குறைவாகவும் இருக்கும். இது ஒருமுறை ‘பாசிட்டிவ்’ என்று வந்துவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ‘பாசிட்டிவ்’ என்றுதான் காண்பிக்கும். எனவே, மீண்டும் டெங்கு வந்துவிட்டதோ எனப் பயப்பட வேண்டாம். இதற்கான செலவு சிறிது அதிகம். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படுகிறது.

நவீனப் பரிசோதனை கண்டுபிடிப்பு

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இந்த நோயைத் தாமதமாகக் கணிப்பதுதான். எனவே, இந்த நோயின் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியதுமே அவை டெங்கு காய்ச்சலுக்கு உரியவைதானா என உறுதியாகக் கண்டறிந்துவிட்டால், நோயைக் குணப்படுத்துவது எளிது. இந்த நோக்கத்தில் உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அதில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சமீபத்தில் ஹரியானாவில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் களும் நயோடாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் டெங்கு காய்ச்சலை உடனே உறுதிசெய்யப் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

சர்க்கரை நோயாளிகள் ரசாயனம்  தடவப்பட்ட ஒரு பட்டையை குளுக்கோமீட்டரில் உள்ளீடு செய்து ரத்தச் சர்க்கரையை அளந்து கொள்வது போலத்தான் இந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் உள்ள ‘உயிரி உணர்மானி’ (Biosensor) எனும் ஒரு பட்டையில் ஜிங்க் ஆக்சைடு, பெலாடியம்,  பிளாட்டினம் மற்றும் ஃபுளோரின் கலந்த  டின் ஆக்சைடு நானோ துகள்களைப் புதைத்துவைத்திருக்கின்றனர்.  இந்தப் பட்டையில் நோயாளியின் ரத்தத் துளிகளை வைத்து, இதனோடு இணைந்த கருவிக்குள் செலுத்தினால், டெங்கு வைரஸ் கிருமிகளின் டிஎன்ஏ (DNA) எனும் மரபணுச் சரடு உள்ளதா என்பதை  உடனே தெரிவித்துவிடுகிறது.  ஒன்றிரண்டு மரபணுச் சரடுகள் ரத்தத்தில் இருந்தால்கூட இது கண்டுபிடித்துவிடும். எனவே, இதன் முடிவுகள்  துல்லியமாக இருக்கும். டெங்குவை உடனே உறுதிசெய்யும் இந்தப் பரிசோதனையை மருத்துவ உலகம் பெரிதும் வரவேற்றுள்ளது.

மாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!என்னென்ன நன்மைகள்?

இந்தப் பரிசோதனை மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளிலேயே நோயைக் கணித்துவிட முடியும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளால் டெங்குவின் எல்லா வகைக் கிருமிகளையும் கண்டுபிடிக்க முடியாது. இந்தப் பரிசோதனையால், நான்கு வகை டெங்கு கிருமிகளையும் கண்டுபிடித்துவிடலாம்.  மிக எளிய பரிசோதனை இது. இதில் ஒருமுறை பயன்படுத்திய பட்டையைச் சோடியம் ஹைட்ராக்சைடு  திரவத்தில் ஐந்து நிமிடங்கள் முக்கி எடுத்துவிட்டால், மறுபடியும் பயன்படுத்த முடியும். இதனால் செலவு குறைவு. இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். முக்கியமாகக் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் பரவும்போது, இதை அங்கு எடுத்துச்சென்று டெங்குவைக் கணிப்பது மிக எளிது. இதன் பலனால், டெங்குவின் பாதிப்புகளை முன்பைவிடத் தீவிரமாகக் கட்டுப்படுத்த முடியும். இதை மக்களுக்குப் பயன்படுத்த மத்திய அரசின் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மத்தியச் சுகாதாரத் துறை.

(தேடுவோம்...)

அறிகுறிகள்

கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால், டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே.

திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும். தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப்போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன் விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.