மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 16

எலும்பின் கதை! - 16
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 16

உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0ஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் மணிக்கட்டு மூட்டுப் பிரச்னைகள், மணிக்கட்டைச் சுற்றி ஏற்படும் பிரச்னைகள் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் மணிக்கட்டுத் தேய்மானம்,  அதற்கான காரணங்கள்,  சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்வோம்.

மணிக்கட்டு,  மிக நுட்பமான சிறிய எலும்புகளைக் கொண்ட ஓர் அமைப்பு. மணிக்கட்டில் சின்னஞ்சிறிய 14 எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளால்தான் நம் தேவைக்கேற்ப அசையும் உறுப்பாக இருக்கிறது மணிக்கட்டு. ஆனால் அதுதான் பிரச்னைக்கும் அடிப்படை.  அதிகமாக  மணிக்கட்டை அசைப்பது மூட்டுகளில் தேய்மானத்தை உருவாக்கும். ஆனால், மணிக்கட்டுத் தேய்மானம் என்பது முன்னரே மணிக்கட்டில் ஏதாவது அடிபட்டு, அங்குள்ள எலும்புகள் ஒழுங்காக ஒன்று சேராமல் போவதால் அதிகமாக உண்டாகிறது. மூன்று வகைகளில் மணிக்கட்டுத் தேய்மானம் உண்டாகலாம்.

எலும்பின் கதை! - 16

* அடிபட்டு, மணிக்கட்டு எலும்புகள் சரியாக ஒன்று கூடாமல் போவதால் ஏற்படுவது. (Post-Traumatic Arthritis).

* வயதானதால் வரக்கூடிய மணிக்கட்டுத் தேய்மானம் (Osteo Traumatic Arthritis).

* `வாதம்’ எனப்படும் எல்லா மூட்டுகளையும் தாக்கும் (Traumatic Rheumatoid Arthritis) தேய்மானம்.

எலும்பின் கதை! - 16


மணிக்கட்டில் இருக்கும் `ஸ்காபாய்டு’ (Scaphoid) என்ற எலும்பு அடிபட்டு, உடைபட்டு ஒழுங்காக இணையாமல்  இருந்தால் மணிக்கட்டுத்  தேய்மானம் உண்டாகும். இந்த ஸ்காபாய்டு எலும்பு உடைந்த நிலையில், அந்த விரிசல் எக்ஸ் ரே படத்தில் சரியாகத் தெரியாமல் போகக்கூட வாய்ப்புண்டு. எனவே, இந்த எலும்பு மீண்டும் இணைக்கப்படும் போது, சரியாக இணையாவிட்டால் பிற்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும். மணிக்கட்டின் அசைவுகளுக்கும் பணிகளுக்கும் இந்த எலும்பு அவசியம். 20-30 வயதில் அடிபட்டு, மணிக்கட்டு பாதிப்பு அடைந்திருந்து, அது சரியாகப் பொருத்தப்படாவிட்டால் 50-60 வயதில் மணிக்கட்டுத் தேய்மானத்தை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். மணிக்கட்டில் திசுக்கள் கிழிவதாலும் ‘போஸ்ட் ட்ரமாட்டிக்’ தேய்மானம் ஏற்படலாம்.

வயதான காலத்தில், மணிக்கட்டு எலும்புகள் தேய்வதால் உண்டாகும் ‘ஆஸ்டியோ ட்ரமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்’ பெரும்பாலும் பரம்பரையாக வருவதுதான். வீட்டில் அம்மா, அப்பா, நெருங்கிய உறவினர்களுக்கு இந்தத் தேய்மானம் வந்திருந்தால், வயதான பிறகு அவர்களுக்கும் வரும்.

எலும்பின் கதை! - 16


`வாதம்’ எனப்படும் எல்லா மூட்டுகளையும் தாக்கும் தேய்மானம் வரும்போது,  உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மூட்டுகள் பாதிக்கப்படலாம். அப்போது அது மணிக்கட்டையும்  தாக்கி,  அதன்  செயல்பாடுகளை வலிமிக்கதாக மாற்றிவிடும். இப்படி மூன்றுவிதமாக உருவாகும் இந்த மணிக்கட்டுத் தேய்மானத்தில் முதலில் வலி உண்டாகும், பிறகு அது, மணிக்கட்டின் செயல்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கும். இப்படி மணிக்கட்டில் பாதிப்பு உருவானால், முதலில் எக்ஸ் ரே எடுத்து, அந்தத் தேய்மானத்தின் தன்மையை அறிந்துகொண்டு, பிறகு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒத்தடம், வலி நிவாரணி மருந்துகள் கொடுத்து ஓரளவு குணப்படுத்தலாம். அதன் பிறகு, `ஸ்ப்லின்ட் ட்ரீட்மென்ட்’ (Splint Treatment) (மணிக்கட்டைச் சுற்றி ஸ்டிக்கரை ஒட்டுதல்) மூலம் வலியைக் குறைக்கலாம்.

கைப்பயிற்சிகள், மருந்துகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்தலாம். மணிக்கட்டுத் தேய்மானத்துக்கு இரண்டு வகை அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. முதலில் மணிக்கட்டு எலும்புகளை இணைத்து அசையாமல் செய்துவிடுவது (Wrist Fusion). இப்படிச் செய்தால் அதன் பிறகு மணிக்கட்டை அசைக்க முடியாது. ஆனால், வலி இல்லாமல் இருக்கலாம். மற்றொன்று மாற்று மணிக் கட்டைச் செயற்கையாகப் பொருத்துவது (Wrist Replacement). இந்த முறையால் கடின உழைப்பு செய்ய முடியாமல் போய்விடும். மெள்ள அசைப்பது, எடை குறைந்த பொருள்களை மட்டுமே தூக்குவது என்பது மட்டுமே இந்தச் சிகிச்சைக்குப் பின்னர் செய்ய முடியும். அதனால்தான் முதியவர் களுக்கு மட்டுமே இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. யாருக்கு எந்த மாதிரியான மணிக்கட்டுத் தேய்மானம் வருகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

- மு.ஹரி காமராஜ்