
ஹெல்த்கு.கணேசன், பொதுநல மருத்துவர்
உடல் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அரை நூற்றாண்டுக்கு முன்புவரை மருத்துவர்களுக்கு அதிகம் உதவியது எக்ஸ்-ரே பரிசோதனை. அதைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு பரிசோதனைகள் வந்து சேர்ந்தன. இப்போதைய புதிய வரவு ‘பெட்’ ஸ்கேன் (PET Scan) பரிசோதனை. தற்போது புற்றுநோயைக் கண்டறிவதில் முன்னணியில் உள்ள பரிசோதனை இதுதான்.

`பெட்’ ஸ்கேன் என்றால் என்ன?
எக்ஸ் கதிர்வீச்சையும் காமா கதிர்வீச்சையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி, மனித உடலில் உள்ள செல்களின் அமைப்பையும் செயல்பாடுகளையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவிக்கு பெட் (PET) ஸ்கேன் என்று பெயர். ‘பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி’ (Positron Emission Tomography) எனும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் பெட் ஸ்கேன்.
அணுக்கதிர்வீச்சை மக்கள் நன்மைக்கும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்தக் கருவி ஓர் உதாரணம். தற்போதுள்ள ஸ்கேன் கருவி பரிசோதனைகளில் முதன்மையானதும் மிக நவீனமானதும் இதுதான்.
சிறப்புத் தன்மைகள் என்ன?
கடந்த பத்து ஆண்டுகளில் உடலில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் பரிசோதனை அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். உடலின் உள்ளே கட்டி இருப்பது அதில் தெரியும். ஆனால், அந்தக் கட்டி புற்றுநோய்க் கட்டியா, சாதாரணக் கட்டியா என்பது ஆரம்பத்தில் தெரியாது. ஊசிக்குழலை உடலுக்குள் செலுத்தி, பாதிக்கப்பட்ட உறுப்பிலிருந்து திசுக்களை உறிஞ்சி எடுத்து அல்லது அறுவைசிகிச்சை செய்து, சிறிய அளவில் திசுவை வெளியில் எடுத்து, ‘திசுப் பரிசோதனை’யில் (Biopsy) கண்டுபிடிப்பார்கள்.

அதில் காணப்படும் செல் வகையைப் பொறுத்து, அது புற்றுநோய்க் கட்டியா, புற்று இல்லாத கட்டியா எனக் கண்டறிவார்கள். இந்த அறுவை சிகிச்சையால் நோயாளிக்குச் சில நாள்களுக்கு வலி இருக்கும்.
இப்பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்ள ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்றிவிட்டது பெட் ஸ்கேன் பரிசோதனை.
சி.டி. ஸ்கேன் பரிசோதனை அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் உடல் உறுப்புகளின் அளவு, வடிவம், மாறுபட்ட அமைப்புகள், குறைபாடுகள் ஆகியவைதான் தெரியும். ஆனால், அந்த உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள இயலாது. பெட் ஸ்கேன் பரிசோதனையில் முக்கிய உடல் உறுப்புகளின் தோற்றத்தைக் காண்பதுடன், அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் காணமுடியும். அந்த உறுப்புகளில் கட்டி உள்ளதா, ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா, செல்களில் ஆக்ஸிஜன் கிரகிக்கப்படுகிறதா, குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று பயனடைகிறதா போன்ற பல விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். செல்களுக்குள் நிகழும் வேதிவினை களையும் இது தெரிவிப்பதால், அங்கு ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களையும் தெளிவாகக் காண்பித்துவிடுவது இதன் சிறப்புத் தன்மை.
செயல்படும் விதம்
இந்த ஸ்கேன் படம் எடுப்பதற்கு, ‘ரேடியோட்ரேசர்’ (Radiotracer) எனும் ‘அணுக்கதிர்வீச்சுப் பொருள்’ உதவுகிறது. ‘ஃபுளுரோ டிஆக்ஸி குளுக்கோஸ்’ (Fluoro Deoxy Glucose - FDG) எனும் மருந்து அணுக்கதிர்வீச்சுப் பொருளாக வேலை செய்கிறது. இதை ஸ்கேன் எடுக்க வேண்டியவரின் உடலுக்குள் சிரை ரத்தக்குழாய் வழியாகச் செலுத்துவார்கள். வழக்கமாக, நம் உடல் செல்கள் செயல்படுவதற்கு குளுக்கோஸ் தேவை. ஆகவே, இந்த குளுக்கோஸும் செல்களுக்குள் சென்றுவிடும். இது உடலுக்குள் செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் உடல் முழுவதும் சுற்றிவிடும். அதன்பின் ஸ்கேன் எடுப்பார்கள்.
செல்களுக்குள் நுழைந்த அணுக்கதிர்வீச்சுப் பொருளானது ‘பாசிட்ரான்’ கதிர்களை வெளியிடும். பொதுவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் வழக்கத்துக்கு மாறாக வேகமாகப் பிரிந்து, கட்டுப்பாடின்றி வளர்ந்து, திசுப்பெருக்கம் அடைந்திருக்கும். அந்த இடங்களில் குளுக்கோஸ் அதிக அளவில் பயன்பட்டிருக்கும். எனவே, அங்கு பாசிட்ரான் கதிர்கள் அதிக அளவில் வெளிப்படும். பெட் ஸ்கேன் கருவியில் உள்ள கேமரா இதைக் கண்டுபிடித்து, படம் எடுத்துக் கணினிக்கு அனுப்ப, அங்கு அவை முப்பரிமாணப் படங்களாக மாற்றப்பட்டுக் கணினித் திரையில் தெரியும்.
இது புற்றுநோய் பாதிப்புள்ள இடங்களை நெருப்புபோல் காண்பிக்கும். இதற்கு ‘அக்னிப் புள்ளிகள்’ (Hot Spots) என்று பெயர். புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பிறகு அதே இடங்களை மீண்டும் ஸ்கேன் எடுத்தால், சாதாரணமாகக் காண்பிக்கும். இதற்குக் ‘குளிர் புள்ளிகள்’ (Cold Spots) என்று பெயர்.

எந்த நோய்களைக் கணிக்கலாம்?
எல்லா வகைப் புற்றுநோய்களையும் மிக மிக ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க இந்த ஸ்கேன் பரிசோதனை பயன்படுகிறது.
உடலில் புற்றுநோய் பரவி உள்ளதா என்பதையும் புற்றுநோய் உடலில் பரவியுள்ள பகுதிகளையும் மிகத் துல்லியமாக இதில் காண முடிகிறது.
புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுப்பவர்களுக்கு, அது எந்த அளவுக்குப் பலன் கொடுத்துள்ளது என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
சிகிச்சைக்குப் பிறகு அதே இடத்தில் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதா அல்லது வேறு இடத்தில் வந்துள்ளதா என்பதை மிக ஆரம்பநிலையிலேயே தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
இதயத்தசைகளுக்கு ரத்தம் எப்படிச் செல்கிறது, அதில் ஏதேனும் தடை உள்ளதா, மாரடைப்புக்கு வாய்ப்புள்ளதா என்பதையும் இதில் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
மூளை மற்றும் நரம்புகள் செம்மையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் மூளையில் கட்டி உள்ளதா, பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதையும் இது தெரிவிக்கிறது.
எந்த நோய்கள் தெரியும்?
மாரடைப்பு உள்ளிட்ட இதயத்தமனி நோய்கள் (Coronary Artery Disease), இதய அறைகளின் செயல்பாடு, இதயத்தசைகளுக்குள் ரத்த ஓட்டம் போன்றவற்றை இதில் காணலாம். எலும்பு, கல்லீரல், நுரையீரல், தைராய்டு, பேராதைராய்டு, சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள், குறைபாடுகள், ரத்த ஓட்டம் முதலியவற்றை இதில் தெரிந்துகொள்ள முடியும்.
(தேடுவோம்...)
‘காமா’ கேமராவும் ‘ஸ்பெக்ட்’ ஸ்கேன் கருவியும்
‘பெட்’ ஸ்கேன் கருவியைத் தொடர்ந்து ‘ஸ்பெக்ட்’ ஸ்கேன் கருவி (Single Photon Emission Computerized Tomography Scan – SPECT Scan) கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் ‘பெட்’ ஸ்கேன் கருவியைப் போன்றதுதான். சிறிய வித்தியாசம் இதில் படம் எடுக்க ‘காமா கேமரா’ (Gamma Camera) உள்ளது. இது முப்பரிமாணப் படங்களை எடுத்துத் தருகிறது. இதன் பலனால், உடல் உறுப்புக் குறைபாடுகளையும் அவற்றால் ஏற்படும் நோய்களையும் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் செயல்பாடுகளையும் மிகமிகத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.
ஓர் அணுக்கதிர்வீச்சுப் பொருளை ரத்தக் குழாய் வழியாக நோயாளியின் உடலுக்குள் செலுத்தினால், அது காமா கதிர்களை வெளிவிடும். அவற்றை காமா கேமரா மூலம் படங்கள் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள் மருத்துவர்கள். பெட் ஸ்கேன் புற்றுநோயைக் கண்டுபிடிக்கிறது என்றால், ஸ்பெக்ட் ஸ்கேன் உடலில் ரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதைத் துல்லியமாகக் காண்பிக்கிறது.