மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை

கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்

வாழ்நாளில் ஒரு நாளாவது தலைவலியை அனுபவிக்காதவர்கள் நம்மிடம் உண்டா? இருக்க முடியாது. உடலில் தோன்றும் வலிகளிலேயே மிகவும் சாதாரணமாக ஏற்படக்கூடியது தலைவலிதான். தலைவலியில் சாதாரண தலைவலி, ஒற்றைத் தலைவலி, கொத்துத் தலைவலி, டென்ஷன் தலைவலி எனப் பலவகை உண்டு. இவற்றுள் ஒற்றைத் தலைவலியின் பாதிப்பு மிக அதிகம். அதிலும் ஆண்களைவிட பெண்களை இது பெரிதும் பாதிக்கிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை

எது ஒற்றைத் தலைவலி?

இளம் வயதில் ஏற்படும் தலைவலி இது. சிறுவர்களுக்கு 10 வயதிலும் சிறுமிகளுக்கு 15 வயதிலும் இது தொடங்குகிறது. ஆண்களுக்கு 50 வயதைக் கடந்ததும் இது ஆரம்பிக்கும். பெரும்பாலும் பரம்பரைத் தன்மை காரணமாக இது வருகிறது. தலையில் ஒரு பக்கத்திலோ இரண்டு பக்கங்களிலோ வலி வரலாம். சில மணி நேரம் முதல் 3 நாள்கள் வரை இது தொல்லை கொடுக்கலாம். வாரம் ஒருமுறை/இருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று முறைவைத்துக்கொண்டு வருவது ஒற்றைத் தலைவலி.

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை


அறிகுறிகள்

ஒற்றைத் தலைவலி  4 கட்டங்களாக வெளிப்படும்.

1. முதல் கட்டத்தில் தலைவலி வருவதற்கு முன்பு உள்ளுணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, லேசாகத் தூக்கம் வருவதுபோல்  இருக்கும்; கொட்டாவி வரும்; உடல் களைப்பாக இருக்கும்; காரணம் இல்லாமல் எரிச்சலும் கோபமும் வரும்; குமட்டலும் வாந்தியும் வரும்; ஏதாவது ஓர் உணவுப் பொருளுக்கு ஏங்குவதுபோல இருக்கும்; அடிக்கடி சிறுநீர் கழியும்; தண்ணீர் தாகம் எடுக்கும்.

2.
இரண்டாம் கட்டத்துக்கு ‘ஆரா’ என்று பெயர். இதில் கண்களுக்கு முன்னே ஒளி வட்டம் தோன்றுவது போலவும் அலை அலையாகத் தோன்றுவது போலவும் காணப்படும். சிலருக்குப் பார்வை குறைவது, நாவில் சுவை குறைவது, கைகால்களில் மதமதப்பு ஏற்படுவது, வித்தியாசமான வாசனை வருவது, காதில் வித்தியாசமான ஒலி கேட்பது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

3. மூன்றாம் கட்டத்தில் தலைவலி ஆரம்பிக்கும். இது தலையின் முன்பக்கத்தில் கண்ணுக்குப் பின்புறம், ஒரு பக்கமாகத் தோன்றி, மறுபக்கத்துக்குப் பரவும். ‘விண் விண்’ணென்று வலிக்கும். வாந்தி வரும். அருகில் யார் இருந்தாலும் அவர்களுடன் பேசுவதுகூட எரிச்சலாகவும் கோபம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆதலால், இருட்டான இடத்திற்குச்சென்று ஓய்வெடுக்கத் தோன்றும்.

4. இறுதிக் கட்டத்தில் தலைவலி குறைந்து, கழுத்துக்கு வலி பரவியிருக்கும். உடலிலிருந்து சக்தி முழுவதும் வெளியேறிவிட்டதுபோல் இருக்கும். சிந்திக்கும் ஆற்றல் குறைந்திருக்கும். மனக்குழப்பம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை

என்ன காரணம்?

 அதிக மன அழுத்தம், சரியான உறக்கம் இல்லாதது, வெயிலில் அதிகம் அலைவது, கண்ணில்படும் அதிக வெளிச்சம், காதில் கேட்கும் அதிக இரைச்சல், ஒழுங்காகச் சாப்பிடாமல் பசியுடன் வேலை பார்ப்பது போன்றவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகிற முக்கியமான காரணிகள். மேலும், சில உணவுப் பொருள்களும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகின்றன. உதாரணத்துக்கு சாக்லேட், தயிர், சீஸ் உள்ளிட்ட பால் பொருள்கள், முட்டை, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கைப் பழச்சாறுகள், சில வகை மீன்கள். ஓய்வில்லாத பிரயாணங்கள், மது அருந்துவதுபோன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி அதிகமாகலாம்.

சிலருக்குக் குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போதும் குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போதும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும். தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும்போதும் ஒற்றைத் தலைவலி வருவதை உணரலாம். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் இது அதிகம் தொல்லை கொடுப்பதுண்டு. வாசனைத் திரவியங்கள், பூ வாசனை, பெட்ரோல் மற்றும் டீசல் புகை இத்தலைவலியைத் தூண்டும். சில மருந்துகளின் பக்க விளைவாகவும் இது வரக்கூடும்.

என்ன சிகிச்சை?

தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது சிகிச்சையில் முதல் கட்டம். உதாரணமாக, சாக்லேட் சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி வருவது உறுதி என்றால், கட்டாயம் சாக்லேட்டைச் சாப்பிடக் கூடாது. மன அழுத்தம்தான் காரணம் என்றால், அதைக் குறைப்பதற்கான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒற்றைத் தலைவலியைப் போக்க, பீட்டா பிளாக்கர், வலிப்பு மருந்துகள், மன அழுத்தம் குறைக்கும் மருந்துகள், கால்சியம் சானல் பிளாக்கர், டிரிப்டான் மருந்துகள் (Triptans) எனப் பலதரப்பட்ட மருந்துகள் நடைமுறையில் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி முறையாகச் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இயன்முறை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரிலாக்சேஷன் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றப் பயிற்சிகள், மூளை – மனம் - பழக்கம் சார்ந்த  பயிற்சிகள் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தருவதோடு அதை வரவிடாமல் தடுக்கவும் உதவும்.

சாக்லேட், பால், பாலாடைக்கட்டி, ஈரல், இறைச்சி, சோயா சாஸ் ஆகிய உணவுகளில்  ‘டைரமின்’ எனும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது குடலில் ‘மோனோஅமைன் ஆக்ஸிடேஸ்’ எனும் என்சைமால் சிதைக்கப்பட வேண்டும். சிலருக்கு இந்த என்சைம் குறைவாகச் சுரக்கும். அப்போது டைரமின் முறையாகச் சிதைக்கப்படாமல் அப்படியே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இதன் விளைவாக, ரத்த அழுத்தம் அதிகரித்துக் கடுமையான தலைவலி ஏற்படும். இதுபோல், பலதரப்பட்ட சூப்புகளிலும் சாஸ்களிலும் மோனோசோடியம் க்ளுட்டமேட் எனும் உப்பு சேர்க்கப்படுகிறது. இது ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து தலைவலியை உண்டாக்கும்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் செரட்டோனின், சப்ஸ்டன்ஸ் பி (Substance B) எனும் வேதிப்பொருள்கள் சரியாகச் சுரக்காதது போன்றவையே ஒற்றைத் தலைவலிக்கு அடிப்படைக் காரணங்கள்.

நவீன சிகிச்சை என்ன?

ஒற்றைத் தலைவலியின் கொடுமையைப் போக்க மருத்துவத்துறைக்குள் புதிதாக நுழைந்துள்ளது, ‘நியூரோமாடுலேஷன் சிகிச்சை’. இந்தச் சிகிச்சையில் ‘நியூரோஸ்டிமுலேட்டர்’ (Neurostimulator) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இது பார்ப்பதற்கு ஒரு சின்ன தீப்பெட்டி அளவுக்கு இருக்கும். இதில் பேட்டரி, சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், பாதுகாப்பு உறைகளால் மூடப்பட்ட  நான்கு முனைகள்கொண்ட வயர்கள் ஆகியவை இருக்கும்.

நோயாளிக்கு வலதுபக்கக் கீழ் முதுகில் மரத்துப்போக மருந்து கொடுத்து, சிறிய அறுவைசிகிச்சை செய்து, ‘நியூரோஸ்டுமுலேட்டர்’ கருவியைப் பொருத்திவிடுகிறார்கள். இதன் வயர்களைத் தோலுக்கு அடியில் புதைத்துக் கழுத்தின் பின்புறம் கொண்டுசெல்கிறார்கள். வயரின் இரண்டு முனைகளைத் தலையின் பின்பக்கத்திலும் மற்ற இரண்டு முனைகளைத் தலையின் முன்பக்கத்தில் கண் இமைகளுக்குச் சற்று மேலேயும் பொருத்திவிடுகிறார்கள். இந்த வயர் முனைகள் தலையில் உள்ள நரம்புகளோடு தொடர்புகொண்டிருக்கும். இந்தக் கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியில் தெரியாது. இதனை இயக்க ஒரு ‘ரிமோட்’டைக் கொடுத்துவிடுகிறார்கள். நோயாளிக்கு ஒற்றைத் தலைவலி தொடங்கும்போது, ரிமோட்டை ‘ஆன்’ செய்தால், ‘நியூரோஸ்டுமுலேட்டர்’ வேலை செய்யத் தொடங்கிவிடும். தலைவலி படிப்படியாகக் குறைந்துவிடும். தலைவலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரம் ஒரு கூச்ச உணர்வு மட்டும் இருக்கும். அதுவும் சில நிமிடங்களில் குறைந்துவிடும்.

(தேடுவோம்...)

‘நியூராஸ்டுமுலேட்டர்’ எப்படித் தலைவலியைக் குறைக்கிறது?

மாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை



பொதுவாக, உடலில் எந்தப் பகுதியில் வலித்தாலும், அங்குள்ள நரம்புகள்தான் வலி உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்லும். அந்த நரம்புகளின் செயல்பாட்டை மின் அதிர்வுகள் மூலம் தற்காலிகமாக நிறுத்திவிட்டால், வலி எதுவும் தெரியாது. இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான், இந்தச் சிகிச்சை. நியூரோஸ்டுமுலேட்டர் கருவி மின் அதிர்வுகளை உருவாக்கித் தருகின்ற ஒரு ஜெனரேட்டர். இந்தக் கருவி வினாடிக்கு எவ்வளவு மின் அதிர்வுகளை உருவாக்க வேண்டும், எவ்வளவு அதிர்வுகளை எவ்வளவு நேரத்தில் தலைவலி பாதிப்புள்ள உடல் பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஓர் அளவு உள்ளது. இந்த அளவு நோயாளிக்கு நோயாளி வேறுபடும். நோயாளிக்குத் தேவையான அளவுக்கு மின் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ரிமோட் மூலம் ‘கன்ட்ரோல்’ செய்துகொள்ளலாம். தலைவலி வரும்போது ரிமோட்டை ‘ஆன்’ செய்ய வேண்டும். உடனே, நியூரோஸ்டிமுலேட்டர் மின் அதிர்வுகளை உருவாக்கி, நரம்புகளுக்கு அனுப்பும். இதனால் நரம்புகள் தற்காலிகமாகத் ‘தூங்கி’விடும். நோயாளிக்குத் தலைவலி என்கிற உணர்வே இருக்காது. இதுதான் இந்த நவீன சிகிச்சை செய்யும் மாயம்!