மாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்
மாறி வரும் வாழ்க்கைமுறை, மேற்கத்திய உணவுமுறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் பருமன், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகள், பரம்பரை எனப் பல்வேறு காரணங்களால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவை மனிதர்களைப் பாதிக்கின்றன. அந்த வரிசையில் புற்றுநோயும் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

எது புற்றுநோய்?
உடலில் செல்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், இயல்புநிலைக்கு மாறாக வளரும் நிலையைத்தான் ‘புற்றுநோய்’ (Cancer ) என்கிறோம். இது ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவில் உருவாகி, நாளடைவில் விபரீதமாக வளர்ச்சி அடைந்து, உயிருக்கே ஆபத்து தரும் அளவுக்குக் கொடூரமான நோயாக மாறுகிறது. ரத்தப் புற்றுநோய் தவிர மற்ற எல்லாப் புற்றுநோய்களும் கட்டிகளாகத் திரள்வதுதான் வழக்கம்.
ஒரு புற்றுக் கட்டியானது, தான் பாதித்த உறுப்பை மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளையும் கெடுத்து நாளடைவில் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதித்து உயிருக்கு ஆபத்தைத் தருகிறது. அதேவேளையில், புற்றுநோய் வந்த சில நாள்களில் உயிரைப் பறித்துவிடாது. வருடக் கணக்கில் வளர்ந்து, பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தி, நம்மை எச்சரித்து, அதன்பிறகுதான் ஆபத்தை ஏற்படுத்தும். அதற்குள் நாம் விழித்துக் கொண்டால் புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பித்து விடலாம்.

புகை – புற்றுநோய்க்குப் பகை
புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம் புகைப்பழக்கம். புகையிலையில் உள்ள பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன், தார், நிகோட்டின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, ஃபீனால் போன்ற நச்சுகள் உடல் செல்களைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருப்பதால் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது செல்கள் தங்கள் இயல்பான வளர்ச்சிப்படிகளைக் கடந்து, வரம்பு மீறிய வளர்ச்சிக்கு உள்ளாகிப் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
புகையிலை - மது
நம் உடலில் எந்த ஓர் அயல்பொருளும் வருடக்கணக்கில் நீடிக்குமானால் அது இருக்கும் உடற்பகுதியைப் பாதிக்கும். இது வெற்றிலை, பாக்கு, பான்மசாலா, குட்கா, புகையிலை போடுபவர்களுக்கும் மது அருந்துவோருக்கும் பொருந்தும். புகையிலையில் உள்ள நச்சுகள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய இடங்களிலும் மதுவிலுள்ள நச்சுகள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாய் போன்றவற்றிலும் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
மேற்கத்திய உணவுப்பழக்கம்

நெருப்பில் சுட்டுத் தயாரிக்கப்படும் உணவுகளையும் கொழுப்பு மிகுந்த, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளையும் அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இரைப்பை, குடல், மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் வருகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளைக் குறைந்த அளவில் சாப்பிடுபவர்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
செயற்கை நிறமூட்டிகள்
செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், இனிப்பூட்டிகள் சேர்க்கப்படும் உணவுகளும் ஆபத்தானவை. அவற்றில் கலந்துள்ள அனிலின், ஆக்சைம், அமைட் போன்ற ரசாயனங்கள் நம் மரபணுக்களின் பண்புகளைப் பாதித்துப் புற்றுநோய் உருவாவதை ஊக்கப்படுத்துகின்றன.
கதிர் வீச்சுப் பாதிப்பு
சூரிய ஒளியில் வரும் புற ஊதாக் கதிர்கள் உடலில் அதிக அளவில் படுவதால் தோலில் புற்றுநோய் வருவதுண்டு. எக்ஸ் கதிர்வீச்சு மற்றும் அணுக்கதிர் வீச்சுக் காரணமாக ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய் போன்றவை வருகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள்
காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.
தொழில்வழி வரும் பாதிப்பு
நிக்கல், ஈயம், பித்தளை, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் அமிலம், பெயின்ட், சாயப்பட்டறை, ரப்பர் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் பென்சீன், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற ரசாயனங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் தோல், நுரையீரல், குரல்வளை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் வருகிறது.
பொதுவான அறிகுறிகள்
உடலில் ஏற்படும் கட்டி, உடல் எடை குறைதல், தொடர் ரத்தச்சோகை, இடைவிடாத வயிற்றுப்போக்கு, சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல், நீண்ட நாள்கள் காயம் ஆறாமல் இருத்தல், மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுதல், நீண்ட கால அஜீரணம், உணவை விழுங்குவதில் சிரமம், ஏற்கெனவே உடலிலிருந்த கட்டி மருவாக மாறுவது அல்லது நிறத்தில் மாற்றமடைதல், பல வாரங்களுக்குத் தொடரும் இருமல், இருமலில் ரத்தம் வருதல், குரலில் மாற்றம் என்பன போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டியது அவசியம்.

என்னென்ன பரிசோதனைகள்?
புற்றுநோயைக் கண்டுபிடிக்க ஆரம்ப காலங்களில் எக்ஸ்-ரே பரிசோதனை உதவியாக இருந்தது. அதன்பிறகு, ‘பயாப்சி’ எனும் திசுப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், பெட்-சிடி ஸ்கேன், தைராய்டு ஸ்கேன், எண்டோஸ்கோபி எனப் பலதரப்பட்ட பரிசோதனைகள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவிகரமாக உள்ளன. பெண்களுக்கு பாப் ஸ்மியர், மேமோகிராம் ஆகிய பரிசோதனைகள் பயன்படுகின்றன. ரத்த டி.என்.ஏ பரிசோதனை மற்றும் ‘டியூமர் மார்க்கர்’ ரத்தப்பரிசோதனைகளும் உதவுகின்றன. இந்த வரிசையில் புற்றுநோயை உடனடியாகக் கண்டறிய இப்போது புதிதாக வந்துள்ளது, ‘மாஸ்பெக் பேனா’ (MasSpec Pen) எனும் புதிய கருவி.

‘மாஸ்பெக் பேனா’ என்றால் என்ன?
`மாஸ்பெக் பேனா’ என்ற இந்தக் கருவியானது, பார்ப்பதற்கு ஒரு பேனாவைப்போன்று காணப்படும். இது ‘மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்’ எனும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடலில் புற்றுநோய் உள்ளதாகச் சந்தேகப்படும் உறுப்பின் திசுவில் இந்தப் பேனாவின் முனையை வைத்தால், அது தண்ணீர் போன்ற திரவத்தைச் சில துளிகள் அந்தத் திசுவுக்குள் செலுத்தும். அதற்குப் பதிலாக, திசுவிலிருக்கும் திரவத்திலிருந்து சில துளிகளை உறிஞ்சிவிடும். பின்னர், அந்தத் துளிகள் ‘மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்’ கருவிக்கு அனுப்பப்படும். இதையடுத்து அக்கருவி திசுத் திரவத் துளியை ஆராயும். குறிப்பாக, அந்தத் திசுக்களில் புற்றுநோய்ச் செல்கள் இருக்கின்றனவா என்பதை அணுக்கரு அளவில் (Molecular Test) தீவிரமாக ஆராயும். புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று பத்தே நிமிடங்களில் தெரிவித்துவிடும். இது 96 சதவிகிதம் நம்பகமான பரிசோதனை என்று இதைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் உறுதி அளித்துள்ளனர்.
என்னென்ன நன்மைகள்?
உடலில் புற்றுநோய் பாதித்த உறுப்பிலிருந்து சிறு திசுவை அகற்றி, பயாப்சி எனும் திசு ஆய்வுப் பரிசோதனைமூலம் புற்றுநோய் உள்ளதைக் கணிப்பதுதான் இன்றைய நடைமுறை. இதற்குத் தகுதி வாய்ந்த, அனுபவம் மிகுந்த நோயியல் மருத்துவர்கள் (Pathologists) தேவை. பயாப்சி எடுப்பதற்கு ஒருமுறையும் அதில் புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டால் புற்றுநோயுள்ள உறுப்பை அகற்ற மீண்டும் ஒருமுறையும் அறுவைசிகிச்சை தேவைப்படும். பயாப்சி எடுத்தபிறகுப் பயனாளிக்குச் சில நாள்களுக்கு வலி ஏற்படுவது இயல்பு. சிலருக்கு அந்த இடத்தில் ரத்தம் கசியவும் புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வீக்கம் மற்றும் காய்ச்சலும்கூட வரலாம். இந்தப் பரிசோதனையின் முன்தயாரிப்புக்கு ரத்தப் பரிசோதனை தேவைப்படும். பயாப்சி முடிவு தெரிய சில நாள்களிலிருந்து சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற சிரமங்கள் எதுவும் இதில் இல்லை. பயனாளிக்கு இரண்டுமுறை அறுவைசிகிச்சை தேவையில்லை. முதன்முறையாக, ஓர் உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போதே இந்தப் பேனாவை அந்த உறுப்பில் வைத்தால் புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்று தெரிந்துவிடும். அப்படியிருந்தால் எதுவரை பாதிப்பு உள்ளது என்பதுபோன்ற பல விவரங்களை உடனடியாகத் தெரிவித்துவிடும். இதனால், அறுவை சிகிச்சையின் போது தேவையான அளவு மட்டும் புற்றுநோய் பாதித்துள்ள உறுப்பு உடனடியாக அகற்றப்படும். குறிப்பாக, பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி ஏற்படும்போது, புற்றுநோய் உள்ளது என்ற சந்தேகத்தின்பேரில் தேவையில்லாமல் சில நேரங்களில் மார்பகத்தை அகற்றிவிடுவார்கள். இம்மாதிரியான தவறுகள் ஏற்படுவதை இந்த நவீனத்தொழில் நுட்பப் பேனா தடுத்துவிடும்.
(தேடுவோம்...)