
உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்
கை விரல்கள்... நம் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தீர்மானிக்கும் உறுப்பு இவைதாம். அதிலும் கட்டை விரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உடம்பில் அதிகம் பயன்படுத்தப்படுபவை கை விரல்கள்தாம். கை விரல்களில் அடிக்கடி உருவாகும் பிரச்னைகள் இரண்டு. அவை ‘Trigger Finger’ மற்றும் ‘De Quervain Tendinosis’.
கை விரல்கள் சிறிய எலும்புகளால் ஆனவை. இந்த எலும்புகளைச் சுற்றிலும் மெல்லிய தசைப்படலம் சூழ்ந்துள்ளது. விரலின் மீதிருக்கும் நகங்கள் விரலின் உறுதிக்காக ஏற்படுத்தப்பட்டவை. ‘Trigger Finger’ என்பது, விரலின் எலும்புகள்மீதுள்ள தசைகள் உறைந்து கெட்டியாவதால் உண்டாகும் வலியைக் குறிப்பிடுவதாகும். விரல்களின் எலும்புமீது இருக்கும் தசைகள் கயிறு போன்று விரவி, தசை நார்களாக இணைந்துள்ளன. அந்தத் தசை நார்களை ‘Tendons’ எனவும் அவற்றின்மீது உறைபோன்று இருக்கும் பாதுகாப்புக் கவசத்தை ‘Tendons Sheath’ என்றும் குறிப்பிடுவார்கள்.

‘Tendons’ எனும் தசை நார்கள் இறுக்கமாகும்போது விரல்களின் செயல்கள் பாதிப்படைகின்றன. மேலும், மடக்கும்போது விரல்களில் கடுமையான வலி ஏற்படும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு மோதிர விரலில்தான் ஏற்படும். தசை நார்கள் ஓர் இடத்தில் இறுகி ‘Nodule’ என்ற தசை முண்டுகள் உருவாகின்றன. அதிக வலி, விரல் மற்றும் உள்ளங்கை சேரும் இடங்களில் வீக்கம், `டக் டக்’ என்ற சத்தம் போன்றவை இந்தப் பிரச்னையின் அறிகுறிகளாகும்.

ஆரம்பத்தில் வலி மட்டுமே இருக்கும். காலப்போக்கில் விரலையே மடக்க முடியாத நிலை வந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. 40 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு இந்த ‘Trigger Finger’ பிரச்னை அதிகம் உண்டாகிறது. சர்க்கரை நோய், வாதம் உள்ளவர்களுக்கும் இது வருகிறது. இந்தப் பிரச்னை இருக்கும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனைப்படி வலி நிவாரணிகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒத்தடம், பிசியோதெரபி பயிற்சிகளும் கொடுக்கலாம். அப்படியும் வலியும் வீக்கமும் தொடர்ந்தால் சிறிய அளவிலான அறுவைசிகிச்சை செய்து, Nodule பகுதியை வெட்டி எடுத்துவிடலாம். இந்த அறுவைசிகிச்சையைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம்.

‘Trigger Finger’ பிரச்னையைப் போலவே கட்டை விரலில் உருவாகும் பிரச்னை ‘De Quervain Tendinosis’. கட்டை விரலும் மணிக்கட்டும் சேரும் இடத்தில் உள்ள தசை நார்கள் பாதிப்படைந்து வீக்கமும் வலியும் ஏற்படும். கட்டை விரலை அதிகமாகப் பயன்படுத்தினால் ‘Tendons Sheath’ எனப்படும் தசைநார் பாதுகாப்பு உறை பாதிப்படைவதால் இந்தப் பிரச்னை உருவாகிறது. ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி வலி நிவாரணிகள், மாத்திரைகள், பிசியோதெரபி பயிற்சிகள் எடுத்தால் இதைக் குணப்படுத்தி விடலாம்.
‘Splint’ எனப்படும் ஒட்டும் பட்டையைக் கட்டி, அந்த இடத்தை அசையாமல் செய்து வலியைக் குறைக்கலாம். அப்படியும் வலி இருந்தால் லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து அந்த இடத்தில் சிறிய அறுவைசிகிச்சை செய்து இறுகிப்போன ‘Tendons Sheath’ பகுதியை வெட்டி எடுத்துவிடலாம். இந்தப் பிரச்னை பெரும்பாலும் அதிக நேரம் எழுதுபவர்கள், கீ போர்டு பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு வரலாம். வீக்கம், வலியை அதிகம் ஏற்படுத்தும் இந்த இரண்டு பிரச்னைகளும் எளிதில் குணப்படுத்தக் கூடியவைதான். ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதுதான் முக்கியம்.
- மு.ஹரி காமராஜ்