மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 19

எலும்பின் கதை! - 19
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 19

உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

டந்த இதழில் கை விரல்களில் ஏற்படும் பிரச்னைகள் பற்றிப் பார்த்தோம்.   அடுத்து, குழந்தைகளின் காலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னைகளைப் பார்க்கலாம். குழந்தைகள் நடக்கத் துவங்கும்போது அதிகம் செயலாற்றும் உறுப்புகளாகக் கால்களே இருக்கின்றன.  நடப்பது, ஓடுவது, உடலின் எடையைச் சுமப்பது எனக் கடினமான பணிகளைச் செய்வதால், கால் எலும்புகள் வலிமையாக இருப்பது அவசியம். தொடை எலும்பு ‘Femur’ என்றும் அதன் கீழே உள்ள கால் எலும்பு ‘Tibia’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எலும்புகள் ஒன்றுபோலவே சீராக வலிமையாக இருக்க வேண்டும். 

எலும்பின் கதை! - 19

ஆனால், பிறக்கும் குழந்தைகளில் ஐந்து சதவிகிதம் குழந்தைகளுக்கு இரு கால்களின் நீளமும் வேறுபட்டு ஒரு கால் உயரமாகவும், மற்றொரு கால் உயரம் குறைவாகவும் அமைகிறது.  இது  ‘Limb Length Discrepancy’ என்று அழைக்கப்படும்.  0.5 சென்டிமீட்டர் என்ற அளவுக்குள் இந்த வேறுபாடு இருக்கும்வரை பிரச்னை இல்லை. ஆனால், இரு கால்களின் வித்தியாசம் ஒரு சென்டிமீட்டரைத் தாண்டிச் செல்லும்போது நடக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. பொதுவாக,  எலும்புகள் வளர்ச்சிபெறும் பகுதி யானது ‘Epiphysis’ எனப்படுகிறது. அதன் கீழ்ப்பகுதி ‘Metaphysis’ எனப்படுகிறது. இந்த ‘Epiphysis’ என்ற எலும்பு வளர்ச்சிப் பகுதியில் பாதிப்பு உண்டானால் கால்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகி ‘Limb Length Discrepancy’ குறைபாடு  ஏற்படும். மேலும் குழந்தைப் பருவத்திலேயே கால் எலும்பு உடைபட்டு அது சரியாகப் பொருத்தப்படவில்லையென்றாலும் இதுபோன்ற பிரச்னை உண்டாகலாம். Epiphysis பகுதியில் அடிபட்டாலும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் ‘Epiphysis’ பகுதியில் நோய்த்தொற்று உண்டானாலும் கால்களின் அளவு வேறுபடும். சில அரிதான எலும்பு நோய்கள் உண்டானாலும் ‘Limb Length Discrepancy’ குறைபாடு உண்டாகலாம்.

எலும்பின் கதை! - 19


சில நேரங்களில் எந்தக் காரணமும் இல்லாமலே  இந்தக் குறைபாடு குழந்தைகளைப் பாதிக்கக்கூடும். ஆரம்பத்தில் இரு கால்களில் எந்த வித வித்தியாசமும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல பாதிப்பு பெரிதாகத் தெரியலாம். இதனால் ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டினைக் கண்டறிந்து சரி செய்வது நல்லது. பெரிதானால் குழந்தைகள் பெரிதும் கஷ்டப்படுவார்கள். கால்களின் உயர வித்தியாசத்தால் தாங்கித் தாங்கி நடப்பார்கள். இதனால் சீக்கிரமே களைப்பாகி விடுவார்கள். ஓடுவது, விளையாடுவது எல்லாமே சிரமமாகி விடும். முதுகுவலி உண்டாகும். கால்களின் வித்தியாசத்தால்,  ஒரு காலுக்கு மட்டும் அதிகச் சுமை ஏற்படும். அந்தக் காலில் கடுமையான மூட்டு வலி உண்டாகும். இதனால் குழந்தைகள் உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள்.

நடையில் வித்தியாசம் தெரியும்போதே எலும்பு சிகிச்சை நிபுணர்களை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தொடக்கத்தில் மருத்துவர்கள் முதுகு எலும்பைத்தான் ஆய்வு செய்வார்கள். முதுகெலும்பு வளைந்து இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கும் என்பதால் முதல் சோதனை அங்குதான் நடக்கும். அங்கே பிரச்னை இல்லை என்றால் ஒரு கால்மீது மற்றொரு காலை வைத்து மூட்டுகள் இணையாக ஒரே அளவில் உள்ளதா என்று பார்ப்பார்கள். இரு கால்களும் ஒரே அளவில் இல்லை என்று தெரியவந்தால் அடுத்து ‘Block test’ எனும் சோதனையைச் செய்வார்கள். இது மரத்துண்டுகளை, உயரம் குறைந்த காலின் கீழே வைத்துக் காலின் உயர வித்தியாசத்தை அறியும் சோதனை. இந்த வித்தியாசத்தைப் பொறுத்தே சிகிச்சை அமையும். நடையைப் பரிசோதிக்கும் முறையை ‘Gait Analysis’ என்பார்கள். அதன்படி வித்தியாசம் உணர்ந்து அடுத்தகட்டமாக ‘Scannogram’ என்ற எக்ஸ் ரே எடுப்பார்கள். இது இடுப்பிலிருந்து பாதம் வரை எடுக்கப்படும் ஒரு சிறப்பு எக்ஸ் ரே. 

குறைபாடு பெரிய அளவில் உள்ளது என்று தெரியவந்தால் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, குழந்தையின் வயது, பிரச்னை, குறைபாட்டுக்கான காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சையைத் தொடங்குவார்கள். தொடர்ச்சியான நடை கவனிப்பு, விசேஷக் காலணிகள் மூலம் கால்களின் வித்தியாசத்தை மாற்றி நடையைச் சரி செய்வது என முயற்சிப்பார்கள். ஆனால், கால்களின் வித்தியாசம் பெரிது என்றால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. இதில் நான்கு வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன. அதிக வளர்ச்சி கொண்ட காலில் அதன் வளர்ச்சியைக் குறைக்கும்  ‘Ephiphysiodesis’ எனும் முறை. இரண்டாவதாக, ஐந்து சென்டிமீட்டருக்கு மேலே கால்களின் வித்தியாசம் இருந்தால், உயரம் குறைந்த எலும்பை  நீளமாக்கும் ‘Ilizarov’ என்னும் அறுவைசிகிச்சை முறை. மூன்றாவதாக, உயரம் அதிகமான பெரிய எலும்பினைக் குறைத்துச் செய்யும் அறுவை சிகிச்சை முறை. நான்காவது, குறைந்த உயரம் உள்ள எலும்பின் உள்பகுதியில் ‘மேக்னெட்டிக் ராடு’ ஒன்று வைத்து அதை வெளியில் இருந்து கன்ட்ரோல் செய்து வளர்ச்சி பெற வைக்கும் ‘Internal Lengthening’ முறை. இவ்வாறு நான்கு முறைகளில் கால்களின்  ஏற்றத்தாழ்வு பிரச்னையைச் சரிசெய்து குழந்தைகளின் எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கலாம்.

பெற்றோர்களுக்குக் கூறுவது என்னவென்றால், ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சரி செய்வதுதான் எளிதானது,  பாதுகாப்பானது.

- மு.ஹரி காமராஜ்