ஹெல்த்
Published:Updated:

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

ஹெல்த்

யது வித்தியாசம் இன்றி எல்லோரையும் படுத்தி எடுக்கிறது மன அழுத்தம். இதன் விளைவு,  ரத்த அழுத்தம், சர்க்கரைக் குறைபாடெல்லாம் வெகு சீக்கிரமே  குடியேறி விடுகின்றன.  நோய் தரும் வலிகளும் இழப்புகளும் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத் திரும்பிருக்கின்றது. ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய யோகா பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு,  உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. 

யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம் நிலவுகிறது. ‘தியானம், சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் தான் கைவரும். நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எல்லாம் தியானம் செய்ய முடியாது’ என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம் உள்ளது. தியானத்தின் போது எண்ண ஓட்டங்களை நிறுத்தி மனதை அமைதிப்படுத்த வேண்டும். எதையும் நினைக்கக் கூடாது என்று கண்களை மூடினால் எண்ண அலைகள் கடலாய் மாறிக் கலங்கடிக்கும். ‘‘எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தெரியாமல்தான் மக்கள் இப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். ஆனால், தியானம் அவ்வளவு கடினம் இல்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, கார்ப்பரேட் யோகா பயிற்சியாளர் சூர்யா தின்கர்.

“தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம்” என்கிற சூர்யா, மனம் எனும் குதிரையை இழுத்துக் கட்டுவதற்கான மந்திரங்களை நமக்கு விளக்குகிறார்.

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

‘‘உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே  தியானத்தின் நோக்கம்.  இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும்.  ஒருவருக்கு  தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டி யதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.

மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். அந்தச் சூழலைத் தெளிவாகக் கையாள்வதுடன் மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன் போன்ற வார்த்தைகள் உங்களை விட்டு விலகி நிற்கும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது. இந்த ரசாயனங்கள் உங்களது ஹார்மோன் மாற்றங்களுக்குக் காரணம் ஆகின்றன. ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் நம் மனநிலையையும் உடல் நிலையையும் பாதிக்கின்றன. மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள் அடைய முடியும்.

பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது. ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும்.

மூச்சுப்பயிற்சியின்போது உள் இழுக்கும் காற்று, நம் உடலுக்குள் பயணிப்பதை உணர வேண்டும். அதேபோல் வெளிவிடும் காற்றின் பயணத்தையும் கவனிக்கும்போது மனமும் மூச்சும் ஒற்றைப்பாதையில் பயணிக்கத் துவங்கும். மனம் ஒரு விஷயத்தில் ஆழமாய் பயணிக்கும்போது எண்ண அலைகள் ஓய்வெடுக்கும். மனதில் நடக்கும் உரையாடல் மௌனமாகும். இப்படித் தான் எண்ண அலைகளைப் பேரமைதிக்கு இழுத்துச் செல்ல முடியும். தியானத்தில் அமர்ந்து பேரமைதி நிலையை அடைய முடியும்’’ என்கிறார் சூர்யா.

‘‘இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஏன் இவ்வளவு டென்ஷன் என உங்களிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள், விடை கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாத காரணத்தால்தான் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நம்மையும் சேர்த்துக் கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரும் நம்மைப்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மன மாசுக்களை நம் மூளையில் ஏற்றுவதால் ஏற்படும் அழுத்தம், நம்மைப் பாதி மனநோயாளியாக மாற்றி விடுகிறது. மற்ற உடல் நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வழிகளையும் இதுவே திறந்து வைக்கிறது. தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் சூர்யா.

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

எந்த வயதில் தியானம் செய்யலாம்?

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும்.

எந்த நேரம் நல்ல நேரம்?

அவரவருக்கு விருப்பமான நேரத்தைத் தியானத்துக்குத் தேர்வு செய்யலாம். பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை தியானத்துக்கு மிகவும் உகந்த நேரம். இந்த நேரத்தில் பறவைகள் கத்தும் ஒலிகள்கூட இருக்காது. மாலை மற்றும் இரவு நேரத்திலும் தியானம் செய்யலாம்.

எண்ணங்களை இழுத்துக்கட்டும் கயிறு எது?

நிறைய எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். கண்களை மூடி எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கும் போது மனதுக்குள் ஓயாமல் கேள்வி பதில் போன்ற உரையாடல் நிகழ்வதைக் கவனிக்கலாம். மூச்சுப் பயிற்சியின் போது மூச்சுக்காற்று உள்ளே செல்வதைக் கவனிக்கலாம். எண்ணங்கள் ஓயாதபோது மனதுக்குப் பிடித்த வார்த்தையைத் தொடர்ந்து உச்சரிப்பதன் வழியாக அதில் மனதைச் செலுத்தலாம். இசையைக் கேட்டபடியும் தியானம் செய்யலாம். மனதுக்குள், எண்ணங்கள் கேள்விகள் எழும்போது அதற்கு எதிர்வினை செய்யாமல், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், தியானம் செய்யும்போது மனம் அமைதியடையும். எண்ணங்களற்ற நிலையை அடையலாம். 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம் செய்யலாமா?

கண்டிப்பாக. அதுவும் சாத்தியமே. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பரபரப்பான துறைகளில் பணியாற்றுபவர்கள்  பயண நேரங்களைத் தியானம் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். கார் அல்லது டிரெயினில் பயணிக்கும் போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பார்ப்பதையும் பாடல் கேட்பதையுமே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  யுடியூபில் தியானம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.  தியானம் பற்றிய யுடியூப் சானலை ஆன் செய்து ஹெட்போன் மாட்டிக்கொண்டு அதில் சொல்வதைச் செய்தால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் பயணநேரம் வீணாவதால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்கலாம். தியானத்தின் வழியாக மன நிறைவும் மன அமைதியும் கிடைக்கும்.

உச்ச மனநிலையில் தியானம் செய்யலாமா?

அதிகபட்ச கோபம், டென்ஷன், சோகம் போன்ற உச்ச மனநிலைகளில் தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. கண்டிப்பாகச் செய்யலாம். அந்த உணர்வு நிலையின் தீவிரத்தை மெள்ள அமைதி நிலைக்குக் கொண்டு வர தியானமே சிறந்த வழி. நமது நன்மைக்காகவும் உச்ச மனநிலையில் இருந்து வெளியில் வரவும் இதைச் செய்யப் போகிறோம் என்ற மனநிலையுடன் கண்களை மூடி மூச்சுப் பயிற்சியைச் செய்தபடி தியானத்தைத் தொடருங்கள். மெள்ள மனம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும்.

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா?

மாதவிடாய்க் காலத்தில், தான் ஒதுக்கி வைக்கப்பட்டதாகப் பெண் நினைக்க வேண்டியதில்லை. அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் நடக்கும். மாதவிடாய் நேரத்தில் யோகாசனங்கள் செய்யக் கூடாது. ஆனால், மூச்சுப்பயிற்சி செய்யலாம். தியானம் செய்யும்போது மாதவிடாய்க் கால வலிகளை மனம் கவனிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியும். தியானம் செய்வதால் அந்த நேரச் சிரமங்களை மனம் ஏற்றுக்கொள்ளும். மாதவிடாய்க் காலத்தில் பெரிய அளவில் டென்ஷன் இன்றிக் கடக்க தியானம் பெண்களுக்கு உதவும்.

புதிதாக தியானம் செய்யத் தொடங்குபவர்கள் கவனிக்க:

உங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்யுங்கள். நேரம் இல்லை என்பவர்கள் வழக்கமாக எழும் நேரத்தைவிட அரைமணி நேரம் முன்னதாக எழ முயற்சிக்கலாம். காலைத் தியானத்தின் போது  தூக்கக் கலக்கத்தில் இருந்து வெளியில் வர எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம். பின் மூச்சுப்பயிற்சி, அடுத்து தியானம் என வழக்கப்படுத்திக்கொண்டால் எளிதாகும். தியானத்துக்கு முன் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது. உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்தே தியானத்தில் அமர வேண்டும்.

தியானத்துக்குப் பதிலாக...

தியானம் செய்யக்கூட நேரம் இல்லை என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்கள்கூட தன் எண்ணங்கள்மீது கவனம் செலுத்த வேண்டும். இரவில் படுக்கைக்குச் சென்றபின் தூங்கும் முன்பாக இதைச் செய்யலாம். நன்றாக உடலை நீட்டி இலகுவாகப் படுத்தபடிக் கண்களை மூடிக் கொள்ளவும். நான்கு முறை மூச்சை நன்றாக இழுத்துவிடவும். மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும்படியாக காலை முதல் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப்படுத்துங்கள். இரண்டாவதாக,  மற்றவர்கள் மனம் கஷ்டப்படும்படியாக என்னென்ன செய்தீர்கள் என்று வரிசைப் படுத்துங்கள். உங்களால் காயம்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதோடு அவர்கள் மகிழும்படியாக என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள். இதனை வழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் மனம் பாசிட்டிவ் எண்ணங்கள் நிரம்பியதாக மாறும். 

- யாழ் ஸ்ரீதேவி


படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

மாடல்: சூர்யா தின்கர்

தியானத்தில் எத்தனை வகை?  

தியானத்தை நாம் எந்த நோக்கத்துக்காகச் செய்கிறோம் என்பதில்தான் அது வேறுபடுகிறது. உடல் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்து மீட்க வெவ்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுக்குள் வைத்தல், மாதவிடாய்க் கோளாறுகள், ரத்த அழுத்தப் பிரச்னைக்குத் தீர்வு காணுதல், மன அழுத்தம் குறைத்தல் எனப் பல பயிற்சித் திட்டங்கள் உள்ளன. அவரவர் தேவைக்கு ஏற்ற உணவுத் திட்டம், யோகாசனப் பயிற்சிகள் மற்றும் தியான முறைகள் வழியாகத் தீர்வு காண முடியும். உங்களை வெறுப்பவர்களின் எண்ணிக்கை குறையும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். நீங்கள் மகிழ்ச்சியாக உணரும்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் அது தொற்றிக் கொள்ளும். அன்பு சூழ் உலகுக்கான அழகிய மந்திரமே தியானம்.