ஹெல்த்
Published:Updated:

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி
பிரீமியம் ஸ்டோரி
News
குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

அர்ஜுனன், சித்த மருத்துவர்ஹெல்த்

குப்பைமேனி... மிகுந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையான இது எல்லா நிலப்பரப்புகளிலும் தானாக வளரக்கூடியது. மருத்துவத் தன்மைகள் நிறைந்த இந்த மூலிகையின் சிறப்புகள் பற்றிச் சொல்கிறார் சித்த மருத்துவர் அர்ஜுனன்.

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

“சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பல்வேறு அரிய மூலிகைகளைக் கண்டெடுத்து, வகைப்படுத்தி நமது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வழிமுறைகளைச் சொல்லியிருக் கிறார்கள். அந்த வகையில் இந்தக் குப்பைமேனி மூலிகைச் செடி, பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குப்பைமேனிக்கு `பூனை வணங்கி’, `பூனை விரட்டி’, ‘மார்ஜால மோகினி’ உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.  இதன் தாவரவியல் பெயர் Acalypha indica.

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

நாம் உட்கொள்ளும் உணவு சில நேரங்களில் செரிமானம் ஆகாமல் பிரச்னைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழலில், குப்பைமேனியைக் கஷாயம் செய்து அருந்தினால் நிவாரணம் கிடைக்கும். குப்பைமேனி இலையைச் சாறெடுத்து,  சம அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்ச வேண்டும். நன்கு சுண்டியதும், அடியில் படியும் உப்பை நீக்கிவிட்டு,  தண்ணீரை மட்டும் வடிகட்டி மிளகு சேர்த்து லேசாகச் சூடாக்கினால் குப்பைமேனி கஷாயம் தயார். இதைக் காலை, மாலை அருந்தினால் செரிமானக் கோளாறு மற்றும் வாய்வுக் கோளாறுகள் சரியாகும். நெஞ்சுக்கோழை நீங்கும். இருமலும் கட்டுப்படும். விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தக் கஷாயம் நிவாரணம் தரும்.

குப்பைமேனி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு ரோமங்கள் உதிரும். முகத்தின் பொலிவு அதிகரிக்கும். இலையுடன் சிறிது மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்து உடலில் பூசிச் சிறிது நேரம் கழித்துக் குளித்தால் சொறி, சிரங்கு உள்ளிட்ட  சரும நோய்கள் விலகும். குப்பைமேனி இலையைச் சாறு பிழிந்து 200 மி.லி எடுத்து அதே அளவு நல்லெண்ணெய் சேர்த்துத் தைலம் போலக் காய்ச்சி வலியுள்ள இடங்களில் தேய்த்தால் குணம் கிடைக்கும்.

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

குப்பைமேனியைத் துவையல் செய்து சாப்பிடலாம். வாணலியில் எண்ணெய்விட்டுக் கடுகு சேர்த்துத் தாளித்து, அதில் நறுக்கிய குப்பைமேனி இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கி  சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் குப்பைமேனித் துவையல் தயார். இதைச் சாப்பிடுவதால் தீராத தலைவலி தீர்வதுடன் பக்கவாத நோய்களும் பறந்து போகும். மூல நோயாளிகள் இதைச் சாப்பிட்டுப் பலன் பெறலாம்.

குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்விட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் கட்டி வந்தால் படுக்கைப்புண்கள் ஆறும். இதன் வேரைத் தண்ணீர்விட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் பூச்சிகள் வெளியேறும். இலைச் சூரணத்தை (பொடி), சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு, கபம் விலகும்.

- எம். மரியபெல்சின்