ஹெல்த்
Published:Updated:

ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!

ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!

ஹெல்த்

கண்டு விரிந்து எந்த வித அசைவுமற்றுக் கிடக்கிறது கொரட்டூர் ஏரி. அதன் மேற்பரப்பைத் தொட்டு மேலெழும்பி வரும் காற்றை, ஜன்னலின் வழியே முகத்தில் உணர்ந்தபடி அமர்ந்திருக்கிறார் உதயகுமார், ஓவியர்.

ஏரியின் அருகே சென்று இன்னும் அதிகமாக அதன் குளுமையை உணர, அவருக்கு ஆசைதான். ஆனால், அது அவரைப் பொறுத்தவரை அவ்வளவு சாதாரண காரியமில்லை. காரணம், அவர் உடலை உருக்குலைத்துக்கொண்டிருக்கும் ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ (Spinal Muscular Atrophy) எனப்படும் தசைச்சிதைவு நோய்.

உதயகுமாருக்கு  42 வயது. இன்றும் அவரை சிறுகுழந்தைபோலத்தான் கவனித்துவருகிறார்கள் அம்மா சாந்தகுமாரியும் அப்பா ரங்கநாதனும்.

ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!

``பிறந்து 11-வது மாசத்துலேயே அவனால நிக்க முடியலை. அப்ப இருந்து ஆஸ்பத்திரிக்கு அலைய ஆரம்பிச்சாச்சு. போலியோதான் வந்துடுச்சோனு பயந்தோம். வளரும்போதும் உடலளவில் ரொம்ப பலவீனமாகவே இருந்தான். வளர வளர முதுகெலும்பும் கொஞ்சம் கொஞ்சமா வளைய ஆரம்பிச்சுது. அவனை நினைச்சு நாங்க அழாத நாள் கிடையாது. அழுது, அழுது கண்ணீரே வத்திப்போச்சு. ஸ்கூலில் சேர்த்துவிட்டோம், போயிட்டிருந்தான். அவன் அப்பாதான் சைக்கிளில் உட்கார வெச்சு ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவார். அவனால் அப்பவே சரியா நடக்க முடியாது, பெஞ்சுல உட்கார்ந்திருக்கும்போதே பேலன்ஸ் இல்லாமல் விழுந்திடுவான். அத்தனை கஷ்டங்களைத் தாங்கிக்கிட்டும் நல்லாத்தான் படிச்சான் என் புள்ள. நல்ல மார்க்கோடு பத்தாவது பாஸ் பண்ணினான். ஆனால், அதுக்குமேல ஸ்கூலுக்குப் போய் உட்கார்ந்து படிக்க, அவன் உடம்புல தெம்பு இல்லை. 20 வயசு இருக்கும்போது சாப்பிடுறதுலேயே அவனுக்குப் பிரச்னை வந்தது. அப்போதிருந்து சாதத்தை அரைச்சுத்தான் கொடுப்பேன். ஒரு கிளாஸ்  குடிக்கவே ஒருமணி நேரத்துக்கு மேலாகிடும். கொஞ்ச நாள் முன்னாடி அவனால் பேசவும் முடியாமப் போயிடுச்சு. இப்போ ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பேசுறான். மூச்சுக்குழாய்கள் அழுத்தப்படுறதால மூச்சு விடவே அவ்வளவு சிரமப்படுறான். முன்ன மாதிரிப் பேசுறதும் இல்லை. அவ்வளவு அறிவாப் பேசுவான். இத்தனைக்கும் அவன் வீட்டைவிட்டு வெளியே போனதே இல்லை. நல்லா டி.வி பார்ப்பான், புக்ஸ் படிப்பான்” என்று பேசிக்கொண்டிருந்த சாந்தகுமாரியை அவரது கண்ணீர் சில நொடி அமைதிப்படுத்தியது.

சாந்தகுமாரியின் துணையின்றி உதயகுமாரால் சாப்பிடவோ, பல் துலக்கவோ, காலைக் கடன்களைத் தீர்க்கவோ முடியாது. சாந்தகு மாரியின் உடலையும் முதுமை வதைத்துக் கொண்டிருக்கிறது. கூடவே மனதையும். ``அப்பல்லாம் குளிக்க, பல் துலக்க, பாத்ரூம் போக நானே அவனைத் தூக்கிட்டுப் போயிடுவேன். இப்ப என்னால முடியறதில்லை. எனக்கு உடல் நலம் சரியில்லை. அவன் படம் வரையும்போது கலர் கலக்கிக் கொடுக்கக்கூட என்னால முடியலை. வயசாகிட்டே போகுது. என்னைப் பார்த்துக்கவே இன்னொருத்தர் தேவைப்படுற நிலைமையில்தான் நான் இப்போ இருக்கேன்.  உதய் அப்பாவுக்கும் காது கேட்கிறதுல பிரச்னை இருக்கு” என்ற சாந்தகுமாரியிடம் உதயகுமார் ஓவியரான கதையைக் கேட்டோம்.

ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!

``சின்ன வயசுல இருந்தே ஸ்கெட்ச் பண்ணுவான். நானும் டிராயிங் கேம்ப்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போவேன். அப்படியே கொஞ்சம், கொஞ்சமா வரைஞ்சு, இப்போ அவன் ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கான். பிகாசோன்னுவான், வான்கோன்னுவான், பாயின்டிலிஸம்னுவான்... எல்லாம் அவனே கத்துக்கிட்டது. இதெல்லாம் எங்கேர்ந்து கத்துக்கிட்டான்னுதான் தெரியலை. என் புள்ளைக்கு இந்தப் பிரச்னை மட்டும் இல்லைனு வைங்க,  பெரியாளா வந்திருப்பான்.

நடிகர் சிவகுமார், உதய்யைப் பற்றிக் கேள்விப்பட்டு நேர்ல வந்து பார்த்து, அவன்கூட ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிட்டுப் போனார். அவர்தான் கண்காட்சி வைக்கிற ஐடியாவையே கொடுத்தது. ஓவியர் மணியன் செல்வம், லஷ்மி வெங்கட்ராமன், இயக்குநர் வசந்த்னு எத்தனையோ பேர் உதய்க்கு உதவியிருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தர் செய்த உதவிக்கும் கைமாறே கிடையாது. கண்காட்சிக்கு வர்றவங்க இவன் வரைஞ்ச ஓவியங்களையும் இவனையும் பார்த்துட்டு அவ்வளவு ஆச்சர்யப்படுவாங்க. மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா...

சின்ன வயசுல சங்குச்சக்கரம் கொளுத்தும்போது அவன் கையில் காயமாகிடுச்சு. வலது கையின் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் மட்டும்தான் அவனால் அசைக்கவே முடியும். அதை வெச்சுத்தான் படம் வரைஞ்சுட்டிருக்கான். சமீபகாலமா, அவன் உடம்பும் படம் வரையறதுக்கு ஒத்துழைக்க மாட்டேங்குது. வரையும்போது பேப்பரை நகர்த்தி வைக்கக்கூட அவனால முடியலை. அவன் அப்பாதான் ராப்பகலா முழிச்சிருந்து வரையறதுக்கு பேப்பரை நகர்த்தி ஹெல்ப் பண்ணிட்டிருக்கார். அவருக்கு வர்ற பென்ஷன் பணம்தான் எங்களுக்கு நிரந்தர வருமானம். பெயின்டிங் எப்போதாவது விற்கும். அதில் வரும் காசும் மருந்து, மாத்திரை செலவுக்கே சரியாகிடும்” என்றார்.

ஓவியங்களால் உயிர் பெறும் உதயகுமார் - தசைச்சிதைவு நோய்... தளராத நம்பிக்கை!

``அதிகமா குதிரைகளை வரையறாரே ஏன்?” என்ற கேள்வியைக் கேட்டவுடன் உதயகுமாரின் அறையிலிருந்து ஒரு குரல் வந்தது. உள்ளே சென்ற சாந்தகுமாரி, ``இதுக்கு அவன்தான் பதில் சொல்லணுமாம்’’ எனப் புன்னகைத்தார். உதய்யின் முன் அமர்ந்தோம்.

``எனக்கு கான்ஸ்டன்ட் ஸ்பீடில் மூவ் ஆகிற விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். குதிரை அப்படியான ஒண்ணுதான். அதுதான் நிறைய குதிரைகள் வரையறேன். அப்பப்போ தும்பியும் வரைவேன்” என்றார் உதய். பல ஸ்டைல்களில் பல குதிரைகளை வரைந்திருக்கிறார் உதய். ஒவ்வொரு குதிரையும் ஒவ்வொருவிதமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது. இந்த ஓவியங்களின் பின்னால் வெறும் இரு விரல்கள் மட்டுமே இருக்கின்றன என்பதை உங்களால் நம்பவே முடியாது. அதிலும் அவர் வரைந்த செம்பழுப்பு நிற உடலோடு, நெருப்பால் ஆன பிடரிமயிரைக்கொண்ட குதிரையை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.

``நீங்க என்னைக்காவது குதிரையில போயிருக்கீங்களா?’’ என உதயகுமாரிடம் கேட்டதும் ``ஹ்ம்மம்...’’ என்றார் உற்சாகமாக.

``என் குடும்ப நண்பர் ஒருத்தர் குதிரை வெச்சிருந்தார். மூணு வயசு இருக்கும்போது உதய்யை ஏத்திக்கிட்டு வெஸ்ட் மாம்பலத்தையே குதிரையில ரவுண்டு அடிச்சார்” என்றார் சாந்தகுமாரி.

``உங்கள் ஆசை என்ன?” என உதயகுமாரிடம் கேட்டதற்கு, ``பெரிய சைஸ் பெயின்டிங் ஒண்ணு வரையணும். அவ்வளவுதான்” என்கிறார்.

- ப.சூரியராஜ்

படங்கள்: ர.வருண்பிரசாத்