ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

கர்ப்பிணிப் பெண்கள் லெக்கின்ஸ் அணியலாமா? அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

- சிவரஞ்சனி, செங்கல்பட்டு

கன்சல்ட்டிங் ரூம்

கர்ப்பக்காலத்தில் ஒவ்வொரு மாதமும் வயிறு மற்றும் மார்பக அளவு அதிகரிக்கும் என்பதால், உடை, உள்ளாடையின் அளவையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற ஆடைகள் உடலுக்குத் தேவையான காற்றோட்டத்தைத் தராதவை என்பதால் கர்ப்பக் காலத்தில் அவற்றை ஒதுக்கிவிடலாம். இறுக்கமில்லாத மற்றும் காட்டன் ஆடைகளே கர்ப்பிணிகள் உடுத்தச் சிறந்தவை. கர்ப்பக்காலத்துக் கென்றே  கிடைக்கும் பிரத்யேக உடைகளையும் அணியலாம்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு 16 வயது. அவள் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறாள். என்னை அவளுக்குப் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவள் என்னிடம் அன்பாக நடந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

 -டி. பாலன், தர்மபுரி.

கன்சல்ட்டிங் ரூம்

இரண்டும் பெண் குழந்தைகளாகப் பிறந்துவிட்டது என்ற ஏக்கம், உங்களை அறியாமலேயே அவர்களை ஏதாவது ஒரு செயலின் மூலம் துன்புறுத்தி இருக்கலாம், மூத்த குழந்தை அழகாக இருப்பதால், இரண்டாவது குழந்தைக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு இருக்கலாம்,  அந்தப் பெண்ணை யாருடனாவது ஒப்பிட்டுப் பேசியிருக்கலாம், அதை ஏதாவது செயலிலும் காட்டியிருக்கலாம். அதனால்கூட அந்தப் பெண்ணுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு, வெறுப்பு உணர்ச்சி உருவாகியிருக்கலாம். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தவறான விஷயங்களைப் பார்த்துவிட்டு, அவற்றை அந்தப் பெண்ணும் பின்பற்றியிருக்கலாம். அது அவருடைய தவறு இல்லை; அவரது வயதின் ஆர்வக்கோளாறு. இப்படி ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம். அதனால் அவரின் அடிமனதில் உங்களைப் பற்றி வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். எதனால் அவர் மனதில் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சரியாகக் கண்டறிய, பெற்றோர் மட்டும் முதலில், அருகில் உள்ள மனநல மருத்துவரைச் சந்தித்து அவர் ஆலோசனைப்படிச் செயல்பட வேண்டும். தன் குழந்தைக்குத் தன்னைப் பிடிக்க வேண்டுமே என்று நீங்களாக ஏதாவது செய்ய முயன்றால், அது அவருக்கு உங்கள் மீதுள்ள வெறுப்பை அதிகரிக்கக்கூட வைத்துவிடும்.  எனவே, மனநல மருத்துவரிடம் சற்று மனம்விட்டு நீங்கள் பேச வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படிச் செயல்பட்டால், இந்தப் பிரச்னையிலிருந்து விரைவாக வெளியே வரலாம்.

எனக்கு 21 வயது. கடந்த இரண்டு வருடங்களாக வெளியில், கடைகளில் சாப்பிட்டு வந்தேன். இப்போது வீட்டுச் சாப்பாடு சாப்பிடுகிறேன். ஆனால், முன்பைவிட இப்போது மிகவும் மெலிந்தும் எனர்ஜி குறைந்துபோய் இருப்பதாகவும் உணர்கிறேன். இதற்கு என்ன காரணம்? இது, ஏதேனும் நோயின் அறிகுறியா?

-கே. காயத்ரி, கோவில்பட்டி.

கன்சல்ட்டிங் ரூம்

உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்தாலும், எனர்ஜி குறைவாக இருக்கும். வெளியில் கடைகளில் கிடைக்கும் உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருக்கும். மேலும், உணவு உண்ணும் நேரம், ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடுகிறார்கள், எந்த வகையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் போன்றவற்றைப் பொறுத்துதான் நம்முடைய ஆரோக்கியத்தை அளவிட முடியும். நீண்ட நாள்களாக ஒரே உணவு முறையைப் பின்பற்றிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென முற்றிலும் மாறுபட்ட உணவு முறைக்கு மாறும்போது உடல் ஆரோக்கியத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.  இது  சாதாரணமானதுதான். ஹோட்டல்களில் கிடைக்கும் உணவு வகைகள், அவற்றைத் தயாரிக்கும் விதம்,  உணவுத் தயாரிப்புக்கு உடன் சேர்க்கப்படும் கூட்டுப் பொருள்கள் போன்றவை வீட்டுச் சாப்பாட்டைவிட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மெலிவதற்கு இந்தக் கூட்டுப்பொருள்களும் ஒரு காரணம். இதைச் சீராக்க நம் உணவு முறையைச் சரிசெய்தாலே போதுமானது. சிறுதானிய உணவு வகைகளைக் காலை  உணவாகச் சாப்பிடலாம்.  காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்கள் அல்லது பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.  மாலையில் பழங்கள், காய்கறி சாலட், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். மேலும் நல்ல பசி, நிறைய சாப்பாடு... ஆனாலும் மெலிந்து காணப்படுவது சிலரின் இயல்பான தோற்றமாகக்கூட இருக்கலாம். அது ஜீன் தொடர்பானது. ஆனால், ஒருமாத காலத்துக்குள் பத்து சதவிகித அளவுக்கு எடை குறைந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.