மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 20

எலும்பின் கதை! - 20
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 20

உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

சென்ற இதழில் குழந்தைகளுக்கு மூட்டுகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் முதுகு வலி பற்றிப் பார்ப்போம்.

முதுகு வலி... இன்றைக்கு எல்லா வயதினருக்குமான பொதுப் பிரச்னையாகிவிட்டது. குனிய முடியாமல், நிமிர முடியாமல், படுத்து உறங்கக்கூட முடியாமல் அவதிப் படுபவர்கள் ஏராளம் பேர்.

முதுகு வலி ஏன் வருகிறது?

அதைத் தெரிந்துகொண்டாலே முதுகு வலியில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். முதுகுவலி பற்றி அறிய, முதலில் முதுகுத்தண்டின் அமைப்பு பற்றி அறிய வேண்டும். கழுத்தில் இருந்து இடுப்பின் கீழ்ப்பகுதி வரை, முதுகில் நேராக நடுப்பகுதியில் அமைந்து இருப்பதே முதுகுத்தண்டு. `வெர்டிப்ரா’ (vertebra) என்ற கடினமான சிறுசிறு எலும்பு களையும் அதனிடையே பஞ்சு போன்ற `டிஸ்க்’ என்ற அமைப்பையும் கொண்டதே இந்த முதுகுத்தண்டு.

எடையைத் தாங்கவும் வலிமை தரவும் `வெர்டிப்ரா’ என்ற கடினமான எலும்புப்பகுதி பயன்படுகிறது. அதே வேளையில் முதுகெலும்பு வளையவும் மடங்கவும் `டிஸ்க்’ பயன்படுகிறது. `வெர்டிப்ரா’ எலும்புகளின் இடையிடையே காணப்படும் `டிஸ்க்’-ன் வெளிப்பகுதி ரப்பரைப் போலவும் அதன் உள்பகுதி ஜெல்லியைப்போன்று கெட்டியான திரவ வடிவிலும் உள்ளது. இந்த ஜெல்லி போன்ற பகுதியை `நியூக்ளியஸ்’ (nucleus) என்று அழைப்பார்கள். குனிந்து நிமிரும்போது `டிஸ்க்’ பகுதியை இயக்கி எளிதாகச் செயலாற்ற வைப்பது இந்த ஜெல்லி போன்ற அமைப்புதான்.

எலும்பின் கதை! - 20

இந்த `டிஸ்க்’ பகுதியின் உட்புறத்தில் உள்ள `நியூக்ளியஸ்’ வெளியே வந்து அழுத்தம் கொடுத்து முதுகெலும்பின் நரம்புகளைத் தாக்கும்போதுதான் `டிஸ்க் ப்ரோலேப்ஸ்’ (disc prolapse) என்னும் பிரச்னை உண்டாகி முதுகு வலி ஏற்படுகிறது.

சாதாரணமாக, முதுகெலும்பில் உள்ள நரம்புகள் மிகவும் நுட்பமானவை. சிறிய அழுத்தங்களைக்கூட தாங்காதவை. சிறிய அளவில் அழுத்தம் ஏற்பட்டாலும் வலி, வீக்கம், தளர்ச்சி என்று உடல் முழுக்க வேதனையை உண்டாக்கக்கூடியவை. முதுகெலும்பில் `டிஸ்க்’ செயல்படும்போது இந்த நரம்புகளை அழுத்தினால் உடனடியாக முதுகு மற்றும் கால்களில் பயங்கரமான வலி உருவாகும். இந்த வலி `ஸியாடிகா’ (sciatica) என்று அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் முதுகு வலியாகத் தொடங்கி பின்னர் முதுகில் இருந்து கால் வரை ஒரு கம்பியை வைத்து இழுப்பதைப் போன்று வலி உண்டாகும். எந்த நரம்பு பாதிக்கப்பட்டதோ அந்த நரம்பின் நீளத்துக்கு வலி இருக்கும். இன்னும் நிலைமை மோசமானால், ஊசியை வைத்துக் குத்துவதைப் போல வலிக்கும். இந்த வலியின் உச்சமாக, நம்மையறியாமல் சிறுநீர் போகத் தொடங்கும். இதுபோன்ற நிலைமை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது சிக்கலான கட்டம் என்பதை உணர வேண்டும்.

எலும்பின் கதை! - 20


குழந்தைகள், இளம் வயதினருக்கு டிஸ்க்கில் உள்ள `நியூக்ளியஸ்’ சற்று நீர்மமாக இருப்பதால் இயக்கத்தின்போது அவை வீங்கி நரம்புகளைத் தாக்குவதில்லை. வயதாக ஆக, இந்த நீர்மம் இறுகிப்போவதால் குனியும்போதும் நிமிரும்போதும் `நியூக்ளியஸ்’ வெளியே வந்து அழுத்தம் தந்து நரம்புகளை அழுத்தி வலியை உண்டாக்குகிறது. மேலும் புகை பிடிப்பவர்கள், அதிக எடையை முறையின்றித் தூக்குபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இந்த முதுகு வலி அதிகம் உண்டாகிறது.

இந்தப் பிரச்னை வந்தவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 95 சதவிகிதம் பேருக்கு இதுபோன்ற வலியை அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்திவிட முடியும். ஆரம்பத்தில், இந்த வலியின் தன்மையை அறிந்து கொள்ள `எம்.ஆர்.ஐ ஸ்கேன்’ எடுக்க வேண்டும்.

வலி நிவாரணிகள், தசையை ரிலாக்ஸ் செய்யும் மருந்துகள் மற்றும் பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்த முதுகுவலியைச் சரி செய்யலாம். மேலும் எதிர்காலத்தில் இந்த வலி வராமல் இருக்க `Core stability exercises’ எனும் வயிறு மற்றும் முதுகுக்கான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதுபோன்ற சிகிச்சையால் ஒரு வாரத்திலேயே முதுகு வலியைக் குணப்படுத்தி விடலாம்.

அப்படியும் வலி குறையவில்லை என்றால், முதுகில் ஊசியைச் செலுத்தி வலியைக் குணப்படுத்தும் முறையும் உள்ளது. 98 சதவிகிதம் நோயாளிகள் இதுபோன்ற ஆரம்பக்கட்ட சிகிச்சையிலேயே குணமடைந்து விடுவார்கள். அதன்பிறகும் வலி தொடர்ந்தால் முதுகில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அறுவைசிகிச்சையில், பாதிக்கப்பட்ட டிஸ்க் பகுதியை நீக்கி விடுவார்கள். இதனால் வலி குறைந்துவிடும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிஸ்க்கில் பிரச்னை இருக்கிறது என்றால் `லம்பார் ஃப்யூஷன்’ (Lumbar fusion) அல்லது `இன்டர்பாடி ஃப்யூஷன்’ (Inter Body fusion) என்னும் சிகிச்சையில் பாதிக்கப்பட்ட `டிஸ்க்’குகளை இணைத்து, செயல்படாமல் செய்துவிடுவார்கள். இதனால் முதுகு வலி குறைந்துவிடும். அதே நேரம், அந்தப் பகுதியின் செயல்பாடும் குறைந்துவிடும். இது அநேகமாக வயதானவர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.

டூவீலர் ஓட்டும் பலருக்கும் முதுகு வலி வருகிறது. அதேபோல ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும் கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது... இது ஏன்? அதற்கான நிவாரணம் என்ன? அடுத்த இதழில் காண்போம்..!

- மு.ஹரி காமராஜ்