
கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்
இதயத்தைப் பாதிக்கும் முக்கிய நோய் மாரடைப்பு. இந்தியாவில் ஆண்டுதோறும், சுமார் இரண்டு லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் பேருக்குப் புதிதாக மாரடைப்பு ஏற்படுகிறது.
இன்றைய நவீன மருத்துவத்தில் மாரடைப்புக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மகத்தான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மாரடைப்புக்கு மருந்து சிகிச்சை
இதயத் தசைகளுக்கு ரத்தம் வழங்கும் இதயத் தமனிகள் சுருங்குவது, அவற்றில் கொழுப்பு அடைத்துக்கொள்வது, ரத்த உறைவு ஏற்படுவது என மூன்று வழிகளில் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பை அகற்றினால், மாரடைப்பு சரியாகும். இதுதான் மாரடைப்பு சிகிச்சையின் முக்கிய நோக்கம்.
இந்த அடைப்பை அகற்ற, ‘ஹெப்பாரின்’ (Heparin), ‘ஸ்ட்ரெப்டோகைனேஸ்’ (Streptokinase), ‘அல்டிபிளேஸ்’ (Alteplase), ‘டினெக்டிபிளேஸ்’ (Tenecteplase), ‘ரெட்டிபிளேஸ்’ (Reteplase) போன்ற ஊசி மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். மீண்டும் அங்கு ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்க ‘ஆஸ்பிரின்’, ‘குளோபிடோகிரில்’ (Clopidogrel), ‘பிரசுகிரில்’ (Prasugrel), ‘டிகாகிரிலர்’ (Ticagrelor) போன்ற மாத்திரைகளை நோயாளியின் தேவைக்கு ஏற்ப தருகிறார்கள்.
ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ‘ஸ்டேடின்’ (Statin) வகை மாத்திரைகளையும், ரத்த அழுத்தம் சரியாக ஏசிஇ தடுப்பான்கள் (ACE Inhibitors), பீட்டா தடுப்பான்கள் (Beta Blockers), கால்சியம் எதிர்ப்பிகள் (Calcium Antagonists) போன்ற மருந்துகளையும் நோயாளியின் தேவைக்குத் தகுந்தாற்போல் தருகிறார்கள்.ஆனால், இந்த மருந்து சிகிச்சை அனைவருக்கும் பொருத்தமானது என்று உறுதி கூற முடியாது. அப்படியான நிலைமை உள்ளவர்களுக்கு ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை’யை (Balloon Angioplasty Stent Treatment) மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மொத்தமுள்ள மூன்று இதயத் தமனிகளில் ஒன்று அல்லது இரண்டில் அடைப்பு காணப்பட்டால், ஸ்டென்ட் சிகிச்சையும் மூன்றிலும் அடைப்பு இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்கின்றனர்.
பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை

இந்தச் சிகிச்சையின்போது தொடையில் சிறிய துளை போட்டு, அங்குள்ள தொடைத் தமனி வழியாக ‘கெத்தீட்ட’ரை உள்ளே அனுப்பி, இதயத் தமனியில் அடைப்புள்ள இடத்தை அடைந்ததும், அதன் முனையில் உள்ள பலூன் அமைப்பை வீங்கச் செய்து, அங்குள்ள ரத்த உறைவை அல்லது கொழுப்பை நசுக்கி, அடைப்பைச் சரி செய்கின்றனர்.
இந்த பலூன் அமைப்பில் ‘ஸ்டென்ட்’ எனும் சிறு கருவி இருக்கும். இது பார்ப்பதற்குப் பால் பாயிண்ட் பேனா ஸ்பிரிங் போன்று இருக்கும். இதையும் இதயத்தமனிக்குள் செலுத்துகின்றனர். அங்கு ஸ்டென்ட் அமைப்பை விரித்து, நிலையாக நிறுத்திவிட்டு, பலூனைச் சுருக்கி வெளியே எடுத்துவிடுகின்றனர். இதனால், இதயத் தமனிக்கு ரத்தம் செல்வதில் இருந்த தடை நீங்கிவிடுகிறது. இந்த உலோக ஸ்டென்ட் ரத்தம் உறைவதற்கு வழி விட்டது. எனவே இவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் பெருகின. இதைத் தவிர்க்க, ஸ்டென்ட்டில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.
ஸ்டென்ட் வகைகள்
சாதாரண உலோக ஸ்டென்டுக்கு மாற்றாக, ‘மெடிக்கேட்டட் ஸ்டென்ட்’ (Medicated Stent) 2002ல் அறிமுகமானது. இதை ‘டிரக் எலூட்டட் ஸ்டென்ட்’ (Drug Eluted Stent) என்றும் அழைக்கின்றனர். இதில் ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து சேர்க்கப் பட்டிருக்கிறது. இது சிறிது சிறிதாக ரத்தத்தில் கரைந்து ரத்த உறைவைத் தடுப்பதால், மீண்டும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
தற்போது இதைவிடச் சிறந்ததாக ‘உயிரித்திசு உறிஞ்சும் தாங்குதள ஸ்டென்ட்’ (Bio absorbable scaffold stent) என ஒன்று வந்துள்ளது. இந்தப் புதிய ஸ்டென்ட் உயிரித் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இது கரையக்கூடியது. ரத்தக் குழாய் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் இது அங்கு இருக்கும். அதற்குப் பிறகு, சுமார் இரண்டு வருடங்களில் இது ரத்தக் குழாயில் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும். இதனால், ரத்தக் குழாயின் இயற்கைத் தன்மை பாதுகாக்கப்படுகிறது; இதைப் பயன்படுத்துவதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி இதயநோய் மாத்திரைகள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளவும், நிறுத்திவிடவும் வாய்ப்புண்டு.
மற்றொரு புதிய அறிமுகம், ‘உயிரித்திசு உறிஞ்சும் பாலிமர் மருந்தூட்ட ஸ்டென்ட்’ (Bioabsorbable Polymer Drug-Eluting Stent). இதன் தடிமன் முன்னதைவிடக் குறைவாக இருப்பதால், இதை இதயத் தமனிக்குள் செலுத்துவது மிக எளிதாக இருக்கிறது. இதன் மேற்புறத்தில் உள்ள பாலிமரில் உள்ள மருந்து எளிதில் கரைந்து, இதயத் தமனியில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவைக் கரைத்துவிடுகிறது. மீண்டும் ரத்தம் உறையாமல் தடுத்துவிடுகிறது.

ஸ்டென்ட்டைப் பொருத்த உதவும் நவீனத் தொழில்நுட்பங்கள்
ஃபிராக்ஷனல் ஃபுளோ ரிசெர்வ் டெக்னிக் (Fractional Flow Reserve Technique)
இதில், ஓர் உணர்மானியை கெத்தீட்டரின் முனையில் பொருத்தி, இதயத் தமனிக்குள் அனுப்பி, அங்குள்ள அடைப்பின் தன்மை, ரத்த அழுத்த அளவு போன்றவற்றைக் கண்டுபிடிக்கலாம். ஸ்டென்ட் தேவையா, இல்லையா என்பதை அறியமுடியும். தேவையில்லாமல் ஸ்டென்ட் பொருத்தப்படுவதையும் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதையும் தவிர்க்கலாம்.
ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி (Optical Coherence Tomography)
இதில் உள்ள கேமரா அடைப்புள்ள ரத்தக் குழாயின் உட்பகுதியை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. இதன் பலனாக, அடைப்பு ஏற்பட்டுள்ள ரத்தக் குழாயின் தன்மையையும், அடைப்பின் நீளம், அகலத்தையும் அறியலாம். இவற்றைக் கொண்டு ஸ்டென்டை எந்த இடத்தில், எப்படிப் பொருத்த வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு சிகிச்சை தர முடிகிறது.
அல்ட்ரா சவுண்டு பளிங்குப் படிகம் (Ultrasound Crystal)
அடுத்து, கெத்தீட்டரின் முனையில் அல்ட்ரா சவுண்டு பளிங்குப் படிகத்தைப் (Ultrasound crystal) பொருத்தி, அதை உள்ளே அனுப்பிப் படம் எடுத்துப் பார்த்தால், அங்கு பொருத்த வேண்டிய ஸ்டென்டின் சரியான அளவு தெரிந்துவிடுகிறது. அதன்படி மிகச் சரியான அளவில் ஸ்டென்டைப் பொருத்த முடிகிறது.
ரோட்டாபிலேட்டர் (Rotablator) கருவி
சிலருக்கு இதயத் தமனியில் கால்சியம் படிந்து கடினப்பட்டிருக்கும். அந்தப் படிகங்களை எளிதில் அகற்ற முடியாது. அப்படியானவர்களுக்கு உதவ வந்துள்ளது இந்தப் புதிய தொழில்நுட்பம். இதில், ‘ரோட்டாப்லேட்டர்’ எனும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கெத்தீட்டரை ரத்தக் குழாய்க்குள் அனுப்புகின்றனர். இதன் நுனியில் வைரத்தால் ஆன சிறு ஊசி உள்ளது. இது, அடைப்புள்ள இடத்தில், மிக்ஸி அச்சு சுழல்வதுபோல் சுழன்று, அங்குள்ள ரத்த உறைவுக் கட்டியைக் கரைத்து, ரத்தக் குழாயைச் சுத்தம் செய்து, ஸ்டென்ட் மிகச் சரியாக உட்கார வழி செய்கிறது. தரையைச் சுத்தப்படுத்தி, குழி வெட்டி, பதப்படுத்தி, மரக்கன்று நடுவதுபோலத்தான் இது.
(தேடுவோம்...)