ஹெல்த்
Published:Updated:

தூங்க மறந்தால் சிரிக்க மறப்பீர்கள்

தூங்க மறந்தால் சிரிக்க மறப்பீர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தூங்க மறந்தால் சிரிக்க மறப்பீர்கள்

ஹெல்த்

தொடர்ந்து இரவில் ஆறுமணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குவது, நம் உடலின் பல செயல்பாடுகளுக்குச் சாவு மணி அடிப்பதற்குச் சமம். நீங்கள் சரியாகத் தூங்கவில்லையென்றால், உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? இங்கே சில பாதிப்புகளின் பட்டியல்...

தூங்க மறந்தால் சிரிக்க மறப்பீர்கள்

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே முதுமை!

குறைவாகத் தூங்குபவர்களின் சருமம், விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. ஆழ்ந்த உறக்கத்தின்போது சிதைந்த செல்கள் பழுதுபார்க்கப்பட்டு, சரிசெய்யப்படுகின்றன; குறைவாகத் தூங்குபவர்களுக்கு உடலின் நெகிழ்தன்மை குறையத் தொடங்கும், நாவறட்சி ஏற்படும், சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகும்.

சிரிக்க மறக்கும் உதடுகள்!

`போதுமான உறக்கமின்மை நம் வாய்ப்பகுதியைப் பாதித்து, அதற்கு ஒரு சோகத் தன்மையைக் கொண்டு வந்துவிடும்’ என்கிறது ஸ்டாக்ஹோமில் நடந்த ஓர் ஆய்வு. அதேபோல நாம் பாசிட்டிவான உணர்வுகளுடன் இருந்தாலும்கூட, நம் முகம் அவற்றை வெளிப்படுத்தாது என்கின்றன வேறு சில ஆய்வு முடிவுகள்.

உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து வேலை செய்ய முடியாத நிலை!


கைகளும் கண்களும் ஒத்துழைப்பது பாதிக்கப்படும். அதாவது, நாள் முழுக்க உங்கள் வழியில் போகும் உங்கள் இயல்பான செயல்திறனுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். பல விஷயங்கள் இயல்புக்கு மாறாக மெதுவாக நடப்பதை நீங்களே உணர்வீர்கள். இந்த நிலையில் வாகனம் ஓட்டுவது மிக அபாயகரமானது.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்!

நீங்கள் உறங்கும்போதுதான் உங்கள் உடல், தொற்றுகளை எதிர்த்துப் போராடும் பொருள்களை (Substances) உற்பத்தி செய்யும். உதாரணமாக மற்றவர்களைவிட, ஏழுமணி நேரத்து க்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு சளி பிடிக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

உடல் எடை அதிகரிக்கும்!   

 அதிக நாள்கள் தூக்கமின்றி இருந்தால் உங்களின் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் 15 சதவிகிதம் அதிகரிக்கும். குறைவாகத் தூங்குவது லெப்டின் ஹார்மோன்  (Leptin) அளவைக் குறைக்கும்; அதிகமாகச் சாப்பிடுவது, பசியைத் தூண்டும் கிரெலின் (Ghrelin) ஹார்மோன் அதிகரிப்பது இதன் அறிகுறி. ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாக உறங்கும் பெண்கள், அடுத்த நாளுக்கான 329 கலோரி உணவை அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

தூங்க மறந்தால் சிரிக்க மறப்பீர்கள்

சருமத்தில் கட்டி, வெடிப்புகள்!

குறைவான தூக்கம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் (Cortisol) ஹார்மோனோடு இணைந்து உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக முகப்பரு, சோரியாசிஸ், சரும அழற்சி, தடிப்பு போன்றவைகூட ஏற்படலாம்.

நினைவாற்றல் குறைதல்!


உறங்கும்போதுதான் மூளை செல்களுக்கு இடையிலான பாதைகள் சீராக்கப்படும். போதுமான தூக்கம் இல்லையென்றால், உஷார்நிலையில் இருக்கும் உங்கள் தன்மையும், கவனிக்கும் திறனும் 32 சதவிகிதம் வரை குறையலாம்.

இதயக் கோளாறுகள் ஏற்படலாம்!


நீண்டகாலமாகத் தூக்கம் இல்லாமல் இருப்பதற்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் அழற்சிக்கும் தொடர்பு உண்டு. இது இன்னும் நீண்டகாலத்துக்குத் தொடருமானால், இதய நோயால் உயிரிழக்கும் அபாயத்தை 48 சதவிகிதம் வரை அதிகரிக்கும்.

சர்க்கரைக் குறைபாடு அபாயத்தை அதிகரிக்கும்!

போதுமான தூக்கமின்மை, உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையைக்கூட பாதிக்கும். இதனால் டைப் 2 சர்க்கரைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

- பாலு சத்யா