ஹெல்த்
Published:Updated:

மருத்துவ டாட்டூ தெரியுமா?

மருத்துவ டாட்டூ தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ டாட்டூ தெரியுமா?

ஷர்மதா, சரும மருத்துவர்ஹெல்த்

ந்த 24 வயது இளைஞன் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்பியதில்லை. அமைதியானவன். அகவயத் தன்மை (Introvert) கொண்டவன். ஒருநாள் அவனும் ஒரு டாட்டூ போட்டுக்கொண்டான். ஆனால், அதன்மூலம் அவன் இந்த உலகிற்கு எதுவும் கூறிவிடவில்லை. டாட்டூகளில் எப்போதும் தெறிக்கும் அரசியல் சாடல்கள், உத்வேகமூட்டும் உறுதி மொழிகள், கலை நயத்துடன் உடலை அலங்கரிக்கும் வடிவங்கள் என எதுவும் இல்லை. வெறும் கை விரல் நுனியில் தெரிந்தும் தெரியாமல் ஒழுங்கற்ற வடிவிலான டாட்டூ. அது டாட்டூ என்பதைப் புரிந்துகொள்ளவே சில நேரம் தேவைப்படும். கிட்டத்தட்ட அந்த இளைஞனின் உடல் நிறத்தோடு பொருந்திப்போய், தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் இந்த டாட்டூ எதற்கு? டாட்டூ என்றால் வெளியே தெரிய வேண்டும், புரிய வேண்டும் அல்லவா? ஆனால், இதற்கு அந்த விதிமுறைகள் எதுவும் தேவையில்லை. இதன் பெயர் மெடிக்கல் டாட்டூ.  மருத்துவ முத்தம் மாதிரி இது மருத்துவ டாட்டூ.

சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், நிற வேறுபாடுகள், புருவத்தில், தாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி உதிர்ந்து புழுவெட்டாக, சொட்டையாகத் தெரிவது அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் தழும்புகள் போன்றவை எப்போதும் தொல்லை கொடுக்கும் பிரச்னைகள்தான். இதனால் சிலர் வெளியே வந்து மற்ற மனிதர்களுடன் பேசவே தயங்குவார்கள். இவர்களின் இந்தச் சங்கடங்களுக்கான தீர்வுதான் இந்த மெடிக்கல் டாட்டூ!

மருத்துவ டாட்டூ தெரியுமா?

அது என்ன மெடிக்கல் டாட்டூ?

மெடிக்கல் டாட்டூ என்பது ஒருவித மேக்கப் போன்றதுதான். தொற்று, சருமம் நிறம் மாறுதல், தீப்புண் தழும்புகள் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துச் சரி செய்வார்கள். க்ரீம் தொடங்கி பலவகை சிகிச்சைகள் அளிக்கப்படும். பலருக்கு இதிலேயே பிரச்னை முழுவதும் சரியாகி விடும். வெகு சிலருக்கு மட்டும், ஒரு சில இடங்களில் நிறம் இயல்பு நிலைக்குத் திரும்பாது. அவர்களுக்கானவைதான் இந்த மெடிக்கல் டாட்டூஸ். இதனால் சருமத்தில் இருக்கும் நிறப் பிரச்னைகள் வெளியே தெரியாது. இந்த டாட்டூக்களுக்கு மருத்துவக் குணங்கள் என்று எதுவும் கிடையாது. சருமம் நிறம் மாறியதை மறைக்க மட்டுமே இவை பயன்படும்.

மெடிக்கல் டாட்டூவில் என்ன ஸ்பெஷல்?

மருத்துவ டாட்டூ தெரியுமா?


இதற்கென்று தனியாக ஒவ்வாமை ஏற்படுத்தாத மையைப் (Non-allergic Ink) பயன்படுத்துவார்கள். வழக்கமாக டாட்டூ போடப்பயன்படுத்தும் மையை விட இது சற்றே விலை அதிகம். விதவிதமான வண்ணங்களில் இருக்கும் மைகளை ஒன்று சேர்த்து தோலின் நிறம் வரவழைக்கப்படும். இந்த வகை மையை முழுக்க முழுக்கச் சரும மருத்துவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். இந்த மெடிக்கல் டாட்டூக்களை மருத்துவமனைகள் தவிர வேறெங்கும் போட்டுக்கொள்ள முடியாது.  எந்த அளவிற்கு இந்த மையைச் சருமத்தின் உள்ளே செலுத்த வேண்டும் என்ற விவரங்கள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரண டாட்டூக்களைப் போல் இவற்றைப் போட்டுவிட முடியாது. 16 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இந்த மெடிக்கல் டாட்டூ போடப்படும். அந்த வயதில்தான், நம்  சருமம் முழு வளர்ச்சி அடைந்திருக்கும்.

ஒரு  விபத்தோ, நோய்த்தொற்றோ தாக்கிய பின்பு தன்னம்பிக்கையை இழப்பது ஒரு சாதாரண நிகழ்வு தான். அதிலிருந்து மீண்டு வர சிலருக்குப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. சிலருக்கு நல்ல நட்பு தேவைப்படுகிறது. சிலருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஒன்றாகத் தான் மெடிக்கல் டாட்டூக்கள் பார்க்கப்பட வேண்டும். அதே போல், இவ்வகை சருமப் பிரச்னைகள் தாக்கிய நபரை ஒதுக்காமல், கேலி பேசாமல் சக மனிதராய் பார்க்க முடிந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையை நிச்சயம் இழக்க மாட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

- ர. சீனிவாசன்

மெடிக்கல் டாட்டூ போடும் முன் இவற்றைப் படித்திடுங்கள்

* மெடிக்கல் டாட்டூக்கள் ஒவ்வாமை ஏற்படுத்தாத மை கொண்டே போடப்படுகின்றன. அந்த மை,  சருமத்தின் அடிப்பகுதிவரை செலுத்தப்பட வேண்டும். ஆனாலும் இந்த டாட்டூக்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவை.

* மெடிக்கல் டாட்டூக்களைக் கொண்டு உதிர்ந்த புருவங்கள் சரியானது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிட முடியும்.

* சருமத்தில் வெளிறிப்போன பகுதிகள், தீப்புண் தழும்புகள் போன்றவற்றை மறைக்க முடியும்.

* டாட்டூ போட்டுக்கொள்ளத் தேவைப்படும் அமர்வுகளின் எண்ணிக்கை மற்றும் கட்டணம் பாதிப்பின் தன்மை மற்றும் அதன் பரப்பளவைப் பொறுத்து வேறுபடும்.

* டாட்டூ போட்ட பின்பு, சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை மருத்துவர்களின் அறிவுரைப்படி பாக்டீரியாவை எதிர்க்கும் க்ரீம் பயன்படுத்த வேண்டும்.

* பொதுவாக, அனைத்து மெடிக்கல் டாட்டூக்களும் நிரந்தரமாகச் சருமத்திலேயே தங்கிவிடும். ஒரு சிலருக்கு மட்டும் அழியத் தொடங்கலாம். அப்போது மீண்டும் போட்டுக்கொள்ளலாம்.