
சிவப்ரியா மாணிக்கவேல், உணவியல் நிபுணர்உணவு
உலகின் மிகப் பிரபலமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்று, கீன்வா (Quinoa). `Quinoa’ என்ற சொல்லை, `கீன்வா’ என்று உச்சரிப்பதுதான் சரி. இது ‘தானியங்களின் அன்னை’ என அழைக்கப்படுகிறது.
குளூட்டன் (Gluten) அலர்ஜியை ஏற்படுத்தும் புரதம் இல்லாதது இதன் தனிச்சிறப்பு. நமது உடலுக்கு அவசியமாகத் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் இருக்கின்றன. அத்துடன் இது, நார்ச்சத்து, மக்னீசியம், பி வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் இ மற்றும் பல பயனுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் அதிகமாகக்கொண்டிருக்கிறது.

தென் அமெரிக்க மக்களின் பிரதான உணவான கீன்வா, விதைக் குடும்பத்தைச் சார்ந்தது.
க்யுர்செட்டின் (Quercetin) மற்றும் கேம்ப்ஃபெரால் (Kaempferol) என்ற ஃபிளேவனாய் டுகளை மிக அதிக அளவில் கொண்டிருக்கிறது கீன்வா. இந்த ஃபிளேவனாய்டுகள் அழற்சி-எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் மனத் தளர்ச்சியைக் குறைக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டிருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.
கரையக்கூடிய நார்ச்சத்து இதில் மிக அதிகமாக இருக்கிறது. எனவே, ரத்தச் சர்க்கரை அளவு, கெட்ட

கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடை குறையவும் வழி வகுக்கிறது.
கீன்வாவில் கனிமங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. இவை ரத்தச் செல்கள், தோல் செல்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், காயங்களை விரைவாகக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
கீன்வா விதையில் லேசான கசப்புச் சுவை இருப்பதால், அதைச் சமைப்பதற்கு முன்னர் குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட வேண்டும். ஒரு கப் விதைக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வைத்து வேகவைக்கலாம்.
வெங்காயம், தக்காளி பீன்ஸ், கேரட் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இதைக் கலவை சாதம்போல் தயாரிக்கலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் காலையில் கஞ்சிபோலவும் சாப்பிடலாம். முளைவிட்ட கீன்வாவை சாலட் மற்றும் ரொட்டித் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம்.