
கு.கணேசன் பொதுநல மருத்துவர்ஹெல்த்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் புதிய அறிவியல் வழிமுறைகளால், நோய்களைக் கணிக்கவும் சிகிச்சை அளிக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. அவற்றுள் அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம் ‘ரோபோ அறுவை சிகிச்சை’ (Robotic Surgery).

அறுவைசிகிச்சை அறிமுகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ‘அறுவைசிகிச்சை மூலம் மனித நோய்களுக்குத் தீர்வு காணலாம்’ என்ற புதிய வழியை அலோபதி மருத்துவம் கைக்கொண்டது. ஆனால், அப்போது நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்ற காரணத்தால், அறுவைசிகிச்சை மேற்கொண்ட பாதி நோயாளிகள் உடனடியாகத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். அப்போது மயக்க மருந்தும் பயன்பாட்டில் இல்லை என்பதால், அறுவைசிகிச்சையின்போது, நோயாளிகளுக்குக் கடுமையாக வலி ஏற்பட்டது. காலப்போக்கில் அறுவை சிகிச்சை முறைகள் சீரான வளர்ச்சியைப் பெற்றன. முக்கியமாக, 1843-ல் ஈதர் எனும் மயக்க மருந்து கண்டுபிடித்த பிறகு, அறுவைசிகிச்சையின்போது நோயாளிக்கு ஏற்படும் வலி குறைந்தது.
திருப்புமுனை எப்போது?
1928-ல் அலெக்ஸாண்டர் ஃபிளமிங், பென்சிலின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்ததுதான் அலோபதி மருத்துவத்தின் பெரிய திருப்புமுனை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நோய்த்தொற்றினால் மரணம் அடைவதை, இந்த மருந்து ரொம்பவே குறைத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நைட்ரஸ் ஆக்ஸைடு, தயோபென்டால் போன்ற அதிதீவிர மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் பலனால், உடலைத் திறந்து மேற்கொள்ளப்படும் ‘திறப்பு அறுவைசிகிச்சைகள்’ (Open surgeries) மேம்பட்டன. என்றாலும், இதயம் போன்ற உயிர் காக்கும் உறுப்புகளில் அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் தயங்கினர். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது அப்போது நடைமுறையில் இருந்தாலும், இதயத்துடிப்பை நிறுத்திவிட்டு, அதில் அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்கு வழி இல்லாமல் தவித்தனர். அதற்கு 1953-ல் ஒரு வழி கிடைத்தது.

அப்போது ‘இதயம் – நுரையீரல் எந்திரம்’ கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதயநோய் சிகிச்சையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு இதயம் துடிப்பதைத் நிறுத்திவிட்டு, பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வழி கிடைத்தது. இதயம் செய்கின்ற வேலையைத் தற்காலிகமாக ‘இதயம் – நுரையீரல் எந்திரம்’ மேற்கொண்டதால், இந்த அறுவைசிகிச்சை சாத்தியமானது. பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகள் உயிர் பிழைத்தனர்.
நுண்துளை அறுவைசிகிச்சை
இதன் பின்னர், ‘லேப்ராஸ்கோப்’ (Laparoscope) எனும் கருவிகொண்டு மேற்கொள்ளப்படும் ‘சிறு துளை அறுவைசிகிச்சை’ (Pin hole surgery) அலோபதி மருத்துவத்தில் தனிச்சிறப்பு பெற்றது. கேமராவும் மின்விளக்கும் இணைந்த கருவிகளைச் சில துளைகள் வழியாக உடலுக்குள் செலுத்தி மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை முறை இது. இதயம், குடல்வால், பித்தப்பை, கருப்பை, குடல், சிறுநீரகம், மூக்கு, காது, எலும்பு மூட்டு போன்ற உறுப்புகளில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளலாம். இப்போது இதையும் முந்திவிட்டது, ரோபோ அறுவைசிகிச்சை.
ரோபோ அறுவைசிகிச்சை
ரோபோ அறுவைசிகிச்சை என்பது ரோபோ எனும் மனித எந்திரமே மேற்கொள்ளும் அதிநவீன சிகிச்சை. பொது அறுவைசிகிச்சைக்கு மயக்க மருத்துவர், அறுவை மருத்துவர், உதவி மருத்துவர், செவிலியர், உதவிச் செவிலியர் எனப் பத்துப் பேர்கொண்ட குழு தேவைப்படும். ஆனால், ரோபோ அறுவைசிகிச்சைக்கு ரோபோவுடன், மயக்க மருத்துவர், அறுவை மருத்துவர், செவிலியர் என மூன்று பேர் போதும். மருத்துவ ரோபோவுக்குக் கைகள் மட்டுமே உண்டு. தேவையைப் பொறுத்து ஒன்று முதல் நான்கு கைகளைக் கொண்ட ரோபோ வரை பலவித ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. கூடுதல் திறனுடனும் துல்லியத்துடனும் செயல்படக்கூடிய ரோபோக்கள் வந்துள்ளன.
எந்த நோய்களுக்குச் சிகிச்சை?
இரைப்பை, கல்லீரல், குடல் நோய்கள் உள்ளிட்டப் பல்வேறு வயிற்று நோய்களுக்கு ரோபோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் புராஸ்டேட் நோய்களுக்கும் இது நல்ல பலன் தருகிறது. பலவிதப் புற்றுநோய் அறுவைசிகிச்சைகளில் இதன் பங்கு இப்போது அதிகரித்து வருகிறது. கருப்பை மற்றும் கருப்பைக் கட்டிகளை அகற்றுதல், கருக்குழாய் இணைப்பு போன்ற அறுவைசிகிச்சைகளிலும் இது பயன்படுத்தப் படுகிறது. இதய நோய்கள், எலும்பு நோய்கள், குழந்தை நோய்கள், தலை மற்றும் கழுத்து நோய்கள் எனப் பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சை முறைகளிலும் தற்போது ரோபோ அறுவைசிகிச்சை பிரபலமாகி வருகிறது.
என்ன நன்மைகள்?
உடலில் மிகச்சிறிய கீறல் போட்டு, அதிநுட்பமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிகிறது. இதில் திசுச் சேதம் மிகவும் குறைவு. ரத்த இழப்பு அவ்வளவாக இல்லாததால் நோயாளிக்கு ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் குறைவு. அறுவைசிகிச்சையின் தழும்பு தெரிவதில்லை. நோய்த்தொற்று ஏற்பட வழியில்லை. மருத்துவமனையில் தங்கும் நாள்கள் குறைவு. நோய் விரைவில் குணமாகிறது. விரைவிலேயே பணிக்குத் திரும்பவும் வாய்ப்புகள் அதிகம்.
(தேடுவோம்...)

மேற்கொள்ளும் முறை
நோயாளியின் மேசைக்கு அருகில் ரோபோ இருக்கிறது. மயக்க மருத்துவர் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தபின், அறுவை மருத்துவர், நோயாளியின் சிகிச்சைக்குரிய உடல் பகுதியில் மிகச்சிறிய துளைகள் போட்டு, அவற்றுக்குள் கேமரா, மின்விளக்கு, கத்தி, கத்தரிக்கோல், மின்சூட்டுக்கோல் உள்ளிட்ட நுண்கருவிகளை நுழைத்து விடுகிறார். ரோபோவின் கைகளை அந்தக் கருவிகளுடன் வெளிப்பக்கத்தில் இணைத்து விடுகிறார். செவிலியர் நோயாளியின் நிலைமையை அருகில் இருந்து கவனித்துக் கொள்வார்.
இப்போது மருத்துவர் நோயாளியின் மேசையிலிருந்து சற்றே தள்ளி இருக்கும் கணினி இணைந்த எந்திரத்துக்கு முன்னால் அமர்ந்துகொள்கிறார். இது ரோபோவுடன் இணைக்கப்பட்டு இருக்கும். எனவே, கணினித் திரையில் நோயாளியின் உடல் பகுதி முப்பரிமாணப் படங்களாகத் தெளிவாகத் தெரியும். ரிமோட் மூலம் தொலைக்காட்சி சேனல்களை இயக்குவதுபோல், இதற்கென உள்ள ஒரு ரிமோட் மூலம் ரோபோவை மருத்துவர் இயக்குகிறார். ரோபோ ரிமோட்டை இரண்டு கைகளால் இயக்க வேண்டும்.
உறுப்புகளைப் பிரித்து வெட்டுவது, தையல் போடுவது, ரத்தக் குழாய்களைப் பிரித்து வெட்டுவது, இணைப்பது, ரத்தம், கழிவுகள் மற்றும் அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்ட உறுப்பைச் சிறுசிறு பகுதி களாக நசுக்கி, உறிஞ்சி வெளியில் எடுப்பது என அறுவை மருத்துவர் தன் கரங்களால் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளையும் ரோபோவின் கைகள் மேற்கொள்ளும். இன்னொரு சிறப்புத் தன்மை என்ன வென்றால், மருத்துவரின் கைகளுக்கு எட்டாத மிகச் சிறிய உடல் உறுப்பும் ரோபோவின் கைகளுக்கு எட்டும் அளவுக்கு அதன் மணிக்கட்டு வடிவம் அமைந்துள்ளது. எனவே, அந்தச் சிறு உறுப்புகளுக்குத் தேவையான சிகிச்சைகளையும் ரோபோ வழங்கிவிடும்.