
உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்
மனித உடம்பில் எலும்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. எலும்பின் வளர்ச்சி, அதில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள் ஆகியவற்றை மிக விரிவாகப் பார்த்தோம். இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வந்த நீங்கள் எலும்பின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எலும்பில்லாமல் இயக்கமே இல்லை. மனித உடலின் உறுதியான கட்டமைப்பே எலும்புதான். எனவே, எலும்பின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். அதற்கு இந்த ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
* உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிக எடைகொண்ட உடலே, எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்னைகளை உருவாக்குகிறது.

* உண்ணும் உணவில் வைட்டமின்- டி இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். பால், முட்டை, கீரைகளை அடிக்கடிச் சாப்பிடுங்கள். மிதமான சூரியக்குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்.
* கை, கால்கள் அசைத்து எப்போதும் ஆக்டிவாக இருங்கள். சும்மா இருந்தாலே மூட்டுகள் சோர்வடைந்து வலிமை குறையலாம்.
* உட்காரும் விதம், நடக்கும் விதம், தூங்கும் விதம் என எல்லாவற்றையும் கவனியுங்கள். ஒழுங்கற்ற வகையில் இருந்தால் தோள்பட்டை, முதுகு வலி, இடுப்பு வலிகள் ஏற்படும்.
* தினமும் கட்டாயம் 15 நிமிடங்கள் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
மூட்டு சிகிச்சையைப் பொறுத்தவரை விரைவில் பல நவீன சிகிச்சை முறைகள் வரவுள்ளன. முக்கியமான சில சிகிச்சை முறைகள் பற்றிச் சொல்கிறேன்.
* ஸ்டெம் செல் சிகிச்சை: எலும்பு மற்றும் மூட்டுப்பகுதிகளில் எங்காவது பாதிப்பு ஏற்பட்டாலோ, நோய்கள் தாக்கினாலோ கவலைப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகளில் இருந்தே செல்களை எடுத்து, செல் வளர்ப்பு (Cell Culture) முறை மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை வளர்த்து மீண்டும் மூட்டுகளில் செலுத்திக் குணம் பெறலாம்.

* ஜீன் தெரபி சிகிச்சை: டி.என்.ஏ-க்கள் தான் உடல் பாகங்களின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. பரம்பரை மூட்டுப் பிரச்னைகள், எலும்புப் புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான டி.என்.ஏ ஜீன்களை மாற்றி நோய் இல்லாத வாழ்வைப் பெறலாம்.
* 3 டி பிரின்டிங் தொழில்நுட்ப முறை: எதிர்காலத்தில் எல்லாவித எலும்பு, மூட்டுகளையும் கம்ப்யூட்டரில் முப்பரிமாண வடிவத்தில் உருவாக்கலாம். அத்துடன் அதில் ஏற்படும் பிரச்னைகள், செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம். இப்போது, மரம், மாவு, பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் செய்யப்படும் மாடல்களை வைத்து ஆலோசித்து சிகிச்சை அளித்து வருகிறோம். இனி 3டி மாடல்களைக்கொண்டு இன்னும் விரைவாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
* ரோபோ சிகிச்சை: தற்போது ரோபோக்களின் உதவியோடு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. ‘ரோபோட்டிக் ஆர்ம்’ (Robotic Arm) எனப்படும் கருவியின் மூலம் செய்யப்படும் இந்தச் சிகிச்சை மருத்துவக் குழுவின் கட்டுப்பாட்டில் நடக்கும். டாக்டர்கள் எங்கோ இருக்க,அவர்கள் இடும் வீடியோ கட்டளைகளின் மூலம் ரோபோக்களே அறுவைசிகிச்சை செய்யும் முறை வரலாம். மருத்துவர் எங்கேயோ இருக்க, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கும் வேலையைக்கூட இந்த ரோபோக்கள் செய்யும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி.
* மேம்பட்ட முன்தடுப்பு முறைகள் (Advanced Augmentive System): ஓர் எலும்பு அல்லது மூட்டு உடைந்த பிறகோ, தேய்ந்த பிறகோதான் இப்போது சிகிச்சை அளிக்கிறோம். தோள்பட்டை விலகிய பிறகு அல்லது தசை நார்கள் கிழிந்தபிறகுதான் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் ஒருவரின் எலும்பு, மூட்டுகளில் இந்தப் பிரச்னை வரலாம் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அந்த இடங்களில் சிகிச்சை அளித்து அந்த நோயே வராமல் தடுக்கும் முறைதான் மேம்பட்ட முன்தடுப்பு முறை. இதை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட இந்த ஐந்து சிகிச்சை முறைகளும் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் எலும்பு மற்றும் மூட்டுகளில் வரும் பிரச்னைகளை எளிதாகத் தீர்த்துவிடலாம், ஆனாலும், எத்தனை நவீன சிகிச்சை முறைகள் வந்தாலும் வாழ்க்கை முறையை, உணவு முறையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதான் ஆக்கபூர்வமானது.
- மு.ஹரி காமராஜ்
முற்றும்