மாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்!

ஹெல்த்கு.கணேசன், பொதுநல மருத்துவர்

அலோபதி மருத்துவத்தில் ‘எதிர்கால மருத்துவம்’ என அழைக்கப்படும் ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Treatment) உலகில் பல நாடுகளில் வளர்ந்து வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் நம்பிக்கை தரும் நவீன மருத்துவமாக இது இருக்கிறது.
ஸ்டெம் செல்கள் என்றால் என்ன?
நம் உடலில் ஒரு லட்சம் கோடிக்கு மேலான செல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை ‘ஸ்டெம் செல்கள்’. இவற்றை ‘ஆதார செல்கள்’, ‘குருத்தணுக்கள்’, ‘தண்டு செல்கள்’ எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.
‘ஸ்டெம் செல்கள்’ என்பவை உடலின் அடிப்படை செல்கள். ஒரு மரத்தின் விதைக்கு ஸ்டெம் செல்லை ஒப்பிடலாம். ஒரு விதையானது மரத்தின் வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எனப் பல அவதாரங்கள் எடுப்பதுபோல், ஒரு ஸ்டெம் செல்லானது மீண்டும் அதே ஸ்டெம் செல்களாகவும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான சிறப்பு செல்களாகவும் பிரிந்து, அந்த உறுப்புகளை வளர்த்து, ஓர் உயிரினத்தை உருவாக்குகிறது.

ஸ்டெம் செல்கள் இருக்கும் இடங்கள்
ரத்தம், எலும்பு மஞ்சை, தொப்புள்கொடி ரத்தம், தொப்புள்கொடி திசு, நச்சுக்கொடி (Placenta), மாதவிலக்கு ரத்தம், கருத்தரித்த கருமுட்டை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை ஆகியவற்றில் ஸ்டெம் செல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வெவ்வேறு உறுப்புகளில் காணப்பட்டாலும், அமைப்பில் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன.
ஸ்டெம் செல் சிகிச்சை (Stem Cell Treatment)
உடலில் உள்ள செல்களில் அல்லது திசுக்களில் நோய் ஏற்படும்போது, ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி அவற்றைப் புதுப்பித்து, மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்ப உதவுவதுதான் ‘ஸ்டெம் செல் சிகிச்சை’யின் அடிப்படை நோக்கம்.
பொதுவாக, ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கு அதன் காரணத்தைப் பொறுத்து ஆன்டிபயாடிக் மருந்து, வைரஸ் எதிர்ப்பு மருந்து போன்றவை பயன்படுத்தப்படும். இவை நோயை உண்டாக்கிய கிருமிகளை அழிக்குமே தவிர, அவை குறிப்பிட்ட உறுப்பில் ஏற்படுத்திய பாதிப்பைச் சரிபடுத்துவதில்லை. அந்தப் பாதிப்புத் தானாகத்தான் சரியாக வேண்டும். அதுபோல் நோய் குணமானாலும், அந்த உறுப்பின் செயல்திறன் குறைந்துவிடலாம்; செயல் இல்லாமலும் போகலாம். ஒரு கட்டத்தில் விரிசல் ஏற்படுமானால், அந்த விரிசலை மேற்பூச்சு மூலம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழிமுறைதான் இது.
ஆனால், ஸ்டெம் செல் சிகிச்சையானது பாதிப்படைந்த உறுப்பையும் சரிசெய்கிறது; உறுப்பின் பழைய செயல்திறனையும் மீட்டுத் தருகிறது. ஒரு கட்டட விரிசலுக்குக் காரணமான செங்கல்லை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அந்த இடத்தில் புதுச் செங்கல்லை வைத்துப் பூசுவதைப்போல், பாதிப்படைந்த உறுப்புகளையே புதுப்பிக்கும் செயல்முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுகிறது.

ஸ்டெம் செல்கள் பெறப்படும் முறை
கருத்தரித்த கருமுட்டை செல்கள்தான் ஸ்டெம் செல் சிகிச்சையில் பிரதானம். இவற்றை ஒரு கர்ப்பிணியிடமிருந்து தானமாகப் பெறலாம். அடுத்து, கருச்சிதைவு ஆன சிசுக்களிடமிருந்தும் பெறலாம்; தொப்புள்கொடி ரத்தத்தையும் திசுவையும் பிரசவமான தாயிடமிருந்து பெறலாம். எலும்பு மஞ்சை, ரத்தம், தோல் போன்ற ஸ்டெம் செல் திசுக்களை நோயாளியிடமிருந்தும் பெறலாம்; ஆரோக்கியமான ஆண், பெண் இருபாலரிடம் இருந்து தானமாகவும் பெற்றுக்கொள்ளலாம். தனியாக செயற்கை முறையிலும் இவற்றைத் தயாரிக்கலாம்.
செயற்கையாகத் தயாரிப்பது எப்படி?
ஒரு மனிதக் கருவைப் பெற்று, அதன் செல்லில் உள்ள உட்கருவை (Nucleus) வெளியேற்றிவிட்டு, வயதுக்கு வந்த உடல் செல்லின் டின்ஏ (DNA) ஒன்றை அதனுள் புகுத்தி வளர்க்கும்போது புதிய ஸ்டெம் செல்கள் உருவாகின்றன. அதாவது, அந்தக் கரு வளர்ந்து செல்களாகப் பிரியும். ஐந்தாம் நாளில் கருநீர்க்கோளம் (Blastocyst) உருவாகும். இது கருவில் காணப்படும் செல்களின் மொத்த வடிவம் ஆகும். இதுவே ஸ்டெம் செல்களின் பிறப்பிடம். அந்தக் கருவை உடைத்து, ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, நோய்க்கான சிகிச்சைக்கும், ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.
ஸ்டெம் செல்கள் வளர்க்கப்படும் முறை
வழக்கத்தில், உடல் செல் ஒன்று இயல்பாக வளர்வதற்கு, அந்த செல்லில் இருக்கும் மரபணு (Gene), சில சிக்னல்கள் மூலம் செல்லுக்குத் தெரிவிக்கும். அதற்கேற்ப அது வளர்ச்சி அடையும். இம்மாதிரியான சிக்னல்களை செயற்கையாகத் தயாரித்து ஸ்டெம் செல்களுக்கு அனுப்பும்போது அவை வளர்கின்றன. இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். பெறப்பட்ட கருவிலிருந்து, கருநீர்க்கோளத்தைப் பிரித்தெடுத்து, அதை ஒரு வளர் ஊடகத்தில் வளர்க்கின்றனர். அந்த ஊடகத்தில் உயிர் செல்கள் வளர்வதற்குத் தேவையான உணவுப் பொருள்கள் இருக்கும். முதலில், ‘எலெக்ட்ரோபோரேஷன்’ (Electroporation) எனும் முறையில் அந்த செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்றனர். பின்னர், எந்த வகை செல்கள் தேவைப்படுகின்றனவோ அந்த செல்கள் வளர்வதற்குரிய சிக்னல்களை செல்களுக்கு அனுப்புகின்றனர். அவற்றைப் புரிந்துகொண்டு, தேவைக்கேற்ப செல்கள் வளர்கின்றன. இவ்வாறு அடிப்படை ஸ்டெம் செல்களை நம் தேவைக்கேற்ப இதயம், கல்லீரல், எலும்பு, குருத்தெலும்பு, தோல், சிறுநீரகம் என எந்த ஓர் உறுப்பின் செல்களாகவும் மாற்றிக்கொள்ள முடியும்; இவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள முடியும். இந்த செல்கள் தேவையான அளவுக்கு வளர்ந்ததும் அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துகின்றனர்.
ஸ்டெம் செல்கள் செயல்படும் முறை
உடலில் நோய்வாய்ப்பட்ட செல்களை ஸ்டெம் செல்கள் புதுப்பிக்கின்றன; தேவைப்பட்டால் அந்த செல்களையே மாற்றுகின்றன; குறைபாடுள்ள உறுப்புத் திசுக்களைச் சரிசெய்கின்றன. இப்படி நோய் தீர்க்கும் செல்களாக இன்றைய நவீன மருத்துவத்தில் இவை பயன்படுகின்றன.
ஸ்டெம் செல்கள் பாதுகாக்கப்படும் முறை
வழக்கத்தில், தொப்புள்கொடி ரத்தத்திலிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள்தான் வேகமாகப் பல்கிப் பெருகும் தன்மை கொண்டவை; தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உடையவை. எனவே, இந்த ரத்தத்தைச் சேமித்துவைத்தால், பல நோய்களுக்கு எளிதில் தீர்வு காணலாம்.
ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவம் ஆனதும், அவரிடமிருந்து தொப்புள்கொடி ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். அதிலிருந்து ஸ்டெம் செல்களை மட்டும் பிரித்தெடுக்கின்றனர். அவற்றுடன் ‘டைமெதில் சல்ஃபாக்சைடு – டெக்ஸ்ட்ரான்’ (Dimethyl Sulfoxide - DMSO – Dextran) எனும் உணவுப்பொருளைக் கலந்து, குளிர்சாதனப்பெட்டியின் ஃப்ரீசரில் வைத்து உறையவைக்கின்றனர்; அதன் பின்னர், ஓர் உறைநிலைப் பாத்திரத்தில் மைனஸ் 196 செல்சியஸ் உறைநிலையில் பல வருடங்களுக்குப் பாதுகாக்கின்றனர். தேவைப்படும்போது இவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
யாருக்கு உதவும்?
தொப்புள்கொடி ரத்தம் கொடுத்த பெண்ணுக்கே தேவைப்பட்டாலும் அவருடைய ஸ்டெம் செல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; அவருக்குப் பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவரான பிறகு குழந்தைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்; மற்றவர்களுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
ஸ்டெம் செல் வங்கிகள்
ரத்தச் சேமிப்பு வங்கிகளைப்போல், இப்போது இந்தியாவில் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் ஸ்டெம் செல் வங்கிகளும் தோன்றியுள்ளன. பல்வேறுவகை ஸ்டெம் செல்களைப் பெற்று, மதிப்பீடு செய்து, பக்குவப்படுத்தி, உறையிட்டு, பெயரிட்டு, நீண்ட காலத்துக்கு முறைப்படி பாதுகாத்து, தேவையானவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தருவதற்கு ‘ஸ்டெம் செல் வங்கி’கள் (Stem Cell Banks) இப்போது செயல்படுகின்றன.
தொப்புள்கொடி ரத்தத்தையும் தொப்புள்கொடி திசுவையும் பாதுகாத்து, எதிர்காலத்தில் தேவைப்படும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்துத் தருவதற்குத் ‘தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு வங்கிகள்’ (Cord Blood Banks) பயன்படுகின்றன.

புற்றுநோய்க்குச் சிகிச்சை
ஸ்டெம் செல் சிகிச்சையில் ஒரு முக்கிய வகை எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை (Bone marrow transplantation). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்புகளுக்கு ஆரோக்கியமான எலும்பு மஞ்சையைச் செலுத்தினால், அதிலுள்ள ஸ்டெம் செல்கள் புற்றுநோய் பாதித்த பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, புதிய எலும்பு செல்களை வளர்த்தெடுத்து, புற்றுநோயைக் குணப்படுத்துகின்றன. மேலும், இவை உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தை ஊக்கப்படுத்தி, புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. தமிழகத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இச்சிகிச்சை வழங்கப்படுகிறது.
குணமாகும் இதர நோய்கள்
‘தலசீமியா’ எனும் ரத்த அழிவுச்சோகைக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல தீர்வு தருகிறது. இந்தச் சிகிச்சை தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் தற்போது வழங்கப்படுகிறது. இதுபோல் இதயநோய், இன்சுலினை நம்பியுள்ள முதலாம் வகை நீரிழிவு, முழங்கால் மூட்டுவலி, ரத்தக்குழாய் அடைப்பு, ஆட்டிசம், தசை இழப்பு நோய், முதுகுத்தண்டு பாதிப்புகள், பக்கவாதம், அல்ஸைமர் நோய், பார்கின்சன் நோய், கண் நோய்கள் போன்ற 80-க்கும் மேற்பட்ட மனித நோய்களைக் குணப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் ஸ்டெம் செல்கள் அயல் நாடுகளில் தற்போது பயன்படுகின்றன. இந்தியாவுக்கும் இந்தச் சிகிச்சை முறைகள் விரைவிலேயே வர இருக்கின்றன.
(தேடுவோம்)