மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை

ஹெல்த்கு.கணேசன் பொதுநல மருத்துவர்

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை

றுபது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான கண் பாதிப்பு, ‘மேக்குலர் டீஜெனரேஷன்’ (Macular Degeneration) என்று அழைக்கப்படும் ‘ஒளிக்குவியச் சிதைவு நோய்’. இந்தப் பாதிப்பு தொடங்கும்போதே கவனித்துவிட்டால், பார்வை இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ முடியும். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் பார்வை இல்லாமல் சிரமப்பட வேண்டும்.  

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை

ஒளிக்குவியச் சிதைவு நோய்

‘மேக்குலா’ (Macula) என அழைக்கப்படும் ஒளிக்குவியமானது, விழித்திரையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் பார்வை தரும் குச்சிகள் (Rods) மற்றும் கூம்புகள் (Cones) எனும் ’ஒளி ஏற்பான்கள்’ (Photo receptors) மிகுந்துள்ளன. மிகத் துல்லியமான பார்வைக்கும் மையப் பார்வைக்கும் முக்கியக் காரணமாக இருப்பது ஒளிக்குவியம்தான். குறிப்பாக, புத்தகம் வாசிப்பது, வாகனம் ஓட்டுவது, ஊசியில் நூல் கோர்ப்பது, கணினி வேலை போன்ற நுட்பமான வேலைகளைச் செய்வதற்கு ஒளிக்குவியம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இது பாதிக்கப்படும்போது ஒளிக்குவியச் சிதைவு நோய் ஏற்படுகிறது.

நோய் வகைகள்

உலர் ஒளிக்குவியச் சிதைவு நோய்: வயதாக ஆக, ஒளிக்குவியத்தில் உள்ள மென்மையான, உணர்வுமிக்க செல்கள் உடைகின்றன. இந்த நிகழ்வு தொடர்ந்து பல ஆண்டுகளாகப் படிப்படியாக நிகழ்கிறது. தேவையில்லாத கழிவுப் பொருள்களும் விழித்திரையில் சேருகின்றன. ‘ட்ரூசென்’ (Drusen) எனும் கொழுப்புக் கழிவுகள் விழித்திரையில் சேமிக்கப்படுகின்றன. இதன் அளவு அதிகமாகும்போது பார்வையின் பாதிப்பும் கடுமையாகிறது. பார்க்கும் பொருளின் மையப்பகுதியைப் பார்ப்பது சிரமமாகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சைஈர ஒளிக்குவியச் சிதைவு நோய்: இந்தப் பாதிப்பின்போது, ஒளிக்குவியப் பகுதியின் அடிப் புறத்தில் புதிய ரத்தக் குழாய்கள் தோன்றுகின்றன. இந்த நிகழ்வு, விழித்திரையில் சேர்ந்துள்ள கொழுப்புக் கழிவுகளை அகற்றுவதற்காக இயற்கையிலேயே ஒரு முயற்சி நடப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்த ரத்தக் குழாய்கள் தவறான இடத்தில் உருவாகிவிடுவதால், இவற்றால் தீமைகளே  அதிகம். இந்த ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தமும் மற்ற திரவங்களும் விழித்திரையில் கசிகின்றன. இந்தக் கசிவானது பார்வையை மறைக்கிறது. கசிவு ஏற்பட்ட இடங்களில் தழும்புகள் ஏற்படவும் வழி உண்டாகிறது. இத்தழும்புகள் மேன்மேலும் பார்வையைக் குறைத்து பார்வை பறிபோவதற்கான ஆபத்தான நிலைமையை உண்டாக்குகின்றன.

காரணம் என்ன?


முதுமை இதற்கு ஒரு முக்கியமான காரணம். மரபு வழியாகவும் இது ஏற்படுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல் காரணமாகவும் ஏற்படலாம். அதிக நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்களுக்கும், பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவை உள்ளவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள் என்ன?

வலி இருப்பதில்லை என்பதால், பார்வையை இழக்கும்வரை இந்தப் பாதிப்பு இருப்பதை பலர் உணராமலே இருக்கிறார்கள். நோயின் தொடக்கத்தில் பொதுவான பார்வை சரியாக தெரிந்தாலும், வாசிப்பது, எழுதுவது, வாகனம் ஓட்டுவது போன்றவை சிரமமாக இருக்கும். மனிதர்களின் முகங்களை அடையாளம் காண்பது சிரமம். பார்க்கும் பொருளின் நிறங்கள் தெளிவில்லாமல் தெரியும். இவை உலர் ஒளிக்குவியப் பாதிப்பு உள்ளவர்களுக்கு முக்கிய அறிகுறிகள்.

பார்க்கும் பொருளின் மையப்பகுதி தெளிவில்லாமல் தெரிவது, காட்சிகள் உடைந்து தெரிவது, ஒரு நேர்கோடு வளைந்து வளைந்து தெரிவது, இல்லாத பொருள்கள் எதிரில் இருப்பதுபோல் ஒரு மாயை உருவாவது, பார்வையை மறைக்கும் புள்ளிகள் தெரிவது ஆகியவை ஈர ஒளிக்குவியப் பாதிப்பு உள்ளவர்களுக்கு முக்கிய அறிகுறிகள்.

சிகிச்சை முறைகள்

உலர் ஒளிக்குவியச் சிதைவு நோயாளிகளுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். அத்துடன் தாமிரச் சத்து, வைட்டமின் - ஏ, சி, டி, ஈ ஆகிய சத்துகள் மிகுந்த உணவுகளையும் மாத்திரைகளையும் சாப்பிடச் சொல்வதன் மூலம் பார்வை பாதிக்கப்படுவதை 25 சதவீதம் தாமதப்படுத்தலாம். ‘லோ விஷன் எய்டு’ (Low Vision Aid) எனும் பார்வையூட்டக் கருவிகளைக் கண்ணில் பொருத்திக்கொண்டு, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பார்வைத் தடைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம். புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்துவது; நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவது; பகல் நேரங்களில் வெளியில் செல்வதாக இருந்தால், கண்ணுக்குச் சூரிய கண்ணாடி, கறுப்புநிறக் கண்ணாடி அணிந்துசெல்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் பார்வைத் தடைகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

லேசர் சிகிச்சை

ஈர ஒளிக்குவியச் சிதைவு நோய்க்கு லேசர் சிகிச்சை நல்ல பலன் தருகிறது. விழித்திரையில் ஏற்படும் ரத்தக்கசிவை இதன் மூலம் நிறுத்த இயலும். வெளிநோயாளியாகவே மருத்துவமனைக்கு வந்து சென்று இச்சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டோ டைனமிக் சிகிச்சை

நோயாளியின் ரத்தக்குழாய் வழியாக ஒரு சிறப்பு மருந்தைச் செலுத்தி, அந்த மருந்து விழித்திரைக்குச் சென்றதும், அதன் மீது லேசர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தினால், அந்த மருந்து உடைந்து, வீரியம் பெற்று, விழித்திரையில் கசியும் ரத்தக் குழாய்களை அடைத்துவிடுகிறது; ரத்தக்கசிவு நிற்கிறது. பார்வைத் தடை குறைகிறது.

பயோனிக் கண் சிகிச்சை

ஒளிக்குவியச் சிதைவு நோய்க்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை. இந்தப் பாதிப்பினால் ஏற்கனவே இழந்துவிட்ட பார்வையை மீட்க முடியாது. பார்வை பாதிப்பு மேலும் அதிகரித்து விடாமல் தடுத்துக்கொள்ளவே முடியும். இதற்கு அயல் நாடுகளில் ‘பயோனிக் கண் சிகிச்சை’ எனும் நவீன சிகிச்சை இப்போது மேற்கொள்ளப்படுகிறது. பயோனிக் கண்ணுக்கு ‘ஆர்கஸ்’ (Argus) என்பது மருத்துவப் பெயர். பல மின்வாய்கள் (Electrodes) இணைந்த கருவி இது. மேக்குலாவில் உள்ள ஒளி ஏற்பான்கள் செய்யும் வேலையை இதில் உள்ள சிலிக்கான் சில்லு செய்கிறது. கருவியின் மின் வாய்கள் எண்ணிக்கையைப் பொறுத்து இதில் பல வகைகள் உள்ளன. மின்வாய்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகப் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

பயோனிக் பார்வை தரும் விதம்

முதலில் நோயாளியின் விழித்திரையில் ‘சிலிக்கன் சில்’லைப் பொருத்துகின்றனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த நோயாளிக்கென்றே தயாரித்த சிறப்பு பயோனிக் கண் கண்ணாடியை அணியக் கொடுக்கின்றனர். கண்ணாடியின் மூக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா, எதிரே காணும் காட்சிகளைப் படமெடுத்து, அவரது சட்டைப்பையில் உள்ள இயக்குப்பொறிக்கு அனுப்புகிறது. அங்கு அவை பக்குவப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட விழித்திரைக்கு வயரில்லா முறையில் அனுப்ப, அங்குள்ள சிலிக்கன் சில்லு அந்தக் காட்சிகளை மின்சிக்னல்களாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. மூளையானது எதிரே பார்ப்பதுத் தோராயமாகத் தெரிவிக்கிறது. இதனால், ஒரு சராசரி மனிதரால் பார்க்க முடிவதைப்போல் தெள்ளத்தெளிவாகக் காட்சிகள் தெரியாது என்றாலும், நோயாளியால் இப்போது எதிரே இருப்பவரை ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியும். தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் ஆர்கஸ் கருவியை மேம்படுத்தி, காட்சிகள் இன்னும் தெளிவாகத் தெரிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள்.

நன்மைகள் என்ன?

இந்த நோயாளிகள் இதுவரை குச்சியை வைத்துத் தட்டுத்தடுமாறி நடந்தார்கள். அதற்குப் பதிலாக, பயோனிக் கண் கண்ணாடியை அணிந்த பிறகு, தன்னம்பிக்கையுடன் நோயாளியால் நடக்க முடிகிறது. இதுவரை வெறும் இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போது கறுப்பு வெள்ளையில் காட்சிகளைப் புரிந்துகொள்ள முடியும்.  பயோனிக் கண் கண்டுபிடிப்பின் மூலம் இவர்கள் வாழ்வில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியுள்ளது. பார்வைக் குறைவுக்குக் கண் கண்ணாடி போட்டுக்கொள்வதுபோல், அடுத்த சில ஆண்டுகளில் இந்த நோய்க்கும் பயோனிக் கண் பொருத்திக்கொள்ளும் முறை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் மேற்கொள்ளப்படும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

மாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை

என்ன பரிசோதனைகள்?

ண்ணுக்குத் தேவைப்படும் வழக்கமான ஆரம்பகட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர், ‘ஆம்ஸ்லர் கிரிடு பரிசோதனை’ (Amsler Grid Test), விழித்திரை படப் பரிசோதனை (Retinal Imaging) ஃபண்டஸ் படப் பரிசோதனை (Fundus photography) ஆகியவை மேற்கொள்ளப்படும். இவற்றின்மூலம் ஒளிக்குவியப் பகுதியைத் தெளிவாக ஆராய முடிகிறது. இதைத் தொடர்ந்து, ‘ஃபுளுரெசின் ஆஞ்சியோகிராபி’
(Fluorsecein Angiography) ‘ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி’ (Optical Coherence Tomography) எனும் சிறப்புப் பரிசோதனைகளும் தேவைப்படும்.