மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்

கு.கணேசன் பொதுநல மருத்துவர்டெக்னாலஜி

குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, பிறந்ததிலிருந்தே வரிசைகட்டித் தடுப்பூசிகள் போடுவதைப்போல, பெரியவர்களுக்குப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், ஏற்கெனவே புற்றுநோய் இருந்தால் குணப்படுத்தவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. உலக அளவில் விஞ்ஞானிகளின் அயராத உழைப்பாலும், மருத்துவத் தொழில் நுட்பங்களில் ஏற்பட்டு வரும் மகத்தான முன்னேற்றங்களாலும் இது சாத்தியமாகி வருகிறது. புற்றுநோய் இல்லாத உலகம் படைப்பதற்கு உதவும் ‘தடுப்பு மருந்து சிகிச்சை’ (Immunotherapy) எனும் புதிய தொழில்நுட்பம், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்.    

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்

புற்றுநோய் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் நிலையில் இருந்தால், அந்த செல்களைப் புற்றுநோய் செல்கள் என்கிறோம். இத்தகைய செல்கள், அவை இடம்பெறும் உடலுறுப்பை அழிப்பதோடு, அருகில் உள்ள ஆரோக்கிய செல்களையும் அழிக்கத் தொடங்குகின்றன. மேலும், ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் ஓர் உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவி, அந்த உறுப்பையும் பாதிக்கின்றன. நாளடைவில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது, புற்றுநோய்.

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்காரணங்கள்

புற்று செல்கள் உருவாவதற்கு மரபு ரீதியான காரணங்கள் முதலிடம் வகித்தாலும், புகைப் பழக்கம், மதுப் பழக்கம், நார்ச்சத்து இல்லாத உணவுப் பழக்கம், உடல்பருமன், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட நம் வாழ்க்கைமுறைகளும் முக்கியக் காரணங்களாகின்றன. வைரஸ் கிருமிகள், கதிரியக்கம், நச்சு ரசாயனங்கள், உணவு நச்சுகள், ஹார்மோன்கள் ஆகியவையும் இந்த நோய்க்குக் காரணமாகின்றன.

முன் பரிசோதனைகள் அவசியம்

மேலை நாடுகளில் முன் பரிசோதனை முறைகள் வழக்கத்தில் உள்ளன. முழுமையான ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், மேமோகிராம், திசு ஆய்வுப் பரிசோதனை, பயோமார்க்கர் பரிசோதனை, பாப் ஸ்மியர் பரிசோதனை, எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி  எனப் பலதரப்பட்ட பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை இனம் காண முடியும். ஆனால், நம் நாட்டிலோ புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் இம்மாதிரியான பரிசோதனை வசதிகள் உள்ள போதிலும், போதிய விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தால், பலரும் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இதுவே புற்றுநோய் ஏற்பட்டவரின் இறப்புக்கு வழி அமைக்கிறது. வயதுக்கு ஏற்ப, பாலினத்துக்கு ஏற்ற ‘மாஸ்டர் ஹெல்த் செக்அப்’களை வருடத்துக்கு ஒருமுறை மேற்கொண்டுவிட்டால், பல புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்; உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு நோய் முற்றும் நிலைக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.  

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்

நடைமுறை சிகிச்சைகள்

புற்றுநோயின் வகை, நிலை, அது உடலில் பரவியுள்ள தன்மை, நோயாளியின் வயது, உடல் தன்மை போன்றவற்றை அடிப்படையாக வைத்துப் புற்றுநோய்க்குச் சிகிச்சை வழங்கப்படுவது நடைமுறை. அறுவை சிகிச்சை, மருந்துச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, இலக்குத் தாக்கு சிகிச்சை (Targeted therapy) ஸ்டெம் செல் சிகிச்சை, போட்டோ டைனமிக் சிகிச்சை, லேசர் சிகிச்சை, லேப்ராஸ்கோப் ரோபோ அறுவை சிகிச்சை, ஆதரவு சிகிச்சை (Palliative care) எனப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் தற்போது வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்களுக்கு, கூட்டுச் சிகிச்சைகளும் வழங்கப்படும். உதாரணமாக, வயிற்றில் புற்றுக்கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கட்டியை அகற்றிய பிறகு, மருந்துச் சிகிச்சை தரப்படும். மார்புப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையும், அதைத் தொடர்ந்து கதிரியக்கச் சிகிச்சையும் வழங்கப்படும். புராஸ்டேட் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை அல்லது மூன்றும் வழங்கப்படும்.

இந்த வரிசையில் தற்போது ‘தடுப்பு மருந்து சிகிச்சை’யும் இடம் பெற்றுள்ளது. இதில் சைட்டோகைன்ஸ் (Cytokines) எனும் மருந்துகளும், மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் (Monoclonal antibodies) எனும் தடுப்பு மருந்துகளும் வழங்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. பிசிஜி (BCG) தடுப்பூசி, கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி (HPV vaccine), கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசி (Hepatitis - B vaccine - HBV), புராஸ்டேட் புற்றுநோய்க்கு சிபுலூசில் – டி எனும் தடுப்பூசி (Sipuleucel - T vaccine) ஆகியவை இந்தச் சிகிச்சையில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் புதிதாக வந்துள்ள சில தடுப்பூசிகள் இந்தச் சிகிச்சைக்கு வலு சேர்க்கின்றன. 

மாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்நவீனத் தடுப்பூசிகள்


பொதுவாக, ஆரோக்கியமாக உள்ளவர் களுக்குப் பின்னாளில் நோய் வராமல் தடுப்பதற்குத்தான் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுவது வழக்கம். கருப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஆனால், புற்றுநோயைப் பொறுத்த அளவில் நோய் ஏற்பட்டவருக்கும் தடுப்பூசி பயன்படுகிறது. எப்படி?

உடலிலுள்ள நோய்ப் பாதுகாப்பு செல்களுக்குப் (T cells) புற்றுநோய் செல்களைப் பிரித்துணரும் ஆற்றலை இத்தடுப்பூசி வழங்குகிறது. அப்போது ஓர் உறுப்பில் புதிதாகத் தோன்றும் புற்றுசெல்களை இவை உடனே கண்டறிந்து, அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இதன் பலனால் அந்த உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த வழியில் புராஸ்டேட் புற்றுநோய்க்கு இரண்டுவகைத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  இந்தப் புற்றுநோய் உள்ளவரின் டி செல்களை அகற்றி மரபணுப் பொறியியல் தொழில்நுட்பம் மூலம் GM-CSF எனும் புரதத்துடன் கலந்து அல்லது கதிரியக்கம் மூலம் பக்குவப்படுத்தி, மீண்டும் அதே நோயாளிக்கு அதைச் செலுத்துகின்றனர். இப்போது இந்த செல்கள் புராஸ்டேட் புற்றுசெல்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுவிடுவதால் நோய் கட்டுப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகளை மார்பகப் புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் பயன்படுத்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

‘பேரிகாட்’ செல்கள்

சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ‘பேரிகாட்கள்’ வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் உடலுக்குள் அந்நியப் பொருள்கள் நுழைவதைத் தடுப்பதற்கெனச் சிறப்பு செல்கள் (Check points) உள்ளன. சிலருக்கு இந்த செல்கள் உறக்க நிலையில் இருக்கும். இதைப் பயன்படுத்தி, புற்றுசெல்கள் அவர்கள் உடலில் பரவத் தொடங்கும்.

இவர்களுக்கு உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்களைத் தட்டி எழுப்பும் விதமாக சில தடுப்பூசிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, ‘மெலனோமா’ எனும் சருமப் புற்றுநோய் செல்கள் PD-1 எனும் புரத மூலக்கூற்றை உற்பத்தி செய்து ‘பேரிகாட்’ செல்களை உறங்க வைத்துவிடுகிறது. இதனால் அந்தப் புற்றுநோய் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்து, சருமத்தைப் பாதிக்கிறது.

இவர்களுக்கு, PD-1 எனும் புரதத்தை அழிக்கும் விதமாகத் தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். இதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்கள் விழிப்புற்று, உடலில் வளரும் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கத் தொடங்குவதால், நோய் குணமாகிறது. இந்த இரண்டுமே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை!

பக்கவிளைவுகள் இல்லை

பொதுவாக, மருந்துச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை ஆகிய புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உடல் மெலிதல், முடி உதிர்தல், வாய்ப்புண், தொண்டையில் புண், பசிக்குறைவு, பசித்தாலும் உணவு சாப்பிட முடியாத நிலைமை, களைப்பு, ரத்தசோகை, கால்வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, உறக்கமின்மை, உடலின் நிறம் மாறுதல், தோல் அழற்சி, மலட்டுத்தன்மை, ஞாபக மறதி, உளவியல் சிக்கல்கள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்டு. இதற்குப் பயந்தே பலரும் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், இந்த நவீன மருந்துகளுக்கு அவ்வளவாகப் பக்கவிளைவுகள் இல்லை என்பது முக்கியமான பாதுகாப்பு அம்சம். இதனால்தான் உலக அளவில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும்.

(தேடுவோம்)

அறிகுறிகள்

வலியில்லாத கட்டி, பல வாரங்களுக்கு விடாத இருமல், குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், நாள்பட்ட அஜீரணம், ஆறாத காயம், மலத்தில், சிறுநீரில் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுவது, ஏற்கெனவே இருந்த மரு... அளவிலோ, நிறத்திலோ மாற்றம் அடைவது, காரணமில்லாமல் எடை குறைவது, நீடித்த சோர்வு, நீடித்த காய்ச்சல், நாள்பட்ட எலும்பு வலி போன்றவை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒன்று தெரிந்தாலே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அப்போதுதான் புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்று, உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக்கொள்ள முடியும்.