மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்புதிய பகுதி

டந்த டிசம்பர் 13-ம் தேதி, ரோஹித் ஷர்மா இலங்கைக்கு எதிராக அடித்த டபுள் செஞ்சுரி ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே? அன்று டி.வி-யில் பார்த்த பலர், அவர் டபுள் செஞ்சுரியை நெருங்கும்போது அவர் மனைவி அடைந்த குதூகலத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனந்தக் கண்ணீரோடு, கணவரின் ஒவ்வொரு பந்துக்கும் கண்களை மூடிக்கொண்டும், கண்களைப் பாதி திறந்தபடி கணவர் ஆட்டத்தைப் பார்த்தபடியும் ஒரு மனைவியாக அவர் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுதானே? காரணம், அன்று அவர்களுக்குத் திருமண நாள். ஒரு கணவர், தன் மனைவிக்கு இதைவிடச் சிறந்த பரிசைத் தர முடியுமா..? ரோஹித் ஷர்மா அடித்த டபுள் செஞ்சுரிக்கும் செக்ஸ் பற்றிய இந்தத் தொடருக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது?   

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

ரோஹித் ஷர்மா என்றில்லை... உலகில் இருக்கும் எல்லா ஆண்களுமே டபுள் செஞ்சுரியைவிட ஒரு சந்தோஷத்தைத் தங்கள் மனைவிக்குத் தர முடியுமென்றால் அதற்கு ‘செக்ஸ்’ என்று பெயரிடலாம். ‘MATCH’ என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தத்தை யோசித்துப் பாருங்கள். பொருந்திப் போதல். ‘பொருந்திக் கரைந்து போதல்’ என்று சொல்லலாம். கிரிக்கெட்டோ, கட்டிலோ பொருந்திக் கரைந்து போதல்தானே உடலுக்கும் மனதுக்கும் அழகு. அதுதானே காதலும் காமமுமாக இருக்க முடியும்? காமமும் விளையாட்டுதான். ஆனால், அதை விளையாட்டாக நினைக்கக் கூடாது..? சரி... விரிவாகச் சொல்கிறேன்.

`Sachin: A Billion Dreams’ புத்தகம் படித்திருக்கிறீர்களா? அண்மையில் அது படமாகவே ரிலீஸாகி இருந்தது. சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை டாக்கு டிராமா ஸ்டைலில் விவரித்த அந்தப் படத்தில் சச்சின் மெள்ள மெள்ள பேட்டிங்மீது ஆர்வமாகி... தெரு கிரிக்கெட்டில் விளையாடி அப்படியே பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில், மண்டல அளவில், சர்வதேச அளவில் உயர்ந்ததை அழகாகக் காட்டியிருப்பார்கள். 

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!



செஞ்சுரி மேல் செஞ்சுரி குவித்திருந்தாலும் அவரது தினசரி வாடிக்கை என்ன என்று அழகாகப் படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். `நெட் பிராக்டீஸ்’. ஒருநாள்கூட அதை அவர் தவறவிட்டதில்லை. ஒரேநாளில் அவருக்கு பேட்டிங் திறமை வந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அவர் ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டி எழுப்பிய கோட்டைதான் அவரது கிரிக்கெட் சகாப்தம், சாதனைகள் எல்லாமே..!  அதற்குப் பின்னால் இருந்ததெல்லாம் தினமும் அவர் கற்றுக்கொண்ட நெட் பிராக்டீஸ். பயிற்சி, பயிற்சி மட்டுமே! செக்ஸ் என்பதும்கூட அப்படித்தான். ஒரே நாளில் இங்கும் டபுள் செஞ்சுரி அடிக்க முடியாது. திருமணமாகும் வரை அடிப்படை செக்ஸ் அறிவைக்கூட வளர்த்துக்கொள்ளாமல் களம் புகுகிறார்கள். தவறான கற்பிதங்களாலும், வழிகாட்டுதல்களாலும், பயத்தாலும் எல்லாவற்று க்கும் மேலாகப் போலி வைத்தியர்களால் இன்னும் குழப்பத்தோடு களம் புகுகிறார்கள். விளைவு...? திருமண பந்தத்தில் இணையும் இளையோர், முதல் பாலிலேயே அவுட் ஆகிவிடுகிறார்கள். முதலிரவிலேயே கசப்பான அனுபவங்களைச் சுமந்து திருமண பந்தத்தையே முறித்துக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.  

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

காம உணர்வை இயல்பான ஒன்றாக, வாழ்க்கையின் நான்காவது அத்தியாவசியத் தேவையாக உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்த இடத்தில் செக்ஸுக்கும் முக்கியப் பங்கைக் கொடுத்திருந்தார்கள். முனிவர்கள், ரிஷிகளேகூட காமத்தைக் கடந்து வந்தவர்கள்தான். சாமானி யர்கள் காமத்தைக் கொண்டாடி வாழ்க்கையைக் கடந்து வந்திருக்கிறார்கள். செக்ஸை ஒதுக்கிவைக்கவோ, ரகசியப் பொருளாகப் பதுக்கிவைக்கவோ நம் முன்னோர் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது. இல்லறம் என்பதே ஒளிவு மறைவில்லாததிலிருந்து தொடங்குவதாக நம்பினார்கள். அன்பிலிருந்துதான் எல்லாமே தொடங்குவதாக நம்பினார்கள். அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒருவழிப்பாதை இல்லை. செக்ஸிலும் இப்படித்தான். `அது இருவரின் தேவைகளையுமே முழுமையாகப் பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும்’ என்றனர் நம் முன்னோர்கள்.

‘தாம்பத்ய உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’- நம் முன்னோர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன இந்தச் சின்னப் புரிந்துகொள்தலை நாற்பது வருடங்களுக்கு முன்பு நமக்கு மேற்கத்திய நாகரிகம் ஆராய்ச்சிகள் மூலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கிவிட்டு, `செக்ஸ் உணர்வு’ என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம்போல ஆக்கி, செக்ஸைத் தனிமைப்படுத்தி விட்டார்கள். செக்ஸ் என்பது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதைக் காலப்போக்கில் மறந்துபோய் யாரோபோல கள்ளத்தனமாக அனுபவிக்கும் ஒன்றாக ஆக்கிக்கொண்டோம். ஆண்-பெண் என்ற பாலினத்தை `செக்ஸ்’ என்றுதான் அழைக்கிறோம்.

இந்த விஷயத்தில் உலகிற்கே முன்னோடிகள் நாம்தான். அவர்கள் காட்டிய வழியில் செக்ஸை அணுக என்னால் இயன்ற சில விஷயங்களை இதன் மூலம் பகிர ஆசைப்படுகிறேன். செக்ஸில் ஏற்படும் சந்தேகங்கள், சிக்கல்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கம் சொல்லப் போகிறேன். பல சந்தேகங்கள் இருக்கின்றன நம்மவர்களுக்கு... உதாரணமாக, நடுத்தர வயது ஆண் ஒருவர்  என்னிடம் ஒரு பிரச்னையோடு வந்தார். தனக்கு செக்ஸ் ஆசை இருப்பதாகவும் ஆனால், தன் பிள்ளைகள் வீட்டில் இருப்பதாகவும் மாதத்தில் ஒருமுறை மனைவியைச் சந்திப்பதே அரிது என்றும் சொன்னார். சேர்ந்து ஒன்றாகத் தூங்கவே வாய்க்காதபோது, அவருக்குள் எழும் செக்ஸ் ஆசைகளை யாரிடம் சொல்வார்? என்னிடம் தீர்வுக்காக வந்தார். குற்ற உணர்வும் அவரிடம் தலைதூக்கி இருந்தது.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!



செக்ஸைக் கொண்டாடிய தேசத்தில் ஒரு மனிதனின் இயல்பான பாலுணர்வுக்குத் தீர்வு தராத சமூகம்மீது கோபமே வருகிறது. தங்கள் தகப்பனுக்கும் தாய்க்கும் செக்ஸ் உணர்வே தோன்றாது என, படித்த அந்தப் பிள்ளைகள் எப்படி நினைத்தார்கள்? எங்கே நம் கலாசாரத்தைத் தொலைத்தார்கள்? இயல்பான செக்ஸ் உணர்வைத் தவறான ஒன்றாக சித்தரித்தது யார்? அந்த மனிதர் கட்டுப்படுத்தும் இயல்பான ஆசைகள் விபரீத விளைவுகளை உண்டு பண்ணிவிடாதா? நாட்டில் பல குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதற்கான மூலகாரணமே இதுபோன்ற செக்ஸ் அடக்குமுறைதானே! நரைத்த வயதிலும் மனைவியோடு ஆரோக்கியமான செக்ஸை அனுபவித்து வாழ்ந்தவர்கள்தானே நம் முன்னோர். இந்த அடிப்படைப் புரிந்துகொள்தல்கூட இல்லாத சமூகமாக நாம் எப்போது மாறினோம்?

சமீபத்தில் ஓர் இளைஞன் வந்திருந்தான். ஆரோக்கியமான உடல், அழகான தோற்றம். என்னைப் பார்த்த முதல் நிமிடத்திலேயே குழந்தையைப்போல உடைந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டான். முதலிரவில் அவனுக்குக் கசப்பான உணர்வு ஏற்பட்டிருக்கிறது. உடலுறவில் அவனால் ஈடுபடவே முடியவில்லை. அவன் ஆண் குறி செயல்படவே இல்லை. அவனால் செக்ஸ் உறவுக்குத் தயாராக முடியவில்லை. அவன் பாலியலைக் கற்றுக்கொண்டதெல்லாம் நீலப்படங்களை மட்டும் பார்த்துத்தான். அதில் காட்டப்படுபவைதான் நிஜத்திலும் என நம்பி ஏமாந்துபோய்விட்டான். அவன் மனைவி விளக்கொளியை எரியவே விடவில்லை. அவளது கூச்ச சுபாவத்தைப் போக்கும் முயற்சியை அவன் யோசிக்கவே இல்லை. காரணம், `அதெல்லாம் அதுவாகவே நடக்கும்’ என யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவையில்லாத டென்ஷன், அசதி, அதீத ஆர்வம் எல்லாம் குழப்பியடிக்க எல்லாமே தோல்வியில் முடிந்திருக்கிறது. இவனுக்குப் பெண்ணுடல் பற்றிய அடிப்படைப் புரிந்துகொள்தல் இல்லை. பயந்துபோய் வலியில் அந்தப் பெண் கத்தி ஊரையே கூட்டிவிட்டாள். அது அவர்கள் இருவருக்குமே மனரீதியான பாதிப்புகளை உண்டு பண்ணியிருந்தது. அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை கொடுத்தேன் என்பதைப் பிறகு விரிவாகச் சொல்கிறேன். செக்ஸ் என்றால், நம்மவர்களுக்கு இருக்கும் புரிந்துகொள்தல் அவ்வளவுதான் என்பதற்காக இதை இங்கு சொல்கிறேன்.

இன்னொரு இளைஞன்... திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொண்டால்தான் மனைவியைச் சந்தோஷப்படுத்த முடியும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவன் நேரடியாகக் களமிறங்கியதன் விளைவு என்ன தெரியுமா? பால்வினை நோய்! நோயைத் தானமாக வாங்கி அதிலிருந்து மீள மருத்துவர்களிடம் அலைந்துகொண்டிருக்கிறான் பாவம். மேலே சொன்ன இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் மூல காரணமே நம் பாரம்பர்ய வேரை நாம் மறந்ததுதான். நம் இயல்பைத் தொலைத்ததுதான். மனித உடலும் மனமும் இணைந்து ஒரு புள்ளியில் நிகழும் அற்புதமான நிகழ்வுதான் செக்ஸ். அதில் எழும் பிரச்னைகளுக்குத் தகுந்த மருத்துவர்களைப் பரிந்துரை செய்வதுதான் இத்தொடரின் நோக்கம். அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் தவறான ஆலோசனைகளைப்பெற்று மன உளைச்சலில் தவிப்பவர்களுக்கு இந்தத் தொடர் மூலம் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல முடியும் என நம்புகிறேன். நான் மருந்து மாத்திரைகள் கொடுக்கப் போவதில்லை. ஆனால், நடுக்கடலில் சிக்கித் தத்ததளிக்கும் ஒரு கப்பலைப்போன்ற மனநிலையில் தவிப்பவர்களுக்குச் சரியான திசை காட்டும் கலங்கரை விளக்கம்போல இந்தத் தொடர் மூலம் வழிகாட்டிக் கரை சேர்க்க முடியும் என நம்புகிறேன். உங்கள் சந்தேகங்களைத் தாராளமாக, தயக்கமில்லாமல் டாக்டர் விகடனுக்கு அனுப்பிவையுங்கள். அதற்கான பதிலை நான் அடுத்தடுத்த பகுதியில் சொல்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தொடரின் நோக்கத்தை ஒரே வரியில் சொல்வதென்றால் அது என்னவாக இருக்கும் தெரியுமா? அதைத்தான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

ஆம். சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

(கற்றுத் தருகிறேன்...)

தொகுப்பு: ஆர்.சரண்