மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

கு.கணேசன் பொதுநல மருத்துவர்டெக்னாலஜி

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சமயத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி பிரச்னைகளில், கீழ் முதுகு வலி (Low Back Pain) இரண்டாம் இடத்தில் உள்ளது.   

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

காரணங்கள்

காய்ச்சல் என்பது நோயின் அறிகுறி என்பதுபோலவே, கீழ் முதுகு வலியும் ஒரு நோயின் அறிகுறிதான். இதுவே தனிப்பட்ட நோயல்ல! இதற்கு முதுகைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter Vertebral Disc) எனப்படும் சவ்வு ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்னைகளை முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!பணி நிமித்தமாகத் தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் உட்காருவது, தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச்சத்துக் குறைவு, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு சவ்வில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்றுநோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரலாம். இது 50 வயதுக்கு மேல் வரக்கூடும்.

கீழ் முதுகு வலிக்கு முதுமையும் ஒரு காரணமாகலாம். முதுமையில் முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள சவ்வு தேய்ந்துவிடுவதால் வலி வரும். புதிதாக வாங்கிய பந்தை கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும். அதுபோலவே வயதாக ஆக, சவ்வில் நீர்ச்சத்து குறைந்து விடுவதால் குஷன்போல் இயங்குகிற தன்மையும், அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மையும் குறைவதால் முதியவர்களுக்கு முதுகுவலி வருகிறது.

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயதாகும்போது கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்து மிருதுவாகிவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) என்று பெயர். இந்த எலும்புகள் விரைவில் தேய்ந்து கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

சியாட்டிகா என்பது என்ன?

முதுகு வலிக்குப் பிரதான காரணங்கள் இரண்டு. ஒன்று, சவ்வு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முள்ளெலும்புகளின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகி, அந்த நரம்பு அழுத்தப்படுகிறது. அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது; நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல், அந்த நரம்பு செல்லும் பாதையான கால்களில் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’ (Sciatica) என்று பெயர் வந்தது.  

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

ஆரம்பத்தில் இந்த வலியானது கீழ் முதுகில் அவ்வப்போது ஏற்படும். திடீரென்று ஒருநாள் இந்த வலி கடுமையாகி, தொடைக்குப் பின்புறத்திலோ, கீழ் முதுகிலிருந்து கால் முழுவதுமாகவோ மின்சாரம் பாய்வதைப் போல் ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, நடக்கும் போது வலி அதிகமாகும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக கால் மரத்துவிடும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாகத் தும்மினாலோ முக்கினாலோ வலி கடுமையாகும். கால்கள் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.

பரிசோதனையும் பழைய சிகிச்சையும்

முதுகு எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற முதுகு வலியானது வலி நிவாரணிகள் மூலமும், ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளாலும் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு முதுகுத்தண்டுவடத்தில் ஸ்டீராய்டு அல்லது வலி மரப்பு ஊசிகள் போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.

மாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை!

தொடர்ந்து வலி இருக்குமானால், நடக்க வோ நிற்கவோ குனியவோ முடியவில்லை என்றால், கால் மரத்துப்போனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். முன்பு முதுகைக் கீறி, முதுகுத் தசைகளைத் திறந்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இடம் பெயர்ந்துவிட்ட சவ்வை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் உலோகத்தால் ஆன செயற்கை சவ்வை வைத்துவிடுவார்கள். முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது, அங்குள்ள நரம்புகளைத் தாக்கிவிட்டால் கால்கள் செயலிழந்து போய்விடும் எனப் பலரும் பயந்து, இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.   இப்படிப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தற்போது ‘நுண்துளை முது்கெலும்பு அறுவை சிகிச்சை’ (Minimally invasive endoscopic spine surgery) அறிமுகமாகி யுள்ளது. முதுகில் சவ்வு விலகும் பிரச்னையை இது எளிதில் போக்குகிறது.

நவீனச் சிகிச்சை செயல்முறை

கீழ் முதுகில் மூன்று சிறு துளைகளை மட்டும் போட்டு, அத்துளைகள் வழியாக எண்டோஸ்கோப்பி கருவியை நுழைக்கிறார் மருத்துவர். அதன் உள்முனையில் கேமரா, விளக்கு, நுண் அறுவைக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. கருவியில் உள்ள லென்ஸ் முதுகெலும்பின் உள்அமைப்பைப் பல மடங்குப் பெரிதுபடுத்திக் காண்பிக்கிறது. அடிப்படைக் கோளாறு தெளிவாகத் தெரிகிறது. மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களையோ, எலும்புகளையோ, நரம்புகளையோ மருத்துவர் தொடுவதில்லை; அகற்று வதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை குறைந்துவிடுகிறது. இந்த நவீன அறுவை சிகிச்சையில் கிடைத்துள்ள மிகப் பெரிய பலன் இது. மேலும், முதுகெலும்பு விலகி இருந்தாலோ, முறிந்து இருந்தாலோ பிளேட் மற்றும் ஸ்குரூ பொருத்தி அவற்றைச் சரிப்படுத்தமுடியும். எலும்பு தேய்மானம், கூன் விழுதல், பிறவியிலேயே முதுகெலும்பு வளைதல் போன்றவற்றுக்கும் ஆரம்பத்திலேயே இந்தச் சிகிச்சையை மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கிறது.

நன்மைகள் என்ன?

முன்பு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, ரத்த இழப்பு இருக்கும் என்பதால், சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்களுக்கு நோயாளிக்கு உடல் வலு குறைந்ததுபோல் இருக்கும். நோயாளிகள் அதிகக் காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். அதிக நாள்களுக்கு ஓய்வு தேவைப்படும். வழக்கமான பணிகளைச் செய்வதற்கும் சில தடைகள் உண்டு. இவ்வாறான பிரச்னைகள் நவீனச் சிகிச்சையில் மிகவும் குறைவு. நோயாளி குறைந்த நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கினால் போதும். சில வாரங்களில் அவர் வேலைக்கும் திரும்பிவிடலாம். இந்த நவீன அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 

(தேடுவோம்...)