
டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த் - 2
ஆய கலைகளில் செக்ஸையும் சேர்த்தாயிற்று. ஆனால், செக்ஸ் என்பதைக் கலையாகச் செய்கிறோமா..? நாள்தோறும் பரபரப்பாக றெக்கை கட்டிக் கொண்டு வாழும் இன்றைய யுகத்தில் செக்ஸை ஆழ்ந்து அனுபவிக்க நேரம் இருக்கிறதா..? செக்ஸ் என்பது ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றா..? இல்லை சிறுநீர், மலம் கழிப்பதைப்போல வெளியேற்றித் தணித்துவிடக்கூடிய ஒன்றா? இல்லை தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதைப்போலத்தான் உடலுறவா..? இப்படி எக்கச்சக்க கேள்விகளும் தொக்கி நிற்கின்றன. பலர் என்னிடம் நேரடியாகவே கேட்டுவிடுகிறார்கள். நல்ல ஆரோக்யமான செக்ஸ் உறவு என்பது எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்? நீடிக்க முடியும்? அதற்கான பதிலைக் கடைசிப் பத்தியில் சொல்கிறேன்.

தொடரைப் படித்துவிட்டு மெயில் மூலமும் போன் மூலமும் பல கேள்விகளை வாசகர்கள் அனுப்பி இருக்கிறார்கள். அதில் சிலரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்.
``இன்டெர்நெட்டில் கதியாகக் கிடக்கும் லட்சோப லட்ச ஆண்களில் ஒருவன் நான். ஆனால், என்னுடைய பிரச்னை வினோதமானது. ஒரு பெண்ணைப்போல ஃபேக் ஐடியில் பெண்களோடு சாட்டிங் செய்கிறேன். அவர்களுடன் நட்பாகி அவர்களிடம் பேசும்போதுக் கிளர்ச்சியடைகிறேன். அப்படி சாட்டிங் செய்யும் ஒவ்வொருமுறையும் சுய இன்பம் அனுபவித்து உறங்கச் செல்கிறேன். அப்படிச் செய்தால்தான் நன்கு உறக்கம் வருகிறது. இப்படி ஃபேக் ஐடியில் ஒளிந்துகொண்டு சாட் செய்வது வாடிக்கையாகிவிட்டது. நான் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படிச் செய்து சுய இன்பம் அனுபவிப்பது நல்லதா கெட்டதா..?’ என்று கேட்டிருக்கிறார் ஓர் இளைஞர்.
இதற்கான என் பதில்: ``இது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதில்லை. மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. சைபர் செக்ஸ் என்று சொல்வோம். ஒருநாள் உங்களுடையது ஃபேக் ஐடி என்ற உண்மை தெரியவரும்போது நம்பிக்கை உடைந்து அவர்களிடம் திட்டு வாங்க வேண்டிவரும். ஓப்பனாக ஸ்டேட்டஸில் ‘துரோகி’, ‘சீட்டர்’ என்று உங்களைத் திட்டும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். ஒருவேளை தெரியாமலே இதைத் தொடர்ந்தாலும். நீங்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவீர்கள். அப்படி சாட் செய்து சுய இன்பத்தில் ஈடுபட்டால்தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு மனநிலை மாறி இருக்கும். அது ஆபத்தானது. மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். அது பர்சனாலிட்டி டிஸார்டரை உண்டு பண்ணும். ஏனென்றால் இது இரட்டை வாழ்க்கை. இதை உடனடியாகக் கைவிடுவதுதான் நல்லது. நீங்கள், இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு ஆரோக்யமான நேர்முகமான நட்பினைப் பெண்களுடன் பாராட்டுவதுதான் மனசுக்கும் நல்லது.’’

25 வயதுள்ள இளைஞர் எனக்கு மெயில் அனுப்பி இருக்கிறார். ‘`நான் செக்ஸுவலா ஃபிட்டா இல்லையா என்பதைத் தெரிஞ்சுக்க மருத்துவரீதியான டெஸ்ட் எதுவும் இருக்கா டாக்டர்..?’’- இதுதான் அவருடைய கேள்வி.
இதற்கான என் பதிலை மெயில் செய்திருந்தேன். அது: ``செக்ஸுவல் ஃபிட்னெஸ்’ என்பதே அபத்தமான வார்த்தைதான். ஏனென்றால் ஓர் ஆண் உடல்ரீதியாக ஆரோக்யமாக இருப்பான். ஆனால், மனரீதியாகப் பிரச்னை இருக்கும். சிலர் மனரீதியாக நன்றாக இருப்பார்கள். ஆனால், உடல் ரீதியாகப் பிரச்னை இருக்கும். இதெல்லாம் இல்லாமல் ஓரினச் சேர்க்கையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டுமே நார்மலாக இருக்கும். ஆகையால் உறுதியாக ஓர் ஆணோ பெண்ணோ செக்ஸுவலாக ஃபிட் எனச் சொல்வது ரொம்பக் கஷ்டம். அது விஞ்ஞானப் பூர்வமானதும் கிடையாது. பொதுவாக செக்ஸில் ஈடுபடுவதற்கு உடல் ரீதியாக என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என செக் பண்ணித் தெரிந்துகொள்ளலாம். ஜனன உறுப்புகளில் பிரச்னை இருக்கலாம். அவற்றைப் பார்த்து நன்றாக இருக்கும் என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதேமாதிரி வெளியே தெரியாத சில மனப் பிரச்னைகளும் இருக்கும். அதற்கு மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஃபிட் என ஒன்றுமே இல்லை.’’
பெண்கள் சார்பாக ஒரு கேள்வி...
``நான் 5 மாத கர்ப்பிணி. செக்ஸில் ஈடுபடும்போது சிரமமாக ஃபீல் ஆகிறது. எதனால் இப்படி? இதற்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்?’’

அதற்கான என் பதில்: ``கர்ப்பமாக இருக்கும்போது பொசிஷன் காரணமாக வசதியாக இல்லாமல் இருப்பது உறவில் ரொம்பவே சகஜம். `சென்ட்ரல்ப்ரீவியா ப்ளாசென்டா’ போன்ற கர்ப்பப்பை சிக்கலும், ஆண் மற்றும் பெண் குறியில் நோய்த்தொற்றுகள் இருப்பதும், பெண்ணின் மேல் ஆண், அவள் வயிற்றின் மேல் பாகம் அழுத்த உறவில் ஈடுபடும்போதும் இதுபோல ஏற்படுவதுண்டு. கர்ப்பமாக இருக்கும்போது உறவில் ஈடுபடக் கூடாது என்பதும், கர்ப்பமாக இருக்கும்போது உறவில் ஈடுபட்டால் பிரசவம் ஈஸியாக இருக்கும் என்பதும் இரண்டுமே மூடநம்பிக்கைகள்தான். இருவருக்கும் ஆவல் இருந்து பெண்ணுக்கு வசதியான பொசிஷனை இருவரும் கலந்தாலோசித்து மெதுவாக உறவில் ஈடுபடலாம். இதுபோன்ற காலங்களில் உறவுகொள்வது மனரீதியாக இருவருக்குமே நெருக்கத்தைக் கொடுக்கும் என்பது ஓரளவு உண்மை. வயிற்றுப்பகுதி அழுத்த உறவில் ஈடுபடுவதுதான் சிக்கலாகும். மற்றபடி நீங்கள் தாராளமாக உறவில் ஈடுபடலாம். உடனடியாக நீங்கள் ரெகுலர் செக்-அப் செல்லும் மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெறுங்கள்.’’

தொடரின் ஆரம்பத்தில் கேட்டிருந்த கேள்விக்கான பதில் என்ன தெரியுமா?
`Coital thrusting’ எனப்படும் ஆண்குறியால் பெண்குறிக்குள் உந்தித்தள்ளி விந்தணு வெளியேற்றப்படும் வரையிலான `அனுபவிக்கும்’ இன்பத்துக்கு நேர வரையறையெல்லாம் இல்லை. மனிதருக்கு மனிதர் செக்ஸின் கால அளவு வேறுபடும். அவ்வளவு ஏன்? ஒரே மனிதனுக்கே ஒவ்வொருமுறையும் வெவ்வேறு நேர அளவில் இருக்கும்.
உலகப்புகழ்பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் கின்ஸியும் அவர் டீமும் உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் உலகம் முழுவதுமுள்ள 75 சதவிகித ஆண்களுக்கு 2 நிமிட தொடர் உந்துதலுக்குப் பிறகு விந்து பெண்ணுறுப்புக்குள் செலுத்தப்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். மற்றொரு உலகப்புகழ்பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் களான மாஸ்டர்ஸ் & ஜான்சன் ஆகியோர் ஒரு சராசரி ஆண், உடலுறவில் ஈடுபட்ட 4 நிமிடங்களில் உச்சக்கட் டத்தை எட்டி விந்தணுவைப் பெண்ணுறுப்புக்குள் செலுத்திவிடுகிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய செக்ஸ் ஆராய்ச்சியாளர் ப்ரெண்டன் ஜெட்ச்சா 5.4 நிமிடங்களை உறவு நீடிக்கும் நேரமாகக் கணித்திருக்கிறார். ஒரு நிமிடத்தில் உச்சக்கட்டத்தை அடைவதும், 10 நிமிடத்துக்கு மேல் ஆகியும் உச்சக்கட்டத்தை எட்டாமல் இருப்பதும் மனம் சம்பந்தப்பட்டது. நேரம் கால அளவெல்லாம் செக்ஸுக்கு கணிப்பதே அபத்தம் என்பதே என் எண்ணம்.
(கற்றுத் தருகிறேன்...)
தொகுப்பு: ஆர்.சரண்