
தேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்

தேன்... சுவையில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் அமிர்தத்துக்கு இணையானது. பூக்களிலிருந்து தேனீக்கள் இந்த தேவாமிர்தத்தைச் சுமந்து வருகின்றன. தூய்மையான தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருள்களோ கலந்திருக்காது. இன்றைக்கு இயற்கை விவசாயம், பாரம்பர்யம் நோக்கி மக்கள் கவனம் திரும்பியிருக்கும் சூழல் தேனுக்கும் முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. இது குறித்த A டு Z தகவல்களைப் பார்ப்போம்.


சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உயர்வாகச் சொல்லப்படும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது தேன். எளிதில் கெட்டுப்போகாத தன்மைகொண்டது. மனிதர்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நினைத்தாலே மயக்கும் தித்திப்புச் சுவை கொண்ட தேன், நமது ரத்தத்தின் மூலக்கூறைப் போன்ற அமைப்பைக் கொண்டது. இதன் வேதியியல் அமைப்புகள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. இதனால் செரிமான சக்தி குறைந்தவர்கள்கூட இதைச் சாப்பிடலாம். மிதமிஞ்சிய இனிப்புச்சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்குப் பக்கவிளைவை ஏற்படுத்தாதது இதன் சிறப்பு.

உயிரினங்களில் பெரும்பகுதி பூச்சிகளால் ஆனவை. தேனீயும் பூச்சி இனத்தைச் சேர்ந்ததே. பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள் நேரடியாக கூட்டில் அடைத்து வைப்பதையே தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பூக்களில் இருந்து குளுகோஸை உணவாக அருந்தும் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒருவித திரவம்தான் தேன்.
ஒரு தேனிக் கூட்டம் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூக்களில் இருந்து இனிப்புத் துளியைச் சேகரிக்கின்றன. அதைத் தேனாக மாற்றிப் பிறகு தங்களது தேவைக்காகச் சேமித்துவைக்கின்றன. இதைத்தான் நம் ஆரோக்கியத் தேவைக்காகவும், மற்ற ஊட்டத்துக்காகவும் பயன்படுத்துகிறோம்.

தேனீக்கள் தாங்கள் இருக்கும் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையுள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் பூக்களிலிலிருந்து இனிப்புத் துளிகளைச் சேகரிக்கின்றன. இவற்றைத் தனது வயிற்றில் செலுத்திச் சில வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. கடைசியில் அது தேனாகிறது.
காடு, மேடு, மலைகள் எனப் பல இடங்களில் அலைந்து திரிந்து தேனீக்கள் பல்வேறு பூக்களிலிருந்து தேனைத் தயாரிக்கின்றன. மனிதர்கள் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியவை தேனீக்கள்.

சின்னஞ்சிறு காயத்தில் தொடங்கிப் புற்றுநோய் வரையிலான பல பிரச்னைகளுக்குத் தேன் மிகச் சிறந்த மருந்து. உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும்கூட தேன் உறுதுணையாக இருப்பது ஆச்சர்யப்படவேண்டிய ஒன்று.
தேனீக்களின் கடுமையான உழைப்பில் கிடைக்கும் தேனை மனிதர்கள் திருடினாலும் அதன் இனிப்புத்துளியைத் தேனாக மாற்றும் தொழில்நுட்பத்தை மட்டும் இன்றுவரை மனிதர்களால் திருட முடியவில்லை.
தேனீக்களில் ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என மூன்று வகை உண்டு. வேலைக்காரத் தேனீக்கள்தான் இனிப்பைத் தேனாக மாற்றிச் சேமித்து வைக்கின்றன.

ராணித் தேனீ சர்வ வல்லமை படைத்தது. ஒரு கூட்டில் ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணித் தேனீக்கள் உருவானால், தகுதியான ஒரு ராணித் தேனீயை மட்டும் விட்டுவைத்துவிட்டு மற்ற ராணித் தேனீக்களை வேலைக்காரத் தேனீக்கள் கொன்றுவிடும்.
தேனீக்களில் `மலைத் தேனீ’, `கொம்புத் தேனீ’, `கொசுத் தேனீ’, `இந்தியன் தேனீ’, `இத்தாலியன் தேனீ’ எனப் பல வகைகள் உள்ளன. இதில் மலைத் தேனீ மலைப் பகுதிகளில் தேனைச் சேகரிக்கும். இத்தாலியன் தேனீயும் இந்தியன் தேனீயும் பெருமளவில் தேனீப் பெட்டிகள் மூலம் தேனைச் சேகரிக்கும் முறைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக்கொல்லிகளால் அழிந்து வரும் தேனீக்கள், நமது உணவு உற்பத்திக்கும் பெரும் துணையாக இருக்கின்றன. தேனீக்கள் பூக்களின் மீது அமர்ந்து இனிப்பைச் சேகரிக்கும்போது ஏற்கெனவே எடுத்து வரப்பட்ட மகரந்தத்தைச் செடி, கொடிகள், மரங்களிடம் பரிமாறிச் செல்லும். இந்த மகரந்தம் விவசாயத்துக்கும் உணவு உற்பத்திக்கும் அவசியமானது. மகரந்தத்தைக் கொண்டுதான் பூக்கள் அடுத்த நிலையான கனிகளாகவும் காய்களாகவும் செழிக்கின்றன.
மலைத்தேன் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பொதுவாக தேனின் மருத்துவக் குணம் அது எடுக்கப்படும் மலர்கள், மரங்களின் தன்மை, அந்தந்த நிலத்தின் தன்மை போன்றவற்றைச் சார்ந்தது. ஆனால், `பல மலர்த் தேன்’தான் அதிக அளவில் விற்பனையாகும் ஒன்று. பல மலர்த் தேன் என்பது பல்வேறு மலர்களையும் கனிகளையும் நுகர்ந்து இனிப்பைச் சேகரித்துத் தேனாகக் கொள்வது.

`ஒரு மலர்த் தேன்’ என்பது சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை ஏதோ ஒரு வகையான மலர்கள் மட்டும் பூத்திருக்க, அதிலிருந்து எடுக்கப்படும் தேன். 10 கிலோமீட்டர் தூரம் வரை வெறும் நாவல் மரங்களோ அல்லது வேப்ப மரங்களோ இருந்தால் அவற்றிலுள்ள பூக்களை நுகர்ந்து சேமிப்பது `நாவல் தேன்’, `வேம்புத் தேன்’ எனப்படும். இவற்றின் மருத்துவ குணங்கள், நிறம், அடர்த்தி, சுவை போன்றவை அந்தந்த மரத்தின் பூக்களைக் கொண்டு மாறுபடும்.
முருங்கைத் தேன் என்பது முருங்கை மரங்கள் அதிகமாகக் காணப்படும் இடங்களிலிருந்து பெறப்படும் தேன். அதாவது இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் 60 சதவிகிதம் ஒரே மரங்கள் இருந்தால் அந்த இடத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து எடுக்கப்படும் தேன் அந்த மலரின் தேன் எனப்படும்.

இந்தத் தேன் ஒவ்வொன்றுக்கும் சுவை, நிறம், மணம், குணம் என அனைத்தும் வேறுபட்டிருக்கும். குறிப்பாக மருத்துவ குணம் வேறுபடும். அந்த வகையில் `நாவல் தேன்’, `தும்பைத் தேன்’, `வேம்புத் தேன்’, `துளசித் தேன்’, `குங்குமப்பூ தேன்’... எனப் பல வகைகள் உள்ளன.
உலகில் பலவகையான தேனீக்கள் உள்ளன. இடம், தட்பவெப்பநிலை, மண், மலர்களைச் சார்ந்து தேனீக்களின் உடலமைப்பு அமையும். இந்த அமைப்புகளுடன் அவை வாழும் இடத்தைப் பொறுத்து தேனீக்களின் பெயர்களும் இருக்கும். தேனீக்கள் மட்டுமல்லாமல், அவை சேகரிக்கும் தேனைப் பக்குவப்படுத்தும் முறைகளுக்கும், அவற்றைச் சேமித்து வைக்கும் முறைகளுக்கும்கூட பல பெயர்கள் உள்ளன. உதாரணத்துக்கு `இஞ்சித் தேன்’, `நெல்லித் தேன்’ ஆகியவற்றைச் சொல்லலாம்.

சுத்தமான தேனில் 38 சதவிகிதம் குளுகோஸ் உள்ளது. தேனுக்குக் காலாவதி கிடையாது என்றாலும் குளுகோஸ் இருப்பதால் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் உறைந்து போவதும், அதன் நிறம் மாறுவதும் இயற்கையாக நிகழும்.
தேனை எடுக்கும் மலர்களின் அடிப்படையிலும் அதன் நிறங்களில் நிறைய வித்தியாசங்கள் காணப்படும். ஆனால், இன்றைக்குச் சந்தைகளில் கிடைக்கும் தேனில் இந்த மாற்றங்கள் இருக்காது. காரணம் அவற்றில் சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

ரப்பர் தோட்டத்துத் தேனுக்கும் நாவல் மரத் தேனுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அவற்றின் மருத்துவ குணங்கள் வேறுபடும். இப்படித் தேன் பெறப்பட்ட தோட்டம், அதைப் பக்குவப்படுத்தும் முறையைக் கொண்டும் தேனின் தரத்தைப் பிரிக்கலாம்.
எந்தவிதமான கலப்படமும் இல்லாத தூய்மையான தேனில் பல உயிர்காக்கும் காரணிகள் உள்ளன. பாலிபினால் (polyphenol), ஃப்ளேவனாய்டுகள் (flavonoids), புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. எல்லா இயற்கை உணவுகளுடனும் இயற்கையாகச் சேரும் தேன், பல நோய்களிலிருந்து நம்மைக் காக்க உதவக்கூடியது.

வணிகரீதியாகத் தேனில் பல கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பல வகையான இனிப்பு சிரப்புகள் மற்றும் சர்க்கரைப்பாகு, வெல்லப்பாகு, சோளப்பாகு போன்றவை கலக்கப்படுகின்றன. அதோடு, பலவகை சுவையூட்டி கள், மணமூட்டிகளும் கலக்கப் படுகின்றன. இவை உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தேன் நல்ல தேனா... கலப்படமில்லாத தேனா? என்பதை வீட்டிலேயே எளிமையான வழிகளில் பரிசோதிக்க முடியும். அப்படிச் சில வழிகள் இதோ...

கட்டைவிரல் சோதனை: ஒரு துளி தேனைக் கட்டைவிரலில் வைத்து, அது சிந்தினாலோ அல்லது பரவினாலோ உண்மையான தேன் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நீர் சோதனை: ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை நிரப்பி அதில் தேனை ஊற்ற வேண்டும். அப்போது தேன் தண்ணீரில் பரவினால் அது கலப்படத் தேன், நேரடியாக அடியில் சேர்ந்தால் உண்மையான தேன்.

தீப்பெட்டிச் சோதனை: தீக்குச்சியை எடுத்து அதில் தேனைத் தொட்டுப் பற்றவைத்தால் உடனே பற்றிக்கொள்ளும். நன்றாக ஜுவாலைவிட்டு எரியும். கலப்படத் தேன் என்றால் எரியாது. கலப்படத் தேனில் ஈரப்பதம் இருக்கும்.
வினிகர் சோதனை: ஒரு டீஸ்பூன் தேனுடன் சிறிது நீர் சேர்த்து, அதில் இரண்டு மூன்று சொட்டு வினிகரைச் சேர்க்க வேண்டும். அப்போது அந்தக் கலவை நுரைத்தால் அது கலப்படத் தேன் என்று தெரிந்துகொள்ளலாம்.

உண்மையான தேனைச் சாப்பிட்டால் உடனடியாக உடலில் உள்ள நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். உண்மையான தேன் உடலில் இருக்கும் புண், வடு போன்றவற்றைப் போக்கும். தேனில் கலப்படங்களைக் கண்டறிய பல ஆய்வகச் சோதனைகளும் உள்ளன.
தேனை மேலே இருந்து கீழ் நோக்கி ஊற்றினால் அது அடியில் அப்படியே படிந்திருக்கும், உடையாமல் ஒரே நேர்கோட்டில் வரும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், போலித் தேனும் இதேபோன்ற தன்மைகள் இருக்கும்படி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே இந்த வித்தியாசத்தை எளிதில் அறிந்துகொள்ள முடியாது.

மரங்கள், பூக்கள் போன்ற வற்றில் இருந்து தேனை எடுக்கும் தேனீக்கள் நச்சு மலர்களில் இருந்து தேனை எடுக்காது என்பது ஆச்சர்யமான உண்மை. ஆம்... அரளி போன்ற மலர்களில் தேனீக்கள் தேன் எடுக்காது. எனவே, தேனில் நச்சுகள் இருக்குமோ அவை உடல் உபாதைகளை ஏற்படுத்துமோ என்ற வீண் அச்சம் தேவையில்லை. தேன் கெட்டுப்போகாத ஒரு பொருள்.

அதிக வெப்பமோ, குளிரோ இல்லாத இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தால் பல ஆண்டுகளுக்குத் தேனைப் பாதுகாக்கலாம். அதேபோல் தேனைப் பயன்படுத்தும்போது ஈரமில்லாமல் சுத்தமான முறையில் எடுக்க வேண்டும். தேனை ஒரு கரண்டியால் எடுத்து உள்ளங்கையில் ஊற்றி நக்கிச் சாப்பிட வேண்டும். நேரடியாக வாயில் ஊற்றக் கூடாது.
சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வில், உலகில் கிடைக்கும் நான்கில் மூன்று பங்கு தேனில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தேனில் எப்படிப் பூச்சிக்கொல்லிகள் என்கிறீர்களா? தேனீக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தையும் இனிப்புத்துளிகளையும் சேகரிக்கும் போது அவற்றுடன் அந்தச் செடியில் தெளிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகளையும் சேர்த்து எடுத்துவருகின்றன.

பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட தேனை உண்பதால் எந்த நோயும் உடலைவிட்டுப் போகப்போவதில்லை. மாறாக மேலும் புதிய புதிய நோய்களும் உபாதைகளும் வரும். கலப்படம் மட்டுமே தேனுக்கு அச்சுறுத்தல் என்று நினைத்திருந்தோம். ஆனால், அதைவிடப் பல மடங்கு பாதிப்பை பூச்சிக்கொல்லிகள் நிறைந்த தேன் தருகிறது.
சுத்தமான தேன் மலைவாழ் மக்களிடம் கிடைக்கிறது. அவர்களிடம் கிடைக்கும் தேன் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். உண்மையான தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதன் சுவை, தன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் தேனைக் கண்டறியும் அனுபவத்தைப்பெற்று, மற்ற தேன்களைச் சோதனை செய்து சாப்பிடுவது நல்லது.

தேனீப் பெட்டிகளை வீடுகளில் வைத்து நம் தேவைக்குத் தகுந்த தேனைப் பெறலாம். குறிப்பாக நகரங்களில் பூச்சிக்கொல்லிகள் இல்லாத தேனை மிக எளிதாகப் பெறலாம். காரணம் நகரங்களைச் சுற்றிச் செடிகளும் மரங்களும் உள்ளன. அவற்றில் பூக்கும் மலர்களில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்காது. அவற்றில் இருந்து இனிப்புத் துளிகளைச் சேகரித்துத் தேனை உருவாக்குகிறது தேனீ.

அன்றாடம் தம் உழைப்பால் தேனீக்கள் உருவாக்கும் தேனை மாதம் ஒருமுறை எடுத்து நமது குடும்பத்தினருடன் சுவைத்து மகிழலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் வேளாண்மை அறிவியல் நிலையங்களிலும் குறைந்த விலையில் தேனீப்பெட்டிகளை வாங்கலாம்.
தேனீப்பெட்டிகளின் உள்ளே எறும்புகள், பல்லிகள் நுழையாதவாறு வீட்டைச் சுற்றி நிழலில் வைத்திருக்க வேண்டும். வெயில் காலங்களில் வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. மழைக்காலங்களில் அவற்றுக்கு வெல்லப்பாகு வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை தேனை நாமே எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைக்கு மார்க்கெட்டுகளில் விற்கப்படும் தேனில் கலப்படமே நிறைந்திருக்கிறது. கலப்படம் என்றால், சர்க்கரைப்பாகு கலந்து விற்கப்படுவதல்ல. தேனீக்களின் பெட்டியின் முன்னால் ஒரு ட்ரேயில் மொலாசஸ் கரைசலை வைப்பார்கள்.

தேனீக்கள் பொதுவாக 10 முதல் 16 கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று தேன் சேகரித்து வருபவை. அப்படிப்பட்ட தேனீக்களுக்கு மொலாசஸை உணவாகக் கொடுத்து சோம்பேறியாக்கிவிட்டார்கள். ஆக, பூக்களில் இருக்கும் இயற்கையான தேனை உறிஞ்சி அதன் வயிற்றிலிருந்து சுரக்கும் தேனுக்கும் மொலாசஸை உண்டு அதன் பின்னர் நடக்கும் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்? இந்தத் தேனைக் கலப்படத் தேன் என்று சொன்னால் மிகையாகாது.

ஒரிஜினல் தேன் அமிர்தத்துக்கு ஒப்பானது. சர்க்கரைநோயில் தொடங்கி புற்றுநோய் உட்பட ஏராளமான நோய்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூடியது. இதற்கு எளிய வைத்தியம் உள்ளது. ஓர் இளநீரில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கிப்போட வேண்டும். அதில் மூன்று டேபிள்ஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சையின் சாறு சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து (காலையில்) கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்து ருசித்துக் குடிக்க வேண்டும். இதை எல்லா வயதினரும் தொடர்ந்து குடித்து வந்தால் எல்லா நோய்களின் தீவிரமும் குறையும்.

பொதுவாக வெந்நீருடன் தேன் சேர்த்துப் பருகினால், உடல் களைப்பு நீங்கும். ஓடி ஆடி வேலை செய்பவர்கள், கடின உழைப்பு செய்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது நல்ல சக்தி தரக்கூடியது. இழந்த சக்தியை மீட்க உதவக்கூடியது, தேன்.
இளமையுடன் இருக்க விரும்புபவர்கள் தினமும் சுத்தமான தேனை அருந்த வேண்டும். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக தேன் அருந்தி வர வேண்டும். ஒரு டீஸ்பூன் தேனைச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்படையும். சிலருக்கு கை, கால் மற்றும் விரல்களில் நடுக்கம் இருக்கும். அப்போது ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து குடித்து வந்தால் பிரச்னை நீங்கும்.

வயதான தோற்றம் சீக்கிரம் வந்துவிட்டது என்று கவலைப்படுபவர்களுக்கு ஓர் எளிய மருந்து. இரண்டு நாட்டுக்கோழி முட்டைகளுடன் ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் பால், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறு துண்டு சவக்காரம் போட்டால் ஷாம்பூ போல் நுரைத்து வரும். இதை உடம்பு முழுக்க நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

வாரம் இரண்டுநாள் இதைச் செய்து வந்தால் சருமச் சுருக்கம் நீங்கித் தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும். இது உடலைச் சுத்தப்படுத்தும்; மேனி மிளிரச் செய்யும். இதில் எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பதால் சருமத்தை இறுகவைக்கும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் செய்து வந்தாலே உடலின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
படுத்த படுக்கையில் கிடப்பவர்கள் பாலுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்படும். அத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவார்கள். இரும்பு, தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் இருப்பதால் ரத்தம் விருத்தியாகும்.

உடல் பருமன் குறைக்கவும், கொழுப்பைக் கரைக்கவும், சக்தியை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் காலப்போக்கில் எடை குறையத் தொடங்கும்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஆல்ஃப்ரெட். 120 கிலோ உடல் எடையுடன் மிகவும் சிரமப்பட்ட அவர் தனது எடையைக் குறைக்க பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அப்போது வெறும் தேனை மட்டுமே சாப்பிட்டுத் தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டுவதுடன் நோயாளிகளின் எடையை அதிகரிக்கவும் தேன் உதவும். ஒரு டீஸ்பூன் தேனுடன் அதே அளவு இஞ்சிச் சாறு சேர்த்துக் காலை நேரத்தில் சாப்பிட்டுவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும்; ரத்தம் விருத்தியாகும். உடலுக்கு ஓர் எரிபொருளைப்போல் சக்தி தருவதில் தேனைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை.
சளி, கோழையை அகற்றுவதுடன் இருமலையும் நிறுத்தக்கூடியது, தேன். இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை நீங்கும். ஒரு டீஸ்பூன் தேனுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்துவந்தால் சளி விலகும். ஆடாதொடை இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி கரையும்.

துளசிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, தொண்டை வீக்கம், பிராங்கைட்டிஸ் (Bronchitis) எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை சரியாகும். வறட்டு இருமலுக்கும் தேன் சிறந்த தீர்வு தரும். நெல்லிக்காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

பார்லி அரிசியைக் கொதிக்க வைத்துக் கஞ்சியாக்கி வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இருமல், சளித்தொல்லை மற்றும் நுரையீரல் தொடர்பான எல்லாத் தொந்தரவுகளும் சரியாகும். தேனுடன் முட்டையும் பாலும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
அசிடிட்டி, செரிமானக் கோளாறுகள், குடல் நோய்களுக்குத் தேன் மிகவும் சிறந்தது. வயிற்றுவலியின்போது தொப்புளைச் சுற்றிலும் தேனைத் தடவிவந்தால் வலி நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்கு முன் இரண்டு கரண்டி தேனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் அதன் தீவிரம் குறையும்.

காய்ச்சலின்போது உணவு உட்கொள்ள முடியாது. அப்போது வெறும் தேனை மட்டும் சாப்பிட்டு ஊட்டம் பெறலாம். குறிப்பாக டைபாய்டு, நிமோனியா காய்ச்சலின்போது தேன் சாப்பிடுவது சிறந்தது. ஒரு டீஸ்பூன் நிலவேம்பு சூரணத்தை ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அதில் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்.
தேனில் உள்ள சர்க்கரை ஏற்கெனவே செரிமானமான நிலையில் இருப்பதால் நாக்கிலேயே அதன் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்கிறது. செரிமான மண்டலங்கள், உடல் உறுப்புகளைத் தொந்தரவு செய்யாதது என்பதால் நோய் தீவிரமாக இருக்கும் நோயாளிகளுக்குத் தேன் மிகச்சிறந்த உணவு.

இதயம், கல்லீரல் தொடர்பான நோய்களுக்குத் தேன் சிறந்த மருந்து. தேனுடன் பால், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும்; பித்தநீர்த் தொந்தரவு குறையும். மாதுளம்பழச்சாற்றுடன், சிறிது தேன் சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
இதய நோய் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலை வெதுவெதுப்பான நீருடன் தேன் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் தேனில் உள்ள ஃப்ளேவோனாய்டு (flavonoid), ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) போன்றவை இதய நோயின் தாக்குதலில் இருந்துப் பாதுகாக்கும்.

மூட்டுவலி உள்ள இடத்தில் தேனை நன்றாகத் தேய்த்துவிட்டால் வலி விலகும். அத்துடன் எந்த உணவு உண்டாலும் அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி வராது; மூட்டுகளில் தேய்மானமும் ஏற்படாது. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கீல்வாதம் சரியாகும்.
பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதால், வயிற்றுப்போக்கை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது, தேன். இது லேசான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு டேபிள்ஸ்பூன் தேனை இரவில் தூங்கச்செல்வதற்கு முன்னர் உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.

குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் தேன் சாப்பிட்டு வந்தால், கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்கும்.
கண் நோய் தொடர்பான மருந்துகளிலும் தேன் சேர்க்கப்படுகிறது. தேனுடன் வெங்காயச்சாறு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
ஹிஸ்டீரியா எனப்படும் மனநலப்பிரச்னைக்கு வெந்நீருடன் தேன் கலந்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
- எம்.மரியபெல்சின்

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.