
யோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்
மனிதனை ஏதாவது நோய் பாதித்தால், அதை உடல் தானாகவே சரிசெய்துவிடும் அல்லது குணமாக்கிவிடும். மனித உடல் ஓர் இயற்கை எந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது. சரியான வழிகாட்டுதல் இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். இயற்கைக்கு மாறான சிகிச்சைகள் நல்லதல்ல. உதாரணமாக ஒருவருக்குச் சளி பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை இயற்கை முறையில் குணப்படுத்தவே முயற்சி செய்ய வேண்டும். முதலில் சளியை வெளியேற்ற சிகிச்சை தருவதே சரியான முறையாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் உழைத்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். நேரமின்மையை ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு காலில் சக்கரத்தைக் கட்டியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என இருக்கும் நாம், உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குக் காற்றுக் குளியல் எனப்படும் சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும். காற்றுக் குளியல் சிகிச்சை ‘குளிர்க் காற்றுக் குளியல்’, ‘சூடான காற்றுக் குளியல்’ என இரண்டு வகைப்படும். இதில் இரண்டாவது வகையான சூடான காற்றுக் குளியலில் நீராவிக் குளியல் பல்வேறு நோய்களைத் தீர்க்கும்.

இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை நோய்க்கான காரணம் அறிந்து உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதே முக்கியப் பணி. அதற்கு நீராவிக் குளியல் உதவும். முற்காலங்களில் நீராவிக் குளியல் செய்வதற்கென Steam room என்ற ஒன்று கட்டப்பட்டிருக்கும். செராமிக் கற்களால் ஆன அந்த அறைகளைச் சுற்றிலும் நெருப்பு மூட்டப்படும். இதனால் வெப்பம் நிறைந்த அந்த அறைக்குள் செல்பவர்களது உடலில் வியர்வைத் துளைகள் திறக்கப்பட்டு நன்றாக வியர்த்துக் கொட்டும். இப்படி வியர்ப்பதால் கழிவுகள் வெளியேற்றப்படும். இந்தச் சிகிச்சைமுறை நாளடைவில் நவீனமாகிப் பெட்டி வடிவில் `ஸ்டீம் பாத் கேபின்' அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீரை ஆவியாக்கி அதைப் பெட்டிக்குள் செலுத்துவார்கள். அது அந்த அறையில் சூடான ஈரப்பதத்துடன் காணப்படும். அந்த அறைக்குள் இருக்கும் நமது உடலில், தோலின் வியர்வைத்துளைகள் விரிவடைந்து கழிவுகள் வெளியேற்றப்படும்; இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்படும். நீராவிக் குளியலால் உடல் இலகுவாகி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் குறையும்; ரத்தக் குழாய்கள் தூண்டப்படும். மேலும் செல்கள் புதுப்பிக்கப்படும்.
சுவாசக்கோளாறுகள், சைனஸ், மூச்சுக்குழாய் அழற்சி, அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு நீராவிக் குளியல் சிகிச்சை நல்ல தீர்வு தரும். சளித்தொல்லை, சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு முகம், உடல் எனத் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையால் தேங்கியிருக்கும் சளி அகற்றப்பட்டு மூச்சு சீராக வெளியேற உதவும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் ரத்தக்குழாய்கள் விரிவடையவும் இந்தச் சிகிச்சை உதவும் என்பதால் இதயப் பிரச்னைகள் சரியாகும். மேலும் இதய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் நீராவிக் குளியல் பயன்படும்.
சிலருக்கு பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் சென்று தங்கிவிடும். நீராவிக்குளியல் அவற்றை மிக எளிதாக வெளியேற்ற உதவும். தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுவதால் உடல் பருமனைக் குறைக்க உதவும். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து செய்தால் உடல் பருமன் குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இன்றைய சூழலில் மனப்பதற்றத்துடன் வாழ்பவர்கள் பலர். அவர்கள் நீராவிக் குளியல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நரம்புகள் மிதமாகச் செயல்பட உதவும். பதற்றத்தின் அடுத்தக்கட்டமாக வரக்கூடிய தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் இந்தச் சிகிச்சை தீர்க்க உதவும். எண்டோர்பின் என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்து டென்ஷனைக் குறைக்கும்; வலியைக் குறைக்க உதவும்.புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும். இதன்மூலம் எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். சுவாசக்கோளாறு, ரத்த அழுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இதய பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு நீராவிக் குளியல் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.
அடுத்த இதழில் மசாஜ் சிகிச்சை பற்றிப் பார்ப்போம்.
- எம்.மரியபெல்சின், படம்: வீ.நாகமணி