மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி!

மாடர்ன் மெடிசின்.காம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம்

புகை, மது, தூக்க மாத்திரை பழக்கமுள்ளோருக்கும் இதே நிலைமைதான்...

ணவனும் மனைவியும் விவாகரத்து பெற எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணப் பட்டியலில் இந்த நூற்றாண்டில் சேர்ந்துள்ளது, குறட்டை. சிறிய மோட்டார் சத்தம் அளவுக்குக் குறட்டைச் சத்தம் கேட்டுவிட்டால் போதும்; அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் கணவனும் மனைவியும் விவாகரத்து செய்துகொள்கின்றனர். நல்லவேளை, நம் நாட்டில் அந்த அளவுக்கு இன்னும் ‘முன்னேற’வில்லை. படுக்கையைத் தள்ளிப்போடும் அளவுக்குத்தான் தற்போதைக்கு இதன் எல்லை!    

மாடர்ன் மெடிசின்.காம்
மாடர்ன் மெடிசின்.காம்

குறட்டை ஏன் ஏற்படுகிறது?

நம் சுவாசமானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். மல்லாந்து படுத்துறங்கும்போது தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டு, குறட்டை வருகிறது.

மாடர்ன் மெடிசின்.காம்
மாடர்ன் மெடிசின்.காம்

சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்குத் தடுப்புச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்னை போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு. மேற்சொன்ன பிரச்னைகளுக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டால், குறட்டையும் விடைபெற்றுக் கொள்ளும். ஆனால், அதிக உடல் எடை மற்றும் கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்குக் குறட்டை என்பது நிரந்தரத் தொல்லை தருகிறது. கீழ்த்தாடை உள்வாங்கி இருந்தாலும் குறட்டை ஏற்படுகிறது. புகை, மது, தூக்க மாத்திரை பழக்கமுள்ளோருக்கும் இதே நிலைமைதான்.

மாடர்ன் மெடிசின்.காம்
மாடர்ன் மெடிசின்.காம்

ஆபத்து என்ன?

குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதோடு, சில சமயங்களில் அறவே சத்தம் இல்லாமல் போவதை ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) என்று சொல்வோம். அப்போது மூச்சுக்குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு ஒட்டு மொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும். ஆனால், இந்த மாதிரி நேரங்களில் மூளை விழித்துக் கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப்பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.

பாதிப்புகள் என்ன?

இப்படிப்பட்ட நிலைமை குறட்டையாளர் களுக்கு முதலில் தெரியாது. போகப்போக இவர்களே இதை உணரும் சந்தர்ப்பங்கள் வரும். எப்படி? இவர்கள் தூக்கத்தின்போது, மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு, கழுத்தை யாரோ நெருக்குவதுபோல் உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்து கொள்வார்கள். இதனால் காலையில் எழுந்திருக்கும் போது நாக்கு வறண்டு தொண்டையோடு ஒட்டிக் கொண்ட உணர்வுடன் தாகம் எடுக்கும். இதை அலட்சியப்படுத்தினால் இரவில் தூக்கம் கெடும். உடல் களைப்படையும். கடுமையாகத் தலை வலிக்கும். பகலில் தூக்கம் வந்து படுத்தும். ரத்த அழுத்தம் அதிகமாகும். வேலையில் கவனக்குறைவும் ஞாபக மறதியும் உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்படும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு, சர்க்கரை நோய், பக்க வாதம் என்று பல நோய்களும் கைகோத்துக் கொள்ளும்.

என்ன பரிசோதனை?

ஒருவர் குறட்டைவிடும்போது மூச்சு விடுவதில் எந்தளவுக்குத் தடை உண்டாகிறது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் எந்த அளவுக்குக் குறைகிறது, இதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா போன்ற பல விவரங்களை ‘ஸ்லீப் ஸ்ட்டி’யின் மூலம் அறியலாம்.

மாடர்ன் மெடிசின்.காம்
மாடர்ன் மெடிசின்.காம்

என்ன சிகிச்சை?

குறட்டைக்கு உடற்பருமன் காரணமென்றால், முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும். தைராய்டுதான் பிரச்னை என்றால், அதற்குரிய மருத்துவச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்த்தாடைப் பிரச்னை எனும்போது, வாயினுள் ‘க்ளிப்’ ஒன்றைப் பொருத்திக்கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் இருந்தால், அவற்றை நிறுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாதபோது, அடுத்து அறுவை சிகிச்சைதான். குறட்டைக்குக் காரணம் எது என்பதைப் பொறுத்துமூன்றுவித சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூக்கில் அல்லது தொண்டைக்குள் சதை வளர்ச்சி இருப்பவர்களுக்கு லேசர் சிகிச்சை மூலம் கரைத்துவிடுகின்றனர். இதற்கு ‘வுவுளோபேலட்டோ பெரிங்கோபிளாஸ்டி’ (Uvulopalato pharyngoplasty -UPPP) என்று பெயர்.

‘சிபாப்’ சிகிச்சை

முகமூடி அணிந்துகொள்வதைப்போன்ற சிகிச்சை இது. இந்த முகமூடியிலிருந்து அழுத்தமான காற்று தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும்.  
 
அறுவை சிகிச்சை

குறட்டைக்கு நிரந்தரத் தீர்வு தர ‘கோபிலேஷன் டர்பினோபிளாஸ்டி’ (Cobilation Turbinoplasty) என்ற அறுவை சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது. இது 40 முதல் 45 டிகிரி வரை உள்ள வெப்பத்தில் ரேடியோ அதிர்வலைகளைக் கொண்டு செயல்படுகிறது. வலி உண்டாவதில்லை. அறுவை  சிகிச்சையின்போது ரத்தம் செலுத்தத் தேவையில்லை. புண் விரைவிலேயே குணமாகி விடுகிறது. இதன் மூலம் குறட்டைத் தொந்தரவி லிருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கிறது.

மாடர்ன் மெடிசின்.காம்
மாடர்ன் மெடிசின்.காம்

நவீன சிகிச்சை

அமெரிக்காவில்  ‘நியூரோமாடுலேஷன் சிகிச்சை’ (Neuromodulation Therapy) என்கிற நவீன சிகிச்சை இப்போது அறிமுகமாகியுள்ளது ‘நியூரோமாடு லேட்டர்’ என்பது அந்தக் கருவிக்குப் பெயர்.

இதைப் பயனாளியின் மார்பில் வெளிப் பக்கமாகப் பொருத்திவிடுகின்றனர். இதிலிருந்து புறப்படும் ஒரு சென்ஸார் மார்பில் புதைந்திருக்கும்; தூண்டல் மின்வயர் ஒன்று கழுத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் சென்ஸார் ஒவ்வொரு விநாடியும் சுவாசத்தில் ஏற்படும் சின்ன மாற்றம் ஆனாலும் சரி, சுவாசத்தடை போன்ற பெரிய பாதிப்பு ஆனாலும் சரி, உடனே பேஸ்மேக்கர் கருவிக்குத் தெரிவிக்கும். பேஸ்மேக்கர், தூண்டல் வயர் மூலம் தொண்டைத் தசைகளைத் தூண்டும். அப்போது அவை தளர்ச்சி அடைவதைக் குறைத்துக்கொண்டு, சுவாசப்பாதையை விரித்துவிடும். இதன் பலனால் சுவாசம் சரியாகும்; குறட்டையும் குறைந்துவிடும். சென்ற ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவக் கருவிகளில் ‘டாப் டென்’ வரிசையில் இது இரண்டாவதாக உள்ளது.  இது அமெரிக்காவின் FDA ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்ததும் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் செயலுக்கு வந்துவிடும். வரவேற்போம்.

(தேடுவோம்)