ஹெல்த்
Published:Updated:

ரத்தச்சோகை இனி சோகமல்ல!

ரத்தச்சோகை இனி சோகமல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
ரத்தச்சோகை இனி சோகமல்ல!

சௌரிராஜன் ஆயுர்வேத மருத்துவர்ஹெல்த்

ழகான முகத்தோடும், ஆரோக்கி யமான தோற்றத்தோடும்தான் இருப்பார் கள் சில பெண்கள். ஆனால்,  அவர்களால் நீண்ட தூரம் நடக்க முடியாது; எளிமையான வீட்டு வேலைகளைச் செய்தால்கூட சுணங்கிப் போய்விடுவார்கள். உடல் அவ்வளவு பலவீனமாக இருக்கும். சில பெண்களுக்கு உடல் பொலிவிழந்து காணப்படும். இதற்குக் காரணம் ரத்தச்சோகையாக இருக்கலாம். ரத்தச்சோகை குறித்து விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சௌரிராஜன்.  

ரத்தச்சோகை இனி சோகமல்ல!

ரத்தமும் ரத்தச்சோகையும்

மனித உடலின் போக்குவரத்துத் துறையாகச் செயல்படுவது, ரத்த ஓட்ட மண்டலம். இந்த ரத்த ஓட்டம் மூலமாகத்தான் திசுக்களில் உள்ள செல்களுக்கு உணவு, பிராண வாயு, தண்ணீர் மற்றும் தேவையான சத்துப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதேபோல, நமது உடலில் உருவாகும் கழிவுப் பொருள்களை நீக்குவதும் இந்த ரத்த ஓட்ட மண்டலமே.

ஹீமோகுளோபின் (Haemoglobin-Hb)


`ஹீம்’ என்ற இரும்புச்சத்தும் `குளோ’ என்ற புரதச்சத்தும் சேர்ந்ததுதான் ஹீமோகுளோபின். இது, சிவப்பு நிறமுள்ள ஒருவகைப் புரதம். சிவப்பு அணுக்களுக்கு நிறத்தைக் கொடுப்பது, இந்த நிறமிப் பொருள்தான். பொதுவாக, 100 மி.லி ரத்தத்தில் 12 முதல் 16 கிராம் வரை ஹீமோகுளோபின் இருக்கிறது. இதன் முக்கிய வேலை, பிராண வாயு மற்றும் கரியமில வாயுவை எடுத்துச்செல்வது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், அதுவே ரத்தச்சோகை (Anemia) எனப்படும்.

ரத்தச்சோகை இனி சோகமல்ல!அறிகுறிகள்

* ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் காரணமாக இருப்பதால், சருமம் வெளிறித் தெரியும்.

* உடலின் ஆக்சிஜனின் அளவு குறைவதால், உடலில் சக்தி குறையும். தவிர உடற்பயிற்சி செய்தபிறகும் விளையாடிய பிறகும் மூச்சு வாங்குவது அதிகமாக இருக்கும்.

காரணங்களும் வகைகளும்


ரத்தச்சோகையில் பல வகைகள் இருக்கின்றன. பொதுவான காரணங்களின் அடிப்படையிலேயே அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஊட்டச்சத்து ரத்தச்சோகை

ரத்தச்சோகை இனி சோகமல்ல!

இது, ரத்தச்சோகை வகைகளில் மிகவும் பொதுவானது, இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுவது. தாய்ப்பால் அருந்தாத அல்லது பசும்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. உணவில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 12 அல்லது வைட்டமின் இ குறையும்போது ரத்தச்சோகை உண்டாகும். ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இந்த எல்லா ஊட்டச்சத்துகளும் அவசியம்.

ரத்தச்சோகைக்கான வேறு காரணங்கள்

* கடுமையான அல்லது தீராத ரத்தக் கசிவால் ரத்தச்சோகை ஏற்படும். அதிக ரத்த இழப்பால் ஏற்படும் ரத்தச்சோகை, இரைப்பை குடற் பாதையில் மிகவும் சாதாரணமாக நிகழும் ஒன்று. இது, பசும்பாலில் இருக்கும் புரதச்சத்தின் ஒவ்வாமையால்தான் பெரும்பாலும் ஏற்படும்.

* தைராய்டு சுரப்பு குறைவது அல்லது டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவது.

* சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

ஆபத்தான காரணிகள்


* குறைமாதப் பிரசவம் மற்றும் பிறப்பின்போது குழந்தையின் எடை குறைவாக இருத்தல்.

* வறுமை காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு.

*  பருமன் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள்.

ரத்தச்சோகையைத் தடுக்க முடியுமா?

* இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். உதாரணமாக, கோதுமை, கேழ்வரகு, கம்பு, பட்டாணி, சோயாபீன்ஸ், பொட்டுக்கடலை, தர்பூசணி, மாதுளை, சீதாப்பழம், வாழைப்பழம், உலர் திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், முருங்கைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, காலிஃபிளவர், சுண்டைக்காய், பாகற்காய், வாழைக்காய், கடலைமிட்டாய், பனங்கற்கண்டு, அதிரசம், பொரி உருண்டை போன்றவை.

* கோழி, மீன், இறைச்சி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் ரத்தச்சோகை ஏற்படுவது குறைவு.  

ரத்தச்சோகை இனி சோகமல்ல!

* சைவ உணவுகளைப் பொறுத்தவரைக் கீரைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால், இறைச்சியைப்போல இவற்றில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சுவது இல்லை. எனவே சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்கள், கீரைகளைச் சமைக்கும்போது சிறிது தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்துவிட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்ட பின்னர் புளிப்புச் சுவையுள்ள தயிர் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம். இதன் மூலம் உணவில் உள்ள இரும்புச்சத்தை முழுமையாக உடல் உறிஞ்சும்.

* கால்சியத்தையும் இரும்புச்சத்தையும் ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

* மருத்துவ ஆலோசனையுடன் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

சிகிச்சைகள்

ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ரோஜாப்பூ, சீரகம், இந்துப்பு இவற்றைச் சம அளவு எடுத்து, நன்கு உலரவைத்து, பதப்படுத்தி, பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். காலை, மாலை உணவுக்கு முன்னர் வெந்நீரில் அரை டீஸ்பூன் கலந்து 48 நாள்கள் உட்கொண்டால் ரத்தச்சோகை குணமாகும்.

கரிசாலை - 100 கிராம், நெல்லிவற்றல் - 50 கிராம், கோரைக் கிழங்கு - 25 கிராம், பொடுதலை - 100 கிராம், மூக்கரட்டை - 50 கிராம், கறிவேப்பிலை - 25 கிராம், புதினா இலை - 10 கிராம், கொத்தமல்லி இலை - 5 கிராம்

இவற்றைச் சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி (தனித்தனியாக) இடித்து, சலித்து மேலே சொன்ன அளவில் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் 3 கிராம் முதல் 6 கிராம் வரை தினமும்  இரண்டு வேளை தேனில் கலந்து உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

அன்றாட உணவுகளில் பொன்னாங் கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, முருங்கைக் கீரை, முளைகட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை நிறத்திலுள்ள காய்கறிகள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், தேன் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், ரத்தச்சோகையிலிருந்து தப்பிக்கலாம்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்