
ஹெல்த்

என் உதடு எப்போதுமே வறண்ட நிலையில் உள்ளது. அத்துடன் உதட்டின் தோல் உரிந்துகொண்டே இருக்கிறது. இதைச் சரிசெய்ய அதிகமாகத் தண்ணீர் குடிப்பதுடன் லிப் பாமும் பயன்படுத்திப் பார்த்தேன். ஆனால், வெயில், குளிர் என எல்லாக் காலத்திலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?
- பிரியா, சேலம்

உதடுகள் வறண்டு போவதற்கு ரத்தச்சோகை, வெப்பமான சூழலில் அதிகம் நிற்பது, நோய்த்தொற்று போன்றவை காரணமாக இருக்கலாம். உதடு வறண்டால் அதன் தோல் பகுதியில் வெடிப்புகள் உருவாகும். அப்போது உதட்டின் மேல் உள்ள தோலை உரிப்பது என்பது பிரச்னையை அதிகரிக்கும். உதட்டில் அதிகம் எச்சில் படுவதும்கூட ஆபத்தானதே. அதுவே நோய்த்தொற்றை ஏற்படுத்தும். நாக்கு வறண்டு போகாமல் பார்த்துக்கொண்டாலே, சில தினங்களில் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லையென்றால், சரும மருத்துவரின் ஆலோசனைப்படி `லிப் பாம்’ பயன்படுத்தலாம். எல்லா நேரங்களிலும் பாதிப்பு இருந்தாலும், மூக்கு, கீழ் உதடு, காதின் பின்புறம், கைகள் போன்ற பகுதிகளில் பிரச்னை தொடர்ந்தாலும் கவனமாக இருக்கவேண்டும். சிலநேரங்களில் இது சருமப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

எனக்கு 37 வயதாகிறது. இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, மாதவிடாய் ஏற்படும்போது அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்களை சமீபகாலமாகப் பெரிதும் எதிர்கொள்கிறேன். அந்த நேரத்தில் சரும ஒவ்வாமையும், தொண்டை எரிச்சலும் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் வியர்க்கிறது. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறேன். இது ஏதாவது நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று பயமாக உள்ளது. அதுபற்றி விளக்குங்கள்.
- கே.ராஜி, தஞ்சை

40 வயதைத் தொடும் பெண்களுக்கு, உடலளவில் சில மாற்றங்கள் ஏற்படும். அதில் முக்கியமானது மெனோபாஸ். மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புக் குறைவதால் ஏற்படுவதே இது.
மெனோபாஸுக்கான அறிகுறிகளாக சீரற்ற மாதவிடாய், மூட் ஸ்விங், தூக்கமின்மை, ஒவ்வாமை, இரவுநேர வியர்வை போன்றவை ஏற்படும். ஆகவே இந்த அறிகுறிகளை மையமாக வைத்து அதை ஒரு நோய் என்று நினைத்துவிட வேண்டாம்.
அதிக ரத்தப்போக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்களுக்குச் சரியான மருத்துவப் பரிந்துரை இல்லையென்றால், புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். மற்றவர்கள் இதுபற்றிப் பயப்படத் தேவையில்லை.
பருமனான உடல்வாகு கொண்டவள் நான். இரவு தூங்கச்செல்லும்போது காலில் வலி ஏற்படுகிறது. சமீபகாலமாக, குதிகாலில் வலி அதிகமாக இருக்கிறது. ஹீல்ஸ் அணிவது, உடல்பருமன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்றதால், ஹீல்ஸைத் தவிர்க்கி றேன்; நிறைய நடக்கிறேன். ஆனாலும், வலி குறையவில்லை. பகல் நேரத்திலும் குதிகாலில் வலி தொடர்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எளிய சிகிச்சை இருந்தால் சொல்லுங்கள்.
- டி.கார்த்திகா, தேனி

உடல்பருமனாக இருக்கும் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. நாள் முழுவதும் அதிக எடையைக் கால்கள் தாங்குவதால், வலி வருவது இயற்கையே. அதிக எடை இருப்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முழுத் தீர்வு, உடல் எடையைக் குறைப்பதே. அது அல்லாமல், ‘ப்ளான்டர் ஃபேசிட்டிஸ்’ (Plantar Fascitis) என்ற பிரச்னை இருப்பவர்களுக்கு, குதிகாலில் வலி ஏற்படும்.
ப்ளான்டர் ஃபேசிட்டிஸ் என்பது கால் விரல்களையும், குதிகால் பகுதியையும் இணைக்கும் எலும்பில் நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறிக்கும். பெரும்பாலும், ஆயின்மென்ட் தடவுவது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது, உடல் எடை குறைப்பது, கால்களுக்கான பயிற்சிகளைச் செய்வதன் வழியாக வலியைப் போக்கலாம். இவற்றைக் கடைப்பிடித்தும் பிரச்னை தொடர்ந்தால் எலும்புப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை ஏதும் இருந்தால், அல்ட்ரா சவுண்ட் தெரபி (Ultra Sound Therapy), ஸ்டீராய்ட் ஊசி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.