ஹெல்த்
Published:Updated:

நான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி

நான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி
பிரீமியம் ஸ்டோரி
News
நான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி

வியக்க வைக்கும் விளையாட்டு வீரர்தன்னம்பிக்கை

‘‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன். குரங்கிற்கும் மூளை உண்டு; பரிணாமம் அடைந்த மனிதன் அதைச் சரியாகப் பயன்படுத்தினான். வால் எவ்வாறு மனிதனுக்குத் தேவையற்றதோ அதுபோல இடது முழங்கையின் கீழ்ப்பகுதி எனக்குத் தேவையற்றது, நான் மனிதனிடமிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன்”  எனத் தத்துவமாக ஆரம்பிக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹரிஹரன். “பாதி இடது கை இல்லாததால் நான் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு ஆடுபவன் இல்லை. எல்லா மனிதர்களைப்போலவும் முதன்மை அணிகளுக்கு ஆடுகிறேன். இரண்டு கைகள் கொண்ட மனிதர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நான் செய்கிறேன். அதனால் குறை என்ற ஒன்று என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை’’- உற்சாகமாகத் தொடர்கிறது அவரது பேச்சு. 

நான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி

“என் அப்பா பெயர் பெருமாள், அம்மா லலிதா. அப்பா வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஆறு மாதக் குழந்தையா இருந்தப்போ எனக்குக் காய்ச்சல் வந்தது. எனக்கு ஹீமோகுளோபின் கம்மியா இருக்குனு ரத்தம் ஏத்தினாங்க.  அப்போ கிருமித்தொற்று ஏற்பட்டு கேங்கரின் (Gangerene) என்கிற திசு அழிவுப் பிரச்னை உருவானதால் இடது முழங்கைக்குக் கீழ் உள்ள கை மற்றும் வலது கையில் உள்ள விரல்களும் பாதியாக அகற்றப்பட்டன. எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து நான் இப்படித்தான் இருக்கேன். அஞ்சு வயசா இருக்கும்போது தெருவில் பசங்க கிரிக்கெட் விளையாடுறதப் பார்த்து எனக்கும் விளையாடணும்னு ஆசை வந்துச்சு. அப்போ அங்க இருந்த பசங்க யாரும் என்னை வித்தியாசமா பார்க்கலை.  முதல் வரிசையில இறங்கி பேட்டிங் பண்ணுவேன். தெருவுலேயே எவ்ளோ நாள்தான் விளையாடுறதுனு, ஏழு வயசுல ஏசியாட்டிக் கிரிக்கெட் (Asiatic Cricket Academy) அகாடமியில் சேர்ந்தேன்.  சந்திரசேகர் என்கிற சந்தர் சார் என்னை ரொம்ப ஊக்கப்படுத்தி விளையாட வெச்சார். முதல்ல பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பண்ணணும்னு ஆசைப்பட்டேன், அப்படியே கொஞ்சநாள் போச்சு, அப்புறம் சந்தர் சார் என்னைப் பந்துவீச்சு செய்யச் சொல்லிப் பயிற்சி கொடுத்தார் .

நான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி



எனக்கு வேகப்பந்து வீச்சு, ஆப்- ஸ்பின் துல்லியமா வரலை. ஆனால், லெக்-ஸ்பின் துல்லியமா இருந்துச்சு; சுழலும் நல்லா  வந்துச்சு, இதுக்குக் காரணம் என்னோட வலது கையில் பாதியாக இருக்கிற அந்த விரல்கள். அந்த விரல்களால் இயற்கையாவே எனக்கு லெக்-ஸ்பின் கை கூடுச்சு. 2015-ம் ஆண்டு அண்டர்-15 கோல்டன்விண்ட் - கோல்ட்ஸ் போட்டித்தொடர் விளையாட கேரளா போனேன். அப்போ வெளிநாட்டில் உள்ள கிரிக்கெட் அகாடமிகளைச் சேர்ந்தவங்களும் வந்தாங்க. ஏசியாட்டிக் கிரிக்கெட்  அகாடமிக்காக  நான் விளையாடினேன். முதல் போட்டியில் மூன்று விக்கெட்; இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட் என லெக்-ஸ்பின்னரா என்னோட அணிக்கு நல்லா விக்கெட் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் போட்டித்தொடரோட அரையிறுதியில் கடைசி பேட்ஸ்மேனாக இறங்கி இருபத்திமூன்று பந்துகளில் எழுபத்தி இரண்டு ரன்கள் அடிச்சு ஜெயிச்சுக் கொடுத்தேன். அந்தப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் நாங்க தோத்துட்டோம். ஆனாலும், அந்த அரையிறுதி ஆட்டம்தான் என்னை நல்ல பேட்ஸ்மேனா எல்லாருக்கும் நிரூபிச்சுக் காட்டினது. அதுக்கப்புறம் முதல் வரிசை பேட்ஸ்மேனாக என்னைக் களம் இறக்கினாங்க.

என்னை மாற்றுத்திறனாளிகள் அணிக்கு ஆடச் சொன்னதால 2015-ல் ஏசியாட்டிக் கிரிக்கெட் அகாடமியில் இருந்து விலகி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் சாருடைய வி.பி. கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து இப்போ வரைக்கும் ஆடிக்கிட்டிருக்கேன். 2015-ல் தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான போட்டித்தொடரில் காஞ்சிபுரம் மாவட்ட அணிக்கு ஆடினேன். 2016-ல் இந்திய மாநிலங்களுக்கு இடையேயான போட்டித் தொடரில் தமிழ்நாடு அணிக்கு ஆடினேன். இப்போ ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட் ஆடக் காத்திருக்கேன். கூடிய விரைவில் அதைச் செய்து, மிக விரைவில் இந்திய அணியிலும் களம் காண்பேன்” என்று தன்னம்பிக்கை சிறிதும் குறையாமல் கூறும் ஹரிஹரனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாததொரு தருணம் இருக்கிறது.

“விதர்பா அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான ரஞ்சி போட்டியைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானைப் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. என்னிடம் கலகலப்பாகப் பேசினார். ‘பேட்டிங் ஆடுவியா?’னு கேட்டு எனக்குப் பந்துவீசினார். அப்போ நான் ஆடின லெக் கிளான்ஸைப் பார்த்து, “எனக்கு லெக் கிளான்ஸ் ஆடச் சொல்லித் தருவாயா?”னு கேட்டார். நான் சொல்லிக்கொடுத்த லெக் கிளான்ஸை இன்றும் பின்பற்றுகிறார். அவர் கையெழுத்துப் போட்ட ஒரு ஜெர்சியையும் கொடுத்தார். மறக்கமுடியாத பெருமை அது!’’- பூரிக்கிற மகனைத் தொடர்ந்து நம்பிக்கை பேசுகிறார் அவரின் அம்மா.

“ஹரி எங்களோட வரம்னுதான் சொல்லணும். அவனுக்கு இடது கை இல்லைனு அவன் அலட்டிக்கிட்டதே இல்ல. அவனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் அவனே செஞ்சுப்பான். ஷூக்களுக்கு லேஸ் கட்டறது முதல் கிரிக்கெட் பேடுக்கு ஸ்ட்ராப் மாட்டறது வரை யாரோட உதவியையும் எதிர்பார்க்க மாட்டான். இவன் எங்களுடைய மிகப்பெரிய நம்பிக்கை. இவனை யாரும் ஸ்பெஷல் குழந்தையா பார்க்கறதில்ல. ஸ்பெஷல் சைல்டு பெற்ற பெற்றோர்கள் எல்லாரும் இந்த மாதிரி தம் குழந்தையை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவாங்க, சாதிப்பாங்க!” என்கிறார் நம்பிக்கை இளைஞரின் அம்மா லலிதா.

தொகுப்பு, படம்: வாஞ்சிநாதன்