ஹெல்த்
Published:Updated:

பள்ளி பயம் - (Scolionophobia)

பள்ளி பயம் - (Scolionophobia)
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளி பயம் - (Scolionophobia)

அச்சம் தவிர்

ள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.  

பள்ளி பயம் - (Scolionophobia)

காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும். பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

பள்ளி பயம் - (Scolionophobia)அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.

சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.நிவேதா

படம்: குரூஸ்தனம்