
லஷ்மி நரசிம்மன் நரம்பியல் மருத்துவர்ஹெல்த்
பயணம்... இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தின்போது சிலருக்குச் சற்று இளைப்பாறுதல் தருகிறது. காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போதும் அலுவலகச் சுமைகள் நம் மனதை அழுத்தும்போதும் பயணம், நம்மை ரிலாக்ஸ் செய்யும். பயணங்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் கூறினாலும் சில நேரங்களில் பயணங்கள் நம்மை அவதிக்கு உள்ளாக்குவதும் உண்டு. ஆம்... பயணங்களின்போது ஏற்பட்ட தொந்தரவு அன்றாடப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டுவர சில நாள்கள் ஆவதும் உண்டு.

பேருந்தில் ஏறியதும் சிலருக்கு வியர்க்க ஆரம்பிக்கும். தொண்டையில் வறட்சி ஏற்படும்; வியர்த்துக் கொட்டும். சிலருக்குப் பேருந்தின் இருக்கையில் அமர்ந்ததும் வாந்தி ஏற்படும். இன்னும் சிலருக்குப் பேருந்தைவிட்டு இறங்கிய பிறகு வாந்தி வரும். பயணங்களின் முடிவில் சிலருக்கு லேசான ஒற்றைத் தலைவலி வருவது வழக்கமாக இருக்கிறது. பயணங்களின்போது ஏன் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன? நரம்பியல் மருத்துவர் லஷ்மி நரசிம்மன் விளக்குகிறார்.

“காதுகளின் உள்ளே வெஸ்டிபுலர் (vestibular) என்னும் மைக்ரோஸ்கோபிக் பகுதி ஒன்று உள்ளது. அதில் எக்ஸ், ஒய், இசட் ஆகிய மூன்று கோணங்களில் சுருள் போன்ற அமைப்புடைய லேபிரிந்த் (labyrinth) எனும் சிறிய உறுப்பு உள்ளது. அதன் உள்ளே என்டோலிம்ப் (endolymph) என்னும் திரவம் நகர்ந்துகொண்டே இருக்கும்.
கழுத்தைச் சாய்க்கும்போதும், திருப்பும்போதும், படுக்கும்போதும் என அத்தனைவிதமான செயல்பாடுகளின்போதும் இந்தத் திரவம் நகர்ந்துகொண்டே இருக்கும். உடலுக்கும் கழுத்துக்கும் உள்ள தொடர்பையும் நம் உடலுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு என நம் உடலின் ஒட்டுமொத்த பேலன்ஸைத் தீர்மானிப்பது இந்தத் திரவமே. மேலும் பார்வை, மூளையின் ஒருபகுதியான செரிபெல்லம் (Cerebellum) மற்றும் கழுத்தில் உள்ள நரம்புகள் செயல்பாட்டையும் தீர்மானிக்கிறது. லேபிரிந்த் சுருள், சிறுமூளை, வாமிட்டிங் சென்டர் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் லிம்பிக் சிஸ்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது தூண்டப்படும்போது, சிறுமூளையானது மயக்கத்தையும், வாமிட்டிங் சென்டர் வாந்தியையும், லிம்பிக் சிஸ்டம் பயத்தையும் தூண்டும்.

சிறு வயதில் காதில் சீழ் பிடித்து செவித்திரை கிழிந்தவர்கள், உள்காதில் ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற காது சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த லேபிரிந்த் சுருள் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். சிலருக்கு மரபணு வாயிலாகவும் இந்தப் பாதிப்பு இருக்கும். பெரும்பாலானோருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. நூற்றில் பத்து பேருக்கு மட்டுமே லேபிரிந்த் சுருள் ஹைப்பர் சென்சிட்டிவாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெஸ்டிபுலரைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கடைகளில் கிடைக்கின்றன. மருத்துவரின் அறிவுரையின் பேரில் பயணத்துக்கு அரைமணி நேரம் முன் அவற்றைப் எடுத்துக்கொண்டால் மேற்கண்ட பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும். மருந்துகள் இல்லாமல் வெஸ்டிபுலர் ஆகுலர் ரெஃளெக்ஸ் போன்ற எளிய பயிற்சிகள் (Vestibular Ocular Reflex Exercise) வழியாக ஓரளவு கட்டுப்படுத்தலாம்.”
“உடலின் அசைவுகளுக்குத் தகுந்தவாறு நம் பார்வை இல்லாமல் இருப்பதும் பயணங்களின் போதான பிரச்னைகளுக்கு ஒரு காரணம்” என்கிறார் பொது மருத்துவர் வான்மதி. பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை பற்றியும் விரிவாக விளக்கினார்.

``நாம் பயணம் செய்கிறோம் என்பதை முதலில் நம் மூளையில் பதியவைக்கவேண்டும். அதற்கு நமது பார்வை மிகவும் அவசியம். எனவே, பேருந்தில் பயணம் செய்யும்போது பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். பார்வை, நம் உடல், காதுகளில் உள்ள என்டோலிம்ப் திரவ நகர்வு அனைத்தும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்த பாதிப்பைத் தவிர்க்கமுடியும்.
பயணங்களின்போது புத்தகம் வாசிப்பதைத் தவிர்க்கவேண்டும். வெறும் வயிற்றில் அல்லது அதிகமான, காரமான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு பயணம் செய்யக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத நாள்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இருள் நிறைந்த இடங்களில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது. பேருந்துப் பயணம் என்றால் பின் இருக்கைகளில் உட்கார்வதைத் தவிர்க்கவேண்டும். பயணத்தின்போது மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பைக், கார் பயணம் என்றால் அதிக வேகத்தில் செல்லாமல் மிதமான வேகத்தில் செல்வது நல்லது. ரயில் பயணங்கள் என்றால் அதிகமான சத்தம் உள்ள இடங்களில் உட்காரக் கூடாது. துர்நாற்றம் வீசும்போது ஆழ்ந்து சுவாசிக்கக் கூடாது.
- இரா.செந்தில் குமார்