ஹெல்த்
Published:Updated:

வலி இல்லாத வாழ்க்கை!

வலி இல்லாத வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
வலி இல்லாத வாழ்க்கை!

பிரபு திலக் வலி நிவாரண சிகிச்சை நிபுணர்ஹெல்த்

வாழ்க்கை, வலிகள் நிறைந்தது. வலி இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடைக்கப்பெறாத வரம். தலைவலியில் தொடங்கி நெஞ்சுவலி வரை ஏதாவது ஒரு வலியை அனைவரும் உணர்ந்திருப்போம். அது விபத்தில் ஏற்பட்ட காயத்தாலோ, ஏதாவது நோயின் காரணத்தாலோ அல்லது நோயின் அறிகுறியாகவோ இருந்திருக்கலாம். ஆனால், பலரது வாழ்க்கையில் வலி என்பது நோயின் அறிகுறி என்ற நிலை மாறி, அதுவே நோயாகிவிடுவதும் உண்டு.  

வலி இல்லாத வாழ்க்கை!

இதுபோன்று வலியால் ஏற்படும் அவதிக்கு தீர்வு தரும்விதமாக பிரத்யேகமாக ஒரு மருத்துவத் துறையே இருக்கிறது. அதற்கு ‘வலி நிவாரணத் துறை’ அல்லது ‘வலி நிர்வாகத் துறை’ (Interventional Pain Management) என்று பெயர். தலைவலியில் தொடங்கி முழங்கால் வலி, முதுகுத்தண்டு வலி, மூட்டுவலி, புற்றுநோய் வலி எனப் பலவற்றுக்கும் இந்தத் துறை சிறப்பான சிகிச்சை தருகிறது.

மேலும் பி.ஆர்.பி. எனப்படும் (Platelet-Rich Plasma (PRP)) முறையில் முழங்கால் வலியைச் சரி செய்து சராசரி வாழ்க்கையை வாழ்வதற்கு உதவ முடியும். முதுகுத்தண்டில் உள்ள ஐவ்வு பிதுங்குதல் (Slip disc), டிஸ்க் சரிவு அல்லது தொங்கல் (Disc Prolapse) என அன்றாட வாழ்வை முடக்கிப் போடக்கூடிய வலிகளுக்குக்கூட அறுவை சிகிச்சை இன்றி ஓஸோன் தெரபி (Ozone Therpy), ரேடியோ அதிர்வெண் சிகிச்சை (Radio Frequency Ablation), ட்ரான்ஸ்ஃபார்மினல் எண்டோஸ்கோப் டிசெக்டமி (Transforminal Endoscope Disectomy) போன்ற அதிநவீன சிகிச்சை முறைகளால் குணமாக்க முடியும். இன்னும் எத்தனையோ வகையான வலிகளிலிருந்து நிவாரணம் பெற நினைப்பவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இந்தத் துறை. பலவிதமான வலிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்குகிறார் வலி நிவாரண சிகிச்சை மருத்துவர் பிரபு திலக்.

வலி இல்லாத வாழ்க்கை!



வலிகள் பற்றிய மூன்று உண்மைகள்: பெண்கள் தாங்கும் வலி பெரிது!

பெண்கள் தங்கள் வாழ்க்கைச் சூழல், உடலமைப்பின் அடிப்படையில் தங்கள் வாழ்நாளில் அதிகமான வலியை எதிர்கொள்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக ஹார்மோன் மற்றும் மரபணுக் கோளாறுகள், நோய் எதிர்ப்புத்திறன் குறைவு, உளவியல் காரணிகள் போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு. பெண்கள் 40 வயதுக்குமேல் மெனோபாஸ் நிலையை அடையும்போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு குறைந்து போகும். இதனால் எலும்பு மெலிவதுடன் தசை, எலும்புகளில் வலி ஏற்படும்.
 
வலி நீங்க ஓய்வு கைகொடுக்குமா?

வலியால் அவதிப்படுபவர்களை ஓய்வெடுக்கச் சொல்வது பொதுவான ஒன்றே. ஆனால், முற்றிலும் செயல்பாடு இல்லாமல் படுத்த படுக்கையாக (Bed Rest) இருப்பது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். முற்றிலும் செயல்பாடு இல்லாமல் இருப்பது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே சிறிய அசைவுகளுடன் கூடிய கடினமில்லாத வேலைகளைச் செய்யலாம். வழக்கமான வேலைகள், உடற்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடரலாம்.

மாதவிடாய் நின்றால் ஒற்றைத்தலைவலி வரவேற்கும்!

பெண்களுக்கு ‘பெரிமெனோபாஸ்’ (Perimenopause) எனும் மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய சில ஆண்டுகளில் தலைவலி ஏற்படலாம். தலைவலி உள்ள 3,664 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 62 சதவிகிதம் பேர் ‘பெரிமெனோபாஸ்’ நிலையைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, ஒற்றைத் தலைவலிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுக்கும் அதிகத் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

வலி இல்லாத வாழ்க்கை!

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மூளையின் வேதிப்பொருள்கள் சமநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஹார்மோன் குறைவதால் தலைவலி ஏற்படலாம். ஹார்மோன் தெரபி எடுத்துக்கொள்வது அல்லது மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கருத்தடை மாத்திரைகள், ஈஸ்ட்ரோஜென் சத்து மருந்துகளைச் சாப்பிடுவதால் ஹார்மோன் தலைவலியைக் குறைக்க முடியும்.

மாற்று மருத்துவத்தில் நிவாரணம்!

அக்குபஞ்சர்: சீனாவின் பாரம்பர்ய மருத்துவமான அக்குபஞ்சர் மருத்துவம், டென்ஷனால் வரும் தலைவலி மற்றும் நாள்பட்ட முதுகு வலி, கழுத்துவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு நிவாரணம் தரும்.

சிரோபிராக்டிக்: சிரோபிராக்டிக் (Chiropraktik) என்பது மாற்று மருத்துவச் சிகிச்சையின் ஒரு வடிவம். முதுகெலும்புடன் தொடர்புடைய பல்வேறு வகையான தசைநார் காயங்கள் மற்றும் வலிக்குக் காரணமான நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்தச் சிகிச்சை கழுத்துவலி, தலைவலிக்குப் பலன் தரும்.

யோகா: யோகாசனங்கள் முதுகெலும்பை வலுப்படுத்துவதாலும் தசை நார்களை நீட்டித்து வளையும் தன்மையை அதிகரிப்பதாலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நன்மையளிக்கும். யோகாவின் ஒரு பகுதியான சுவாசப் பயிற்சி மட்டுமல்லாமல் மனதுக்கு ஓய்வு கொடுப்பதும் பதற்றத்தைக் குறைத்து தசைநார்கள் எளிதில் விரைப்பாகாமல் தடுக்கிறது.

மசாஜ்:
தசை வலியைப் போக்க மற்றொரு சிறந்த வழி மசாஜ். இதைச் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடனடியாக வலி குறையும். வலி ஏற்படும் பகுதியில், ஒரு திசையை நோக்கி, மிதமான அழுத்தம் கொடுத்து, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

கவனம்: வலிக்கான தீர்வைத் தேடுவதற்குமுன், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியது மிகவும் முக்கியம். வலியில் இருந்து முழுமையான நிவாரணம் பெற, வலிக்கான மூல காரணத்தில் இருந்து விலகியே இருங்கள். 

வலி இல்லாத வாழ்க்கை!

ஐஸ் பேக்: தசைகள் விரைப்பாக இருக்கும்போது `ஐஸ் பேக்’ ஒத்தடம் கொடுப்பது தசை வலியை நீக்கும். தசை வலியுடன் வீக்கமும் இருந்தால், குறைந்தது 20 நிமிடங்களாவது `ஐஸ் பேக்’ ஒத்தடம் கொடுங்கள். தசை வலியை நீக்கும் சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னென்ன சாப்பிடலாம்?

நாள்பட்ட வலி குறைக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் வலியிலிருந்து விடுபட, மருந்து மாத்திரைகளுடன் சில இயற்கை உணவுகளையும் சாப்பிடலாம். அவை வலியைக் குறைக்கவும் விரைவில் குணமடையவும் உதவும்.

செர்ரிப் பழ ஜூஸ்: செர்ரி அல்லது திராட்சைப் பழச்சாற்றில் உள்ள ரெஸ்வெரட்ரால் (Resveratrol) என்ற வேதியியல் மூலக்கூறு, உடல் செல்களின் வீக்கத்துக்கு எதிராகச் செயல்பட ஊக்கப்படுத்தும். இந்த ஜூஸை எட்டு அவுன்ஸ் வீதம் ஒருநாளைக்கு இரண்டு வேளையாக ஆறு வாரங்கள் குடித்தால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட நாள்பட்ட வலி, வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மீன்: மத்தி உள்ளிட்ட மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது விபத்தில் முறிந்த எலும்புகள் விரைவில் சேர உதவும். வலி, வீக்கத்தைக் குறைக்கும். 

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் எதிர்ப்பு அழற்சித் (anti inflammatory)   தன்மை அதிகமாக உள்ளதால், வீக்கம் குறையும். எனவே, வலி வேதனை அனுபவிப்பவர்கள் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: நாம் சாப்பிடும் சில உணவுகள்கூட வலியை அதிகரிக்கும். எனவே, நாள்பட்ட வலி, வீக்கம் பிரச்னை இருப்பவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை பானங்கள்: அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடாவை அருந்தும் பெண்களுக்கு ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் வர 63 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. இது ஹார்வர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இறைச்சி: ஹார்வர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட மற்றோர் ஆய்வில் ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி, தசைகளில் வீக்கத்தை அதிகமாக்கும் பண்பைக் கொண்டது என்று கூறுகிறது. அதனால், ரெட் மீட் சாப்பிடுபவர்களுக்கு ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid arthritis) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ரீபைண்ட் சிறுதானியங்கள்: சிறுதானியங்களைச் சாப்பிடுவது பல்வேறு வகையில் நன்மை தரும். ஆனால், அவற்றை ரீஃபைண்ட் செய்யும்போது அவற்றிலிருந்து சத்துகள் நீங்குவதுடன், பல்வேறு வேதிப்பொருள்களும் சேரும். இதனால் இவை ரத்தத்தில் உள்ள புரதத்தில் வீக்கத்தை அதிகரிக்கும்.

- ஜி.லட்சுமணன்

ஃபைப்ரோமையால்ஜியா (Fibromyalgia)

தலைவலி, மூட்டுவலி, கைகால் வலி என  நம் வாழ்வில் அனுபவித்திருப்போம். ஆனால், வலியே ஒரு நோயாக இருந்தால், எப்படியிருக்கும்? அப்படி ஒரு நோய்தான் ஃபைப்ரோமையால்ஜியா’
(Fibromyalgia). இதற்கு ‘நாள்பட்ட வலி’ அல்லது ‘தீராத தசை வலி’ என்று பெயர். அதாவது, உடலில்  வலி உணர்ச்சியைக் குறைக்கப் பயன்படும் ‘செரட்டோனின் (serotonin)’ என்னும் ஹார்மோன்   சுரப்பதில் ஏற்படும் குறைபாட்டால் இந்த வலி ஏற்படும். ஊசிகளால் குத்தினாற்போன்ற வலியை இடுப்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தும். உடல்வலி மட்டுமல்லாமல் மனரீதியான பிரச்னைகளும் சேர்ந்து வதைக்கும். இதனை ‘ஃபைப்ரோமையோசைட்டிஸ்’ அல்லது ‘ஃபைப்ரோசைட்டிஸ்’ என்று சொல்வார்கள்.

இந்நோயை ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. வலி நிர்வாக நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும். வலி தொடர்ந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உடற்பயிற்சி மற்றும் அவசியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்துடன் செரட்டோனின் சுரப்பினைத் தூண்டும் மாத்திரைகள், தசைவலியைக் குறைக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடலாம்.

ஸ்டெரயின் என்பது என்ன?

தசை நார்கள் இயல்பான அளவைவிட அதிகமாக விரிவடைதல் (Stretching) அல்லது கிழிந்து போகும் நிலைக்கு ஸ்ட்ரெய்ன் (Strain) என்று பெயர். விளையாட்டு, பளு தூக்குதல், திடீர் செயல்பாடுகள் போன்றவற்றின் காரணமாக தசைகளில் வலி, வலுவிழத்தல் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

குளிர்ந்த மற்றும் சூடான ஒத்தடம் கொடுப்பது தசை வலி நீங்க உதவும். அதைவிட தசைவலியின் காரணத்தைப் பொறுத்து, குளிர்ந்த ஒத்தடமா? சூடான ஒத்தடமா? என்று முடிவு செய்யுங்கள். ஒரு வாரத்துக்கு மேல் அவை பயன் தரவில்லை என்றால் மருத்துவரைப் பார்ப்பதே நல்லது.