
புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..?
“காலைல ஒரு தம் அடிச்சாத்தான் காலைக்கடனையே கழிக்க முடியும்...”, “சாப்பிட்டு முடிச்சவுடனே கட்டாயம் தம் அடிச்சாகணும்; இல்லைன்னா தலையே வெடிச்சுரும்”, “நமக்கு டீ, காபி எல்லாம் வெறுமனே உள்ள இறங்காது, கூடவே ஒரு ‘தம்’ போட்டாகணும்...” - இது சிகரெட் பழக்கமுள்ள சிலரின் வாக்குமூலங்கள். “நீங்கள் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள்...” என்று கேட்டால், அவர்கள் இதுபோன்று பல காரணங்களைச் சொல்வார்கள்.

புகைபிடிப்பது என்பது பிறவிப்பழக்கம் அல்ல... ஆனாலும், அந்தப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் விளையாட்டாகவோ, ஒருமுறை பிடித்துத்தான் பார்ப்போமே என்றோதான் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. புகைப்பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர எத்தனையோ சட்டங்கள் போட்டும், விழிப்பு உணர்வு ஊட்டியும் பெரிதாகப் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
இன்றைக்கு உலகளவில் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலைப் (Tobacco-related Deaths) பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இந்நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 லட்சத்தைத் தொடும் என்றும் எச்சரிக்கிறது அந்த ஆய்வு. உலகளவில் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பில் ஆறில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்பது கவலையை அதிகரிக்கும் செய்தி. பலர் எத்தனையோ வழிகளைக் கையாண்டும் இந்தப் பழக்கத்தைக் கைகழுவ முடியாமல் சிக்குண்டு தவிக்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாதவரை நோய்களும் மரணங்களும் தொடரும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? புகைப்பழக்கத்தை அடியோடு நிறுத்த வழி இருக்கிறதா? இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எப்படி?
போதை மறுவாழ்வு மனநல ஆலோசகர் சுதா மணியிடம் கேட்டோம்.

“புகையிலையில் உள்ள நிக்கோட்டின் (Nicotine), மூளையைத் தன்வசப்படுத்தி, போலியான ஒரு திருப்தியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களைத் தூண்டி புகைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி அடிமையாக்குகிறது. இதனால், உலகம் முழுவதும் சிகரெட் புகைக்கும் பழக்கம் பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. குறிப்பாக, மிகவும் வளர்ந்த நாடுகளில் இது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. ஏனெனில், சிகரெட் பிடிப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.
ஒரு சிகரெட்டில் நச்சு வாயுக்கள், வேதியியல் மூலக்கூறுகள், வடிகட்ட முடியாத நுண் மூலப் பொருள்கள் என ஏறக்குறைய 4 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் புற்றுநோயை உருவாக்கும் ‘கார்சினோஜென்’ (Carcinogen) என்ற ரசாயனங்களின் எண்ணிக்கை மட்டும் 43 ஆகும். இந்த ரசாயனங்கள் நுரையீரல் (Lung cancer) மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கான (Oral cancer) காரணிகளாக இருக்கின்றன.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களில் உள்ள பிற ரசாயனங்கள்:
நிக்கோட்டின்
பூச்சிக்கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படும் விஷப்பொருள்களுக்குச் சமமானது நிக்கோட்டின். ஆல்கஹால், கோகெய்ன் (Cocaine) போன்றவற்றைவிடச் சுலபமாக அடிமையாக்கக் கூடியது இது. இன்னும் சொல்லப்போனால் முதல்முறையே அடிமையாக்கிவிடும். மேலும், பிற போதைப்பழக்கங்களையும் முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தைத் தூண்டி, மற்ற போதைப்பொருள்களுக்கு நுழைவுவாயிலாகவும் அமைந்துவிடுகிறது. சிகரெட் புகைக்கும் பழக்கத்தை நிறுத்தும்போது பல்வேறு பின்விளைவுகளை நிக்கோட்டின் உண்டாக்கும்.
தார்
புற்றுநோயை உருவாக்கும் நச்சுப்பொருள்களின் கலவையே தார். பிசுபிசுப்புத்தன்மை கொண்ட இது, ரத்தக்குழாய்களில் படிந்துவிடும். ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்தத்தின் அளவைக் குறைத்துவிடும். ஒருகட்டத்தில் ரத்தக்குழாயில் அடைப்பை உண்டாக்கி மாரடைப்பையும் ஏற்படுத்திவிடும். கைவிரல்கள், கால்கள் போன்ற சில உறுப்புகளின் நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்துவதால், அந்த உறுப்புகளை நீக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கார்பன் மோனாக்ஸைடு
ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை வெளியேற்றும். இதனால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சும்மா உட்கார்ந்திருந்தால்கூட மூச்சு வாங்கும். நாளடைவில் உடல் உறுப்புகள் பலவீனமடையும்.

புகைப்பழக்கத்தை நிறுத்துவதால் தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகள்
சிகரெட் புகைக்கும் பழக்கத்தை உடனடியாகக் கைவிடும்போது. `வித்ட்ராயல் சிம்டம்ஸ்’ (Withdrawal Symptoms) எனும் சில அரிதான பின்விளைவுகள் வரலாம். குறிப்பாக, புகைப்பது பற்றிய சபலம் (Craving) இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி எரிச்சல், பதற்றம் அல்லது படபடப்பு, தூக்கமின்மை, தலைவலி உண்டாகும்.
நிறுத்துவதால் உண்டாகும் பயன்கள்
புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்தியபிறகு...
20 நிமிடத்தில்
* ரத்தக் கொதிப்பு/ நாடித்துடிப்பு சீராகும்
2 வாரங்கள் முதல் 3 மாதங்களுக்குள்
* ரத்த ஓட்டம் சீராகும்
* நுரையீரல் வேலைசெய்யும் திறன் 30 சதவிகிதம் அதிகரிக்கும்
ஒரு மாதத்தில் இருந்து 9 மாதங்களுக்குள்
* இருமல், சளி, மூச்சுத்திணறல் குறையும்
* நுரையீரலில் நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்
* உடல் வலிமை அதிகரிக்கும்
புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
புகைப்பழக்கத்தை நிறுத்த அவசியத் தேவை மனக்கட்டுப்பாடு. ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பார்கள். அதுபோல, `புகைபிடிக்கக் கூடாது’ என்ற முடிவில் தீர்மானமாக இருந்தால், உடனடியாக நிறுத்திவிடலாம். மேலும், சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.
தேதியை முடிவு செய்யுங்கள்!
சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட நாளைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அந்த நாளிலிருந்து கண்டிப்பாக சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று நம்புங்கள்.
எண்ணத்தைத் தள்ளிப்போடுங்கள்!
ஒரு சிகரெட்டுக்கும் மற்றொரு சிகரெட்டுக்கும் உள்ள இடைவெளியை அதிகரியுங்கள். சாப்பிட்ட பிறகோ அல்லது சிகரெட் புகைக்க வேண்டும் எனத் தோன்றும்போதோ, அதைச் சற்று தள்ளிப்போடுங்கள். இப்படியே புகைபிடிக்கும் பழக்கத்தை மெள்ள மெள்ளக் குறைத்துக்கொண்டே வர வேண்டும்.
எண்ணிக்கையைக் குறையுங்கள்!
ஒரு நாளைக்கு ஐந்து சிகரெட் என்று இருந்த கணக்கை, இனி மூன்று அல்லது அதற்குக் குறைவாக மாற்றலாம். அல்லது ‘இன்றைக்கு வேண்டாம்’ என்று ஒவ்வொரு நாளையும் தள்ளி வைக்க வேண்டும். ஆனால், ஒன்றைத் தீர்மானிப்பது மிகவும் முக்கியம்; இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது என முடிவெடுத்த நாளில் இருந்து ஒரு வார காலத்துக்குள் முழுமையாக இந்தப் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.
காரணங்களைப் பட்டியலிடுங்கள்!
புகைப்பழக்கத்தை நிறுத்துவற்கான காரணங்களைப் பட்டியலிடுங்கள், அவற்றைத் திரும்பத் திரும்ப மனதுக்குள்ளே சொல்லிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடல் ஆரோக்கியம் கெடுகிறது, திருமணமாகப் போகிறது, நோய் பாதிப்பு ஏற்படுகிறது என நிறுத்துவதற்கான காரணங்களை அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.
முடிவைப் பிறரிடம் தெரிவியுங்கள்!
நீங்கள் எடுத்த முடிவை நண்பர்கள், குடும்பத்தினர், உடன் பணிபுரிவோரிடம் தெரிவிக்க வேண்டும். நாம் நிறுத்தாவிட்டால், அவர்கள் கேள்வி கேட்பார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்ற பயம் இருக்கும். அல்லது உங்கள்மேல் அக்கறையுள்ளவர்கள் அதற்கு உதவுவார்கள்.
சூழலை விட்டு விலகியே இருங்கள்!
புகைபிடிக்கும் நபர்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருந்தாலும் அவர்களை விட்டுத் தள்ளியே இருக்க வேண்டும். சிகரெட்டைப் பார்ப்பது, அதன் சுவையை ருசிப்பது மற்றும் அதன் வாசனையை நுகர்ந்து பார்ப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வேண்டாம் என்று சொல்லிப்பழகுங்கள்!
யாராவது வாங்கித் தருவதாகச் சொன்னால்கூட, அவர்களின் கண்களைப் பார்த்து, `வேண்டாம்’ என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டும். இதனால் நிச்சயம் திரும்பவும் வற்புறுத்த மாட்டார்கள்.
தண்ணீர் குடியுங்கள்!
சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடிவெடுத்ததும் தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, சிகரெட்டின்மீது கவனம் செல்லும்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
சிகரெட்டுக்கு மாற்று யோசியுங்கள்!
புகைபிடிக்கும் ஆசை ஏற்பட்டால், உடனே கடலை மிட்டாய், உலர் திராட்சை போன்ற பிடித்தமான தின்பண்டங்கள் அல்லது சூயிங்கம் போன்றவற்றைச் சாப்பிட்டு கவனத்தைத் திசைத் திருப்புங்கள்.
செலவிடும் பணத்தைச் சேமியுங்கள்!
சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் அதற்கான பணத்தைத் தனியாகச் சேமிக்கத் தொடங்குங்கள். இதன்மூலம் எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அது பொருளாதார ரீதியாக எவ்வளவு பலனளிக்கிறது என்பதையும் உள்வாங்கிக்கொள்ள உதவும். இவற்றால் உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும்.
பெருமை கொள்ள வேண்டும்!
‘நான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டேன். எனக்கு இந்தப் பழக்கம் இல்லை’ என்பதற்காகப் பெருமைப்பட வேண்டும்.மனக்கட்டுப்பாடு இருந்தாலும் நிறுத்தமுடியாமல் தவிப்பவர்கள், மது மறுவாழ்வு மையங்களில் மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ளலாம் அல்லது `நிக்கோட்டின் மாற்று சிகிச்சை’ (Nicotine Replacement Therapy) எடுத்துக்கொள்ளலாம்.
- ஜி.லட்சுமணன்
புகைபிடிப்பவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்!
புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமலேயே பிறர் விடும் சிகரெட் புகையால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். புகைப்பவர்களுக்கு அருகில் இருந்து, புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் `பாஸிவ் ஸ்மோக்’ (Passive Smoke) என்பார்கள். உணவகங்கள், மதுக்கடைகள், டீக்கடைகள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. ஏசி அறை அல்லது காற்று வெளியேற வாய்ப்பில்லாமல் முற்றிலும் அடைக்கப்பட்ட இடமாக இருந்தால், பாதிப்புகள் அதிகரிக்கும். புகை பிடிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ, அதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எவ்வளவு நேரம் புகைப்பவர்களுக்கு அருகில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து பாதிப்பின் தன்மை மாறுபடும். குழந்தைகளுக்கு, சிறுவயதிலேயே நுரையீரல் பலவீனம் அடைந்துவிடும். பெண்கள், கர்ப்பகாலத்தில், புகையைச் சுவாசித்தால் குழந்தைகள் குறைபாடுடனோ, குறைப்பிரசவமாகவோ பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு அருகில் இருந்தாலும் கேடு என்பதை உணர வேண்டும்.
நிக்கோட்டின் மாற்று சிகிச்சை
சிலர் சிகரெட்டிலிருந்து தப்பிக்க புகையிலை, மூக்குப்பொடி, மது என வேறு தவறான பழக்கங்களுக்கு மாறுவார்கள். ஆனால், அவையும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட விரும்புபவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் `நிக்கோட்டின் மாற்று சிகிச்சை’ (Nicotine Replacement Therapy) எடுத்துக்கொள்ளலாம். அதாவது, சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின்தான் நம்மை போதைக்கு அடிமையாக்குகிறது. நிக்கோட்டின் மாற்று சிகிச்சையில் நிக்கோட்டின் அளவைக் குறைத்துக்கொண்டே வருவார்கள். மாத்திரைகள், இன்ஹேலர் (Inhaler), சூயிங்கம் (Chewing Gum), நோஸ் ஸ்பிரே (Nose Spray), தோலில் ஒட்டக்கூடிய பேட்ச்சஸ் (Adhesive Patch) போன்ற வடிவங்களில் நிக்கோட்டின் கொடுக்கப்படும். புகைபிடித்தது போன்ற உணர்வு கிடைக்கும்.
சிகரெட்டுக்கு மாற்றா... இ-சிகரெட்?
‘நெருப்பில்லை, அதிக புகையில்லை... என சிகரெட்டுக்கு மாற்றாக இ-சிகரெட் பற்றி விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால், இ-சிகரெட்டிலும் நிக்கோட்டின் இருக்கிறது. நிக்கோட்டின் எந்தவகையில் உடலுக்குள் நுழைந்தாலும் ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிங்கப்பூர், பிரேசில் போன்ற பல நாடுகளில் இது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.