ஹெல்த்
Published:Updated:

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

தன்னம்பிக்கை

‘‘இந்த உலகில் பிறக்கும் ஒவ்வோர்  உயிருக்கும், கனவு, வாழ்க்கை என எல்லாம் உண்டு.   சிறப்புக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. அவர்களும்  இந்த உலகில் வாழப் பிறந்தவர்களே! அவர்களது பிறப்பை அவமானமாக நினைத்து வீட்டுக்குள்  பூட்டிவைப்பதோ, ஆதரவின்றித் தவிக்க விடுவதோ எந்தவகையில் நியாயம்? சிறப்புக்குழந்தைகளை  என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களைச் சாதாரண மனிதராக அல்ல... சாதனையாளர்களாக மாற்றிக் காட்டுகிறேன்’’ என்கிறார்  சதீஷ்குமார்.

சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞரான இவர், சிறப்புக் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சியாளர். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஐந்தாண்டுகளாகச் சிறப்புக் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துவருகிறார். அவர்களில் பலரை மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார். சிலரைச் சாதனையாளர்களாகவும் உலகறியச் செய்கிறார்.  அவரைச் சந்தித்தோம்.

``சொந்த ஊரு சேலம். அப்பா உதயசங்கர் மெக்கானிக். அம்மா ஈஸ்வரி சின்னதாக ஒரு காய்கறிக்கடை வெச்சிருக்காங்க. இந்த வருமானத்துலதான்  எங்கக் குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு. சேலம், பாரதிய வித்யாபவனில் பள்ளிப் படிப்பை முடிச்சேன்.  சின்ன வயசுல என் நண்பர்கள் கிரிக்கெட், கபடினு விளையாடிக்கிட்டு இருக்கும்போது, நான் மட்டும் கிணறு, ஏரினு தண்ணியில மிதந்துக்கிட்டு இருப்பேன். நீச்சல் எனக்குப் பிடிக்கும்; என்னிக்கும் அலுக்காதது. ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு, வீட்டுக்குத் தெரியாம பல தடவை நீச்சல் அடிச்சிருக்கேன்.

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

`நீ என்னவாகப் போறே?’னு யார் கேட்டாலும், `நீச்சல் அடிக்கப் போறேன்’னு சொல்லுவேன். அதைத் தாண்டி நீச்சல்ல என்ன செய்ய முடியும், சாதிக்க முடியும்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த நிலைமையிலதான் நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரனைச் சந்திச்சேன். அவரைச் சந்திச்சதுக்கு அப்புறம்தான் என்னோட அணுகுமுறை மாறிச்சு. அதுவரைக்கும் ஆசைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் நீச்சல் அடிச்சுக்கிட்டிருந்தேன். நீச்சல் எவ்வளவு பெரிய கிஃப்டுனு எனக்குப் புரியவெச்சார். அவர் நடத்திக்கிட்டிருந்த நீச்சல் பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். அதுக்கப்புறம், ஸ்கூல்ல நடந்த நீச்சல் போட்டியிலயும் மாவட்ட அளவுல நடந்த பல போட்டிகளிலும் கலந்துக்கிட்டு ஜெயிச்சேன்,  பள்ளிக்கூடத்துல படிக்கறப்பவே மத்தவங்களுக்கு நீச்சல் கத்துக்கொடுக்கும் அளவுக்கு என்னை உருவாக்கினவர் ஞானசேகரன். அதுவரைக்கும் நீச்சலுக்குத் தடைபோட்ட என் பெற்றோர் அதுக்கப்புறம் மறுப்பு சொல்லலை. பள்ளிப் படிப்பைத் தாண்டுறதே கஷ்டம்னு நினைச்ச எனக்கு, நீச்சல் பயிற்சியாலதான் சென்னையில் படிக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சென்னை, பச்சையப்பா கல்லூரியில் பி.காம் படிக்க இடமும், தங்குறதுக்கு இலவச விடுதியும் கிடைச்சது...’’ என்கிற   சதீஷ்குமாரின் நீச்சல் ஆர்வம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்ததுதான் சிறப்புக் குழந்தைகள் பலரின் வாழ்வில்  வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘படிக்கவும், சாப்பாட்டுக்கும் பிரச்னை இல்லை. ஆனா, புத்தகம் வாங்கவும் மற்ற தேவைகளுக்கும் என்ன செய்றது? அந்த நேரத்துல நீச்சல்  உதவிச்சு. நீச்சல் பயிற்சியாளர் இளவரசன் அறிமுகமானார். அவர் மூலமா சில அடுக்குமாடிக் குடியிருப்புகள்ல இருந்த நீச்சல் குளங்களுக்குப் போய் சிலருக்கு நீச்சல் கத்துக் கொடுத்தேன். அதுல கிடைச்ச பணத்தை வெச்சு கல்லூரிப் படிப்பை முடிச்சேன். அப்போதான் அண்ணாநகர்ல இருக்குற பிரசாந்தி என்பவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவரோட சிறப்புக் குழந்தை ராகுலுக்கு நீச்சல் கத்துத்தர முடியுமானு கேட்டார். சாதாரணக் குழந்தைகளுக்கே நீச்சல் கத்துத் தர்றதுல பல சிக்கல்கள் இருக்கு. சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்குறதுனு ஒரு தயக்கம். அவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ராகுலை நீச்சல் கத்துக்க அனுப்பிவெச்சார்.

ராகுல் நீச்சல் கத்துக்கிறதைப் பார்த்த அந்தத் தாயின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அந்தக் குழந்தையின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் அவருக்கு ஏற்படுத்தின மகிழ்ச்சி, எனக்கு வியப்பா இருந்துச்சி. சாதாரணக் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தர எத்தனையோ பயிற்சியாளர்கள் இருக்காங்க. சிறப்புக் குழந்தைகளுக்கு யாரும் இல்லை. இவங்களுக்கு  நீச்சல்  கத்துக் கொடுக்கணும். இவங்களோட பெற்றோர்களின் ஆசையை நிறைவேத்தணும்னு முடிவு செஞ்சேன். 

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

பல குழந்தைகள் கத்துக்க வந்தாங்க. தனித்தனியா ஒவ்வொரு குழந்தைக்கும் நீச்சல் கற்றுத் தராம, ஒரே இடத்துல எல்லாக் குழந்தைகளுக்கும் கத்துத் தரலாமேனு தோணிச்சு. அதுக்காகப் பல இடங்கள்ல விசாரிச்சேன். `சிறப்புக் குழந்தைகளுக்கு நீச்சலை அனுமதிச்சா மத்தவங்க வர மாட்டாங்க, எங்க பிசினஸ் போயிடும். அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது ஆச்சுன்னா ரிஸ்க்’னு யாரும் ஒப்புக்கலை. கடைசியா, அரும்பாக்கம் லீக் கிளப்ல, `நல்ல நோக்கத்துக்காகக் கேட்கிறீங்க, தாராளமா செய்யுங்க’னு குழந்தைகளையும் அவங்க பெற்றோரும் வந்து போறதுக்கு ஒரு நேரத்தை ஒதுக்கித் தந்தாங்க.

மூணு குழந்தைகளோட ஆரம்பிச்சது நீச்சல் பயிற்சி. இப்போ 60 குழந்தைகளுக்கு மேல கத்துக் கொடுத்துக்கிட்டிருக்கேன். வெறும் பயிற்சியோட நிறுத்தாம குழந்தைகளைப்  பல நீச்சல் போட்டிகளுக்கும் அழைச்சிட்டுப் போனேன். அதுக்குப் பலன் கிடைச்சுது. 2015-ம் ஆண்டில், சிறப்புக் குழந்தைகளுக்கான தமிழக நீச்சல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தமிழ்நாடு பிரிவுச் செயலாளர் பால் தேவசகாயம் உற்சாகம் கொடுத்தார். இந்தக் குழந்தைகளைத் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆலோசனைகள் வழங்கினார். கடந்த 2016-ம் ஆண்டு, மும்பையில் தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் என் மாணவர் நித்திஷ், தேஜஸ், ஸ்ரீராம், கோகுல், ஸ்ரீநிவாஸ், ஆர்த்தி கலந்துக்கிட்டுப் பல பதக்கங்களை வாங்கினாங்க. அந்த அடிப்படையில தேஜஸ் தவிர மற்ற அஞ்சு குழந்தைகளும் 2019-ம் ஆண்டு அபுதாபியில நடக்கவிருக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டாகியிருக்கு. நிச்சயம் உறுதியாகிடும்னு நம்பறேன்.

இந்தக் குழந்தைகளோட பெற்றோர்கள் என்னைப் பயிற்சியாளராக மட்டும் பார்க்கிறது இல்லை. என்னையும் அவங்களோட குழந்தையாப் பார்க்கிறாங்க.  எனக்கு ஆலோசனை கொடுக்கிறதுல இருந்து, பொருளாதார ரீதியாவும் உதவி செய்றாங்க. வெளியூருக்குக்கூட என்னை நம்பிக் குழந்தைகளை அனுப்பி வைக்கிறாங்க. அந்த நம்பிக்கைதான் இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு என்னை நினைக்க வைக்குது. எத்தனையோ சிறப்புக் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க. அவங்களில் பலருக்கு ஒரு கிளப்பில் மெம்பராகச் சேர்ந்து பயிற்சி கொடுக்கும் அளவுக்கு வசதி இருக்காது. அரசு சார்பில் இருக்கும் நீச்சல் குளங்கள்ல இவங்களுக்கு இடம் கொடுத்தா, இலவசமாகக் கத்துத் தர்றதுக்குக்கூட நான் தயாராக இருக்கேன்”- கண்களில் ஆர்வம் பொங்கச் சொல்கிறார் சதீஷ்குமார்.

இது சாத்தியம்தானா?

``மன வளர்ச்சி குன்றியவர்களை `சிறப்புக் குழந்தைகள்’னு சொல்றோம். பெயரைத் தவிர அவர்களிடம் எந்தச் சிறப்பும் இல்லை என்பதுதான் பலரின் எண்ணம். அவங்களையும் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு முறையான பயிற்சிகள் மூலம் தயார்படுத்த முடியும். சாதாரணக் குழந்தைகளுக்கு இணையாகச் சாதனைகளைச் செய்யும் அளவுக்கு மாற்ற முடியும். அந்த வாய்ப்புகள் பற்றித் தெரியாமல், அவங்களை வீட்டிலேயே அடைச்சுவெச்சு, மன உளைச்சலுடனேயே வளர்க்கிறாங்க பல பெற்றோர். அவங்களும் சாதிக்கப் பிறந்தவங்கதான். சாதிக்க வழிகளும் உண்டு. அவங்களை வெளியே கொண்டு வரணும். அப்போது இது சாத்தியமாகும்.’’ உறுதியான குரலில் சொல்கிறார் சதீஷ்குமார்.   சிறப்புக்குழந்தை களுக்காக உதவ நீளும் இவர்  கரங்களைக் குலுக்கி ஒரு பூங்கொத்துக் கொடுப்போம்!

- ஜி.லட்சுமணன்

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

மூளை வளர்ச்சி மேம்படும்

"தண்ணீரைக் கண்டால் குழந்தைகளுக்கு உற்சாகம் பெருக்கெடுக்கும், எவ்வளவு தடுத்தாலும், நமக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, தண்ணீரோடு விளையாடும் குழந்தைகளை நம் வீட்டிலும் பார்த்திருப்போம். சிறப்புக் குழந்தைகளும் மனதளவில் குழந்தை மனம் கொண்டவர்கள்தான். கடினமாக அல்லாமல் ரிலாக்ஸாகச் செய்யப்படும் எந்த ஓர் உடற்பயிற்சியும் சிறப்புக் குழந்தைகளுக்குப் புத்துணர்வு தரும். சிறுவயதிலேயே அவர்களை இப்படி விளையாட்டில் ஈடுபடுத்தாமல் விட்டால், அவர்களின் ஆற்றலை இழக்கவும் வடிகால் இல்லாமல் போய்விடும். இதனால்தான் வீட்டில் டிவி உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருள்களையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறார்கள்; மற்றவர்களுடன் ஆக்ரோஷமாகச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒரு விளையாட்டில் அவர்களின் கவனத்தைத் திசை திருப்பினால், வன்முறை எண்ணங்கள் குறையும். அதே நேரத்தில் சிறப்புக் குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமை இருக்காது. சிலர் பேக் நீச்சல்கூட நன்றாக அடிப்பார்கள். அப்படி அவர்களிடமுள்ள திறமைகளைப் பெற்றோர்களும் பயிற்சியாளர்களும் கண்டறிந்து அதில் பயிற்சியளிக்க வேண்டும். தண்ணீரில் குளிப்பது மருத்துவரீதியாக மிகச் சிறந்த தெரபி. இது, பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்க உதவும்.

எதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்

`மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீச்சலடிப்பதைப் பழக்கப்படுத்திக்கொண்டால், அது குறைந்து, நாள் முழுக்க உற்சாகமாகப் பணி செய்வார்கள்’ என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். அதோடு, சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவோடு இருக்கும். ஆரோக்கியம் கைகூடும். எனவே, சிறப்புக் குழந்தைகளுக்கு உரிய கண்காணிப்புடன், முறையான பயிற்சியாளரின் உதவியோடு நீச்சல் பயிற்சியளிப்பது ஆரோக்கியமான ஒன்று. நீச்சல் பயிற்சியால் மூளை வளர்ச்சி மேம்படும் என்பது உண்மையே" என்கிறார் அசோகன்.