ஹெல்த்
Published:Updated:

பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்

பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்
பிரீமியம் ஸ்டோரி
News
பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்

டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த சீட் டயட் உதவும்...

நாவை அடக்க முடியாமல் டெம்ப்டேஷனில் இருப்பவர்களுக்கான குட்டி ஜன்னல்தான் ‘சீட் டயட்’ (Cheat Diet). இன்றைய லைஃப் ஸ்டைல், உடல் பருமன் பிரச்னையை எக்கச்சக்கமான பேருக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. உடல் பருமனின் தொடர்ச்சியாக நம்மைப் பலவிதமான நோய்கள் பாதிக்கின்றன. எனவே, உடல் பருமனைக் குறைக்க, பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்குப் பொருத்தமான டயட் முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும். இதற்கு மனக் கட்டுப்பாட்டுடன் நாவையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.  

பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்
பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்

விருந்து, விசேஷங்களின்போது தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை மற்றவர்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்கள். டயட்டில் இருப்பவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களின் நாவில் உறங்கிக் கொண்டிருக்கும் சுவை நரம்புகள் விழித்துக்கொள்ளும். இதுபோன்ற நெருக்கடியைப் பத்திரமாகத் தாண்டிச் செல்ல மனதுக்குச் சொல்லிக்கொள்ளும் சமாதானம்தான் சீட் டயட். அதாவது, டயட்டில் இருப்பவர்கள் என்றைக்காவது தங்களுக்கு விருப்பமான பீட்சா, சிக்கன் போன்றவற்றை ருசி பார்க்க சீட் டயட் அனுமதிக்கிறது. டயட்டில் இருப்பவர் களுக்கு இந்த சீட் டயட் எந்த வகையில் உதவும் என்பதை விளக்குகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

``டயட் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவருக்கான டயட் சார்ட் தயாரிக்கும்போது  அவர்களுக்குப் பிடிக்காத உணவு வகைகளை உணவுத் திட்டத்தில் நாங்கள் சேர்ப்பதில்லை. முதலில் அவர்களுக்கு விருப்பமான உணவுகளைக் கேட்டு அதன் அடிப்படையிலேயே டயட் சார்ட் தயாரிப்போம். ஒருவருக்கு வெள்ளரிக்காய் பிடிக்கும் என்றால், வெள்ளரிக்காயுடன் தயிர் சேர்த்துச் சாப்பிடச் சொல்வோம். சிலருக்கு வெள்ளரிக்காயே பிடிக்காமலும் இருக்கலாம். அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சீட் டயட்டில் நாம் மனதைச் செல்லமாக ஏமாற்றுகிறோம். `டயட்டில் இருக்கிறேன். மனசுக்குப் பிடிச்ச எதையுமே சாப்பிடுறதில்லை’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஆவலைக் கட்டுப்படுத்துவதற்கான மேஜிக் இது. ஏங்கும் மனதைச் சமாதானப்படுத்த ஒருநாள் முழுவதிலும் பிடித்ததை எல்லாம் தீவிரமான வேட்கையுடன் அள்ளிக் கொட்டினால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும். எனவே, ஏமாற்றுவதிலும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சீட் டயட்டை முழு நாளும் அனுமதிப்பதும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். ஒருநாள் முழுக்க பீட்சா, சிக்கன் எனக் கலோரி அதிகமான உணவுகளைச்  சாப்பிட அனுமதிப்பது எதிர் விளைவையே உடலுக்கு ஏற்படுத்தும். `சீட் டயட்’ என்பதற்குப் பதிலாக, `சீட் மீல்’ என்பதை மட்டுமே இப்போது அனுமதிக்கிறோம். வாரத்துக்கு ஒருநாள் ஏதாவது ஒருவேளை உணவில் மட்டும் பிடித்ததைச் சாப்பிட அனுமதிக்கிறோம். ஆனாலும் சிலர், ஒரு வேளை உணவைக்கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடுவார்கள்.

பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்
பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்

சீட் மீலிலும் எல்லை தாண்டாமல் இருக்க சில டிப்ஸ்  தருவோம். டயட்டில் இருப்பவர் அகோரப்பசியுடன் போனால், அளவுக்கு அதிகமாகத்தான் சாப்பிடத் தோன்றும். சீட் மீலுக்கு முன்னதாகப் பழங்கள் சாப்பிடலாம். இது, அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும். சீட் மீலை முயற்சி செய்ய நினைப்பவர்கள், இஷ்டம்போல சாப்பிடும் பஃபே சிஸ்டத்தை விட்டுவிட வேண்டும்.  அளவோடு, பிடித்ததைச் சாப்பிடும் அ ல கார்ட் (A la carte) முறையைத் தேர்வு செய்யலாம். பீட்சா என்றால் முழு பீட்சா சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பீட்சாவில் ஒரு பீஸ் மட்டும் உட்கொள்ளலாம். சீட் மீலாக இருந்தாலும், அதிலும் கட்டுப்பாடு தேவை.

பிடித்த உணவுகளையே குறைந்த கலோரிகளில் உட்கொள்ளலாம். இனிப்புச் சாப்பிட விரும்புபவர்கள், இனிப்புக்குப் பதிலாகப் பேரீச்சை ஒன்றைச் சாப்பிடலாம். டிரை ஃப்ரூட்ஸ், கொஞ்சம் பால் என எடுத்துக்கொண்டு நேரடியாகச் சர்க்கரை சேர்த்த பதார்த்தங்களைத் தவிர்த்திடலாம்.

குறைந்தளவு கலோரி தரும் பப்பாளி, கொய்யா, தர்பூசணி  ஆகியவற்றை  உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். பழங்களை பழக்கலவையாகவும் குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளலாம். டயட்டில் இருப்பவர்கள்  சீட் மீலின்போது தங்களுக்குப் பிடித்த உணவைக் குறைவாகச் சாப்பிடலாம். பிடித்த உணவை டயட் கட்டுப்பாடுகளையும் தாண்டிச் சாப்பிட வேண்டும் என்று ஆட்டிப்படைக்கும் அடக்க முடியாத ஆவலை, சீட் டயட் சமாதானம் செய்துவிடும். பிடித்ததைச் சாப்பிடும் வேட்கையை, `சீட் டயட்டில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மனம் சொல்லும்போது, உங்கள் டேஸ்ட் பட்ஸ் கேட்டுக்கொள்ளும்’’.

- யாழ் ஸ்ரீதேவி