
ஹெல்த் - 3
ஓட்டமோ யோகாவோ தியானமோ உடலை வருத்தக்கூடிய, ஒரு புதிய நல்ல பழக்கத்தை உருவாக்குவது

அத்தனை சுலபமல்ல. அதை முதலில் ஏற்றுக்கொண்டால்தான் எந்தப் புதிய உடற்பயிற்சிக்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவது மிகச் சுலபம் என நினைக்கி றோம். உடற்பயிற்சிகளைவிடக் கடினமானது தொடர்ந்து நீடித்து அந்தப் பயிற்சிகளைச் செய்வது. ஏன் தெரியுமா? எந்தப் பயிற்சியும் 45 நாள்களுக்குப் பிறகுதான் கொஞ்சமாவது ரிசல்ட் கொடுக்கும். ஆனால், நாலு மீட்டர் நடந்ததும் தொப்பையைத் தடவிப்பார்த்து, ‘என்ன இன்னும் குறையல’ என ஏங்குகிற ஏரியா ஆட்கள் எக்கச்சக்கம்!
சரி, இதை எப்படி எதிர்கொள்வது..? அதற்கு முதலில், ஏன் பழக்கங்களை நம்மால் தொடர முடிவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
* உடனடியாகப் பலனை எதிர்பார்ப்பது. அது நடக்காதபோது சோர்ந்து போவது.
* ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதால் உண்டாகும் சலிப்பு.
* சின்னச் சின்ன வலிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது.
* உடல் மற்றும் மன மாற்றங்களால் சோர்வடைவது.
* ஆரம்பத்தில் இருக்கிற எனர்ஜியும் ஆர்வமும் குறைந்து போவது.

இவைதான் எந்தப் புதிய உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை நீண்டகாலம் தொடரமுடியாமல் போவதற்கான அடிப்படைக் காரணங்கள். இவை தவிர முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. எந்தப் புதிய பழக்கத்தைத் தொடர்வதாக இருந்தாலும் நம்முடைய மூளை எதிர்பார்க்கிற முக்கியமான ஒரு பொருள் இருக்கிறது. அது உடனடியான பரிசு! அந்தப் பரிசு ஒரு சின்னப் பாராட்டாக இருக்கலாம். ஒரு சாக்லேட்டாக இருக்கலாம். ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நான்கு லைக்குகளாவும் இருக்கலாம். இது இல்லாதபோதுதான் நமக்கு வாக்கிங் போகச் சலிப்பு வருகிறது; யோகா பண்ணப் பிடிக்காமல் போகிறது.
தீர்வு என்ன?
எந்தப் பயிற்சியாக இருந்தாலும் நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் பலன் கிடைக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதுதான் முதலும் முக்கியமானதும். எனவே பொறுமை மிகமிக முக்கியம். நம்மை நாமே பாராட்டிக்கொள்வது முக்கியம். `இத்தனை கோடிப் பேர் தூங்கிக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் அதிகாலையில் எழுந்து பொறுப்பாக வாக்கிங் போகிறேன், யோகா செய்கிறேன். நான் ரொம்ப கெத்து’’ என நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம். 30 நாள்கள் தொடர்ந்து யோகா பண்ணினால் ஒரு வாட்ச் வாங்கி எனக்கு நானே பரிசாகக் கொடுப்பேன். ஒரு யோகா மேட் வாங்குவேன் என்பது மாதிரியான பரிசுத்திட்டங்களை அறிவித்துக்கொள்ளுங்கள். யாருக்கு? நமக்குத்தான்! தினப்பரிசுகள் இன்னும்கூட அவசியம். ரன்னிங் முடித்ததும் ஒரு ஜூஸ், ஒரு லஸ்ஸி இப்படி...
வலிகளும் உடல் மன மாற்றங்களும் சீக்கிரமே சரியாகிவிடும். நடந்தால், ஓடினால் கால்கள் வலிக்கத்தான் செய்யும். நீச்சல் அடித்தால் தோள்கள் வலிக்கும்தான். இதெல்லாம் தற்காலிகமானது. இந்த வலிகளைக் கடக்கிற காலத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டால் பிறகு எப்போதும் அது இருக்காது. குறிப்பாக, ஸ்ட்ரெச்சிங் மாதிரியான விஷயங்களைத் தெரிந்துகொண்டால் இந்த வலிகளை ஓரளவு தவிர்க்கலாம்.
புதிய பழக்கங்கள் எதுவானாலும் 45 நாள்களுக்குத் தொடர்ச்சியாகச் செய்தால் அது உங்கள் அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாறிவிடும் என்கிறது அறிவியல். உடற்பயிற்சி களையும், பற்களைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது போன்ற ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளத்தான் நமக்கெல்லாம் ஆசை. அப்படி ஆசையிருந்தால் 45 நாள்களுக்கான சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். நாளையிலிருந்து 45 நாள்களுக்குப் புதிய உடற்பயிற்சி ஒன்றைச் செய்யப்போவதாக முடிவெடுத்துக் களத்தில் இறங்குங்கள்!
இதுபோக, நீங்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அறிவியுங்கள். சமூகவலை தளங்களில் சொல்லுங்கள். உறவினர்களிடம் சொல்லுங்கள். எந்நேரமும் உங்களுடைய இந்தப் புதிய பழக்கத்தைப் பற்றியே உரையாடுங்கள். இந்த மனநிலை உங்களையும் அறியாமல் அந்தப் பழக்கத்தின் மீதான காதலை உருவாக்கும். அதற்குப் பிறகு அந்தக் காதலில் ப்ரேக்-அப்பே இருக்காது!
நேரம் ஒதுக்குவோம்...
- வினோ, படம்: சொ.பாலசுப்பிரமணியன்