ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

எனக்கு 22 வயதாகிறது. குளிர்காலம் வந்தால் அதிகமாக வெள்ளைப்படுகிறது. குளிர்காலத்துக்கும் வெள்ளைப்படுதலுக்கும் ஏதேனும் தொடர்புண்டா, அல்லது அது என் யூகமா? வெள்ளைப்படுதலால் பிரச்னைகள் ஏற்படுமா?

- கே.சங்கீதா, திருச்சி

குளிர்காலத்துக்கும் வெள்ளைப்படுதலுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இது பருவநிலை மாற்றத்தால் உடலில் ஏற்படுவது இல்லை. வெள்ளைப்படுதல் என்பது, மாதவிடாய் சுழற்சியின் ஓர் அங்கம். எனவே பயம் வேண்டாம்.

கன்சல்ட்டிங் ரூம்

வெள்ளைப்படுதலில் கீழ்க்காணும் நிலைகள் இயல்பானவை.

* வெள்ளையாக, நீர்த்த நிலையில் வெளியேறுதல் - மாதவிடாய் சுழற்சியின் எந்த நாளிலும் ஏற்படலாம்.

* தெளிவாக, அடர்த்தி நிலையில் வெளியேறுதல் - கருமுட்டை வெளியாகும் ஓவுலேஷன் காலத்தில் ஏற்படலாம்.

* ரத்தம் கலந்த அரக்கு நிறத்தில் வெளியேறுதல் - மாதவிடாய் நாள்களின் முடிவில் இது  ஏற்படலாம்.

ஆனால், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல் ஏற்பட்டு, கூடவே  துர்நாற்றம் ஏற்பட்டாலோ, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ, அதைப் பிரச்னைக்குரிய காரணியாகக் கருத வேண்டும். தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். பரிசோதனையின் மூலம் காரணத்தைக் கண்டறிந்து, மருத்துவர் அதற்கான சிகிச்சையளிப்பார்.

கன்சல்ட்டிங் ரூம்

எனக்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். என் தாடையில் காணப்படும் நான்கைந்து முடிகள், என் மணமேடைக் கனவுகளைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. இதுவரை திரெடிங் செய்து சமாளித்து விட்டேன். திருமணத்துக்குப் பிறகு தாடை முடியால் என் கணவரின் கேலிக்கு ஆளாவேனோ என்று யோசனையாக இருக்கிறது. இதை முற்றிலுமாக நீக்க என்ன வழி? அதற்கு எவ்வளவு செலவாகும்?

- பி.புஷ்பா, செஞ்சி

கன்சல்ட்டிங் ரூம்

இது எளிதில் தீர்க்கக்கூடிய சாதாரணப் பிரச்னைதான். சரும மருத்துவரின் ஆலோசனையுடன் ‘எலெக்ட்ராலைசிஸ்’ (electrolysis) செய்துகொள்ளலாம். இது, மின்சாரத்தைச் செலுத்தி சருமத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கும் மருத்துவ முறை. இதனால் எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படாது. குறைந்த எண்ணிக்கையிலான ரோமங்கள் என்பதால், ‘ஸ்பாட் ஹேர் ரிமூவல்’ (Spot hair removal) என்ற லேசர் சிகிச்சையும் செய்துகொள்ளலாம். இந்த சிகிச்சை மூலம் ரோமங்களை நீக்கிவிட்டு, பின்னர் வருடத்துக்கு ஒருமுறை மெயின்டெயின் செய்தால் போதும். மேற்கூறிய சிகிச்சைகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

எனக்கு மாதவிடாய் நாள்களில் அளவுக்கு மீறிய ரத்தப்போக்கும் வலியும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் வலியைக் குறைப்பதற்காக, மாத்திரை உட்கொள்கிறேன். `இப்படி மாத்திரை சாப்பிடுவதால் கர்ப்பப்பை பாதிக்கப்படும், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்’ என்றெல்லாம் என் தோழிகள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைப்போல் மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கத்தான் வேண்டுமா? பிறகு, மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்க என்ன செய்வது?

- சி.சரளா, கோவை

கன்சல்ட்டிங் ரூம்

ஒன்றிரண்டு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது தவறில்லை. சிலர் ஒரே நாளில் நான்கைந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள். அது முற்றிலும் தவறான பழக்கம். எந்த நாளில் அதிக வலி எடுக்கிறதோ அன்றைக்கு மட்டும் மாத்திரை போட்டுக்கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ஏதாவது ஒரு நாளில் வலி இருப்பது இயல்பானது. அது ஓரிரு மாத்திரைகளில் சரியாகவில்லை என்பதற்காக அதிக மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. வலிக்காக அதிக மாத்திரைகள் உட்கொண்டால் வாந்தி, மயக்கம் போன்றவற்றை உடல் வெளிப்படுத்தும். வலி ஓரிரு மாத்திரைகளிலேயே குறைய வேண்டும். இல்லையென்றால், பரிசோதனை செய்து வயிற்றில் கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.