ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்

நிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. நீவுதல் சிகிச்சை என்பது அணுக்கள் மற்றும் திசுக்களைப் புதுப்பித்து, வலி மற்றும் நோயில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற இந்த சிகிச்சையைப் பிரபலங்கள் பலர் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். முற்காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். கிரேக்க நாட்டிலும் இந்தச் சிகிச்சை முறை பிரதானமாக இருந்துள்ளது.

நிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்

உடல் சோர்வைப் போக்க மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, பிற்காலத்தில் மூட்டு மற்றும் தசைகளைப் பலப்படுத்தப் பயன்பட்டது. இயற்கை மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிராட்ஸ் (Hippocrates), இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தினார். 17, 18-ம் நூற்றாண்டுகளில் நீவுதல் சிகிச்சை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. இன்று உலகம் முழுவதும் 100 விதமான நீவுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஸ்வீடிஷ் மசாஜ் (Swedish massage) என்ற பெயரில் ஏழு முக்கிய சிகிச்சைகள் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. நீவுதல் சிகிச்சை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்துடிப்பைச் சரி செய்யும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்; ட்ரிக்கெர் பாய்ன்ட் (Trigger point) எனப்படும் புள்ளிகளைத் தூண்டிவிடும். தசைப்பிடிப்புகளைப் போக்கும்; கழிவுகள் வெளியேற்றப்படும்; நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; மன அழுத்தம் குறையும்; என்டோர்பின் ஹார்மோன்களைச் (endorphin hormone) சுரக்கச் செய்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்; சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பசி உணர்வைத் தூண்டும். கழிவுகள் வெளியேறுவதால் உடல்பருமன் கட்டுக்குள் வரும்.

மூட்டு வலி, இடுப்பு வலி, வாதநோய் உள்ளிட்ட மூட்டு தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் இதன்மூலம் குணப்படுத்த முடியும். நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு நெஞ்சுப்பகுதியில் கொடுக்கப்படும் நீவுதல் சிகிச்சை நல்ல தீர்வைக் கொடுக்கும். சிறுநீரகப் பிரச்னைகளை இதன்மூலம் குணப்படுத்த முடியும். உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரையும் தேவையற்ற உப்புச்சத்துகளை வெளியேற்றவும் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யவும் இந்தச் சிகிச்சைப் பயன்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்

க்ரானியோசேக்ரல் (craniosacral) நீவுதல் சிகிச்சை தலைமுடி வளரவும் தண்டுவடப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் பயன்படுகிறது. மூளையில் உள்ள நிணநீர் ஓட்டத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்யும். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஹைபர் ஆக்டிவிட்டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை பலன் தரும்.

மனித உடலில் லிம்ப் (Lymph) என்ற ஒருவகை திரவத்தை வெளியேற்றும் ஓட்டப்பாதை இருக்கும். அதுதான் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். இதற்கு லிம்பாடிக் (Lymphatic) நீவுதல் சிகிச்சை பெரிதும் உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும்.

 லிம்ப் திரவம் வெளியேறாமல் தேக்கமடைவதால் ஏற்படக்கூடியதே நெறிகட்டுதலும் வலியும். லிம்பாடிக் நீவுதல் சிகிச்சைமூலம் இதைக் குணப்படுத்தலாம். லிம்ப் திரவம் சரியாக வெளியேறாவிட்டால் நாளடைவில் காசநோய் (டி.பி), புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஆகவே, தொடக்கநிலையிலேயே இந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் விளைவுகளைத் தடுக்கலாம்.

தசைகள், திசுக்கள், மூட்டு இணைப்புகளில் வரக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்ய மயோஃபேஷியல் (myofascial) நீவுதல் சிகிச்சை உதவும். இது வீக்கம், சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவற்றைச் சரிசெய்யும். பொலாரிடி நீவுதல் சிகிச்சை (Polarity Massage) என்பது உடலுக்குச் சக்தி தரக்கூடியது. கால் பாதங்கள், உள்ளங்கால்களில் முக்கியப் புள்ளிகள் உள்ளன. இவற்றைத் தூண்டும் பணிக்கு ரிஃப்ளெக்சாலஜி நீவுதல் சிகிச்சை (Reflexology massage) உதவும். இதன்மூலம் நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும். தசைகளை இழுத்து, இயல்பாக்க ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை (Rolfing massage) அளிக்கப்படும். நாய், பூனை போன்ற விலங்கினங்கள் தூங்கி எழுந்ததும் கைகால்களை நெட்டி முறிக்கும். இதுவும் ஒருவகை ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை. பொதுவாக கூன் விழுதல், கைகால் பிறழ்தல், முகம் கோணலாவது போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய இந்த நீவுதல் சிகிச்சை உதவும்.

அடுத்த இதழில் வாசனைத் திரவிய சிகிச்சை பற்றிப் பார்ப்போம்.

தொகுப்பு: எம்.மரியபெல்சின்

படம்: வீ.நாகமணி