ஹெல்த்
Published:Updated:

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?
பிரீமியம் ஸ்டோரி
News
வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

வெளியிலிருந்து வீட்டுக்குள் நாம் தத்தெடுத்துக் கொண்டு வரும் கிருமிகள் குறித்து நமக்கு எப்போதும் விழிப்பு உணர்வு உண்டு. விளையாடிவிட்டு வந்தால் கை, கால் கழுவ வேண்டும் என்பது நம் தசை நினைவகத்திலேயே அழுத்தமாகப் பதிந்துவிட்ட ஒன்று. இதனால், நாம் சுத்தமாகத்தான் இருக்கிறோம், நம் வீடு அசுத்தம் இன்றி, ஆரோக்கியமான வாழ்விடமாகத்தான் இருக்கிறது என்ற எண்ணம் நமக்கு எப்போதும் மேலோங்கியிருக்கும். அதை வழிமொழிய நாம் அடிக்கடி வீட்டைச் சுத்தப்படுத்துவது நினைவுக்கு வரும். ஆனால், சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தால் வீட்டினுள்ளேயே அழுக்கு சேர, கிருமிகள் உருவாகத் தேவையான வாழ்விடத்தை நாமே அமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மை தெரியவரும். உங்கள் மேசை, அலமாரி, எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தொடங்கி வீட்டினுள்ளே உலவும் காற்று வரை எல்லாவற்றிலும் சூழ்ந்திருக்கிறது ஆபத்து. வீட்டிலுள்ள அனைவரின் உடல்நலத்தையும் அதுவே பாதிக்கிறது. வாங்க, ஒரு ரவுண்டு போவோம்!

சுத்தம் செய்யும் ரசாயனங்கள் சரியானவையா?

நாம் பயன்படுத்தும் சுத்தம் செய்யும் ரசாயனங்கள் பலவற்றிலும் தீங்கு விளை விக்கும் பல கனிமங்கள் இருக்கின்றன. குளோரின் கலந்த பிளீச்சிங் பவுடர், பெட்ரோகெமிக்கல்ஸ் போன்றவை கண்களில் எரிச்சல் மற்றும் சருமத்தில் புண்களை ஏற்படுத்தும்.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வினிகர், சோடா, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சுத்தப்படுத்தப் பயன்படுத்தலாம்.

ஏர் ஃப்ரெஷ்னர் எதற்கு?

மல்லிகை மணம், ஜவ்வாது மணம் எனக் கூறி ஏர் ஃப்ரெஷ்னர்களை அறைக்கு ஒன்றாக அடுக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அதிலும் கழிப்பறை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், அமெரிக்காவில் 1500 பெண்களைக் கொண்டு சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஃப்ரெஷ்னர்களைப் பயன்படுத்துவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சைலன்ட் ஸ்ப்ரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வகப் பரிசோதனையில் ஏர் ஃப்ரெஷ்னர்களில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. நேரடியாக அதனால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று கூறமுடியாவிட்டாலும், இது ஓர் எச்சரிக்கை மணிதான். அதுமட்டுமின்றி, இதில் தாலேட்ஸ் (phthalates) எனப்படும் ஹார்மோனைச் சீர்குலைக்கும் ரசாயனங்கள் இருப்பதால், குழந்தைகளை இது பாதிக்கலாம் என்கிறார்கள்.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: எல்லா அறைகளிலும் ஜன்னல்களை அவ்வப்போது திறந்துவிட்டுச் சுத்தமான காற்றை உள்ளே அனுமதித்தால் போதும். கழிவறையில் ஒரு பாத்திரத்தில் சமையல் சோடா வைத்தால் போதும்.

சமையலறையில் கூடாரம் போடும் கிருமிகள்

சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவருமே முயல்வோம். ஆனால், சூடான பாத்திரத்தை இறக்கி வைக்க, சிந்திய காபியைத் துடைக்க என வைத்திருக்கும் கரித்துணியைத் துவைக்கவும் மாட்டோம்; மாற்றவும் மாட்டோம். வெள்ளை நிறத்தில் இருந்த துணி, கறுப்பாகவே மாறியிருக்கும். சமையலறை என்றவுடன் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் சுட்டிக்காட்டும் முக்கியக் குற்றவாளி இந்தக் கரித்துணிதான். இந்தத் துணிகளில் 20 சதவிகிதம், கிருமிகளின் இருப்பிடமாகத்தான் இருக்கின்றன. அதைவிட உச்சமாக, 35 சதவிகித ஃப்ரிட்ஜ்கள், பாக்டீரியாவின் வாழ்விடமாக இருக்கின்றன. இவற்றுள் 15 சதவிகித ஃப்ரிட்ஜ்கள், உணவு ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் ஸ்டேஃபைலோகாக்கஸ் ஆரியஸ் (staphylococcus aureus) எனப்படும் பாக்டீரியா உருவாகக் காரணமாகின்றன.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: கரித்துணிகளை 60 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பத்தில் சுத்தப்படுத்த வேண்டும். இந்த வெப்பம் மட்டுமே கிருமிகளை அழிக்கும். தரையைத் துடைக்க வேறு துணி, உணவு சமைக்கும்போது பயன்படுத்த வேறு துணி என்று பிரித்து வைத்துக்கொள்வது நலம். சுத்தம் செய்யும்போது, கதவின் கைப்பிடிகள், லைட் ஸ்விட்சுகள், பாத்திரங்களின் பிடிகள், ஃப்ரிட்ஜின் உட்புறம் என்று அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

உட்புற மாசு 

மாசு என்றாலே நம்மைப் பொறுத்தவரை, வெளியில் ஏற்படும் நிகழ்வுதான். வீட்டினுள்ளே, நம் அறையினுள்ளே வெளிப்புறத்தை விடவும் மாசு இருக்கிறது என்பது நாம் இதுவரை அறிந்திராத உண்மை. கண் எரிச்சல், தலைவலி, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைப் பிரச்னை, இதெல்லாம் வீட்டிலிருக்கும் மாசைச் சுட்டிக்காட்டுவதுதான். அதுவும் நீங்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் அளவுக்கதிக மாசு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டையாக்ஸைடு போன்றவை மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்துவதால் உருவாகின்றன. இவற்றுள் நைட்ரஜன் டையாக்ஸைடு சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. வினைல் தரைகள், செயற்கை அலங்கார அமைப்புகள் போன்றவை எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களை உருவாக்கி, நம் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: ஜன்னல் கதவுகள் பெரும்பாலும் திறந்தே இருக்கட்டும். காற்றோட்டம் ஏற்படும் வகையில் அறைகள் இருப்பது அவசியம். சங்குப் பூக்கள் போன்ற வீட்டில் வளர்க்கும் செடிகள் கொண்டு மாசின் அளவைக் கட்டுப்படுத்தலாம். கம்பளங்கள், சோஃபாக்கள் போன்றவற்றை வேக்வம் கிளீனர்கள் கொண்டு தினமும் சுத்தம் செய்யுங்கள்.

கதிர்வீச்சு அபாயங்கள்

கார்ட்லெஸ் போன்கள் பயன்படுத்தும்போது, வயர்லெஸ் ரிசீவரை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு ஒய்யாரமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்போம். ஒரு தகவல் போனில் இருந்து கார்ட்லெஸ் ரிசீவருக்கு வர நுண்ணலை எனப்படும் மைக்ரோவேவ் அலைகளைத்தான் பயன்படுத்துகின்றன. இது வெளியிடும் கதிர்வீச்சு, செங்கல்லாலான சுவர்களைக்கூடத் தாண்டிச் செல்லும். செல்போனைவிட இதன் கதிர்வீச்சு அதிகம் வீரியம் கொண்டது. நாள்பட்ட சோர்வு மற்றும் தூக்கமின்மை இதனால் ஏற்படலாம்.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: முடிந்தவரை கார்ட்லெஸ் போன்களை தவிர்க்கலாம். வயர்களால் இணைக்கப்பட்ட போன்கள் சிறந்த தேர்வாக அமையும். இல்லை, கார்ட்லெஸ் அவசியம் என்றால், கதிர்வீச்சு குறைவாக உள்ள போன்களாக வாங்கவும்.

சமையலறைச் சாதனங்களும் எதிரிகளே!

இட்லிப் பாத்திரங்கள், பணியாரக் குழிகள், காய்கறிகள் துருவ உதவும் கருவிகள் என அனைத்திலும் ஒளிந்திருக்கிறது ஆபத்து. கழிவறைச் சுவர்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவற்றில் சேரும் பூஞ்சையைக் கண்டு பயப்படும் நாம், சமையலறைப் பொருள்களில் சேரும் தீங்குகளைக் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக சளி, இருமல், ஆஸ்துமா, தலைவலி மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: சமையலறைச் சாதனங்களை உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்வது அவசியம். டிடெர்ஜென்ட் பயன்படுத்தி நன்றாகத் துலக்க வேண்டும். வினிகர் தெளித்துப் பின்பு சுத்தம் செய்தால் கிருமிகள் உருவாகாமல் தடுக்கலாம்.

அலங்காரத்தால் வரும் ஆபத்து

பிவிசி பொருள்கள், புதிதாக பெயின்ட் பூசப்பட்ட பொருள்கள் நன்றாக மணம் வீசினாலும் அதிலிருந்து வெளிவரும் ஆபத்தான வாயுக்கள் ஐந்து வருடம் கூட வீரியம் குறையாமல் இருக்கும். 2001ன் க்ரீன்பீஸ் ரிப்போர்ட்டின்படி, அலங்காரப் பொருள்களில் தீப்பிடிக்காமல் இருக்கக் கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிகள் பெருகாமல் இருக்கச் சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள் ஹார்மோன்களை பாதிப்பதாகத் தெரிகிறது.

வீடா? - கிருமித் தொழிற்சாலையா?

தீர்வு: பொதுவாக, வீடு மற்றும் அலுவலகங்களுக்குப் புதிய நாற்காலிகள் மற்றும் மேசைகள் வாங்காமல், பழைய பொருள்களைப் புதுப்பிக்க முயற்சி செய்யலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமையலறை, கழிவறை போன்ற தினமும் பயன்படுத்தும் இடங்களைத் தினமும் சுத்தம் செய்து, நன்கு உலரச்செய்து பிறகு பயன்படுத்தினால், பல நோய்களைத் தடுக்க முடியும். நம் உடலின் ஆரோக்கியம் நம் கைகளில்தான்.

- ர.சீனிவாசன்