
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
`அழுக்குத் தீரக் குளித்தவனுமில்லை; ஆசை தீர அனுபவித்தனுமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. வாழ்வின் இறுதி விநாடி வரை தீராதவை செக்ஸ் குறித்த சந்தேகங்கள். காதல், கவர்ச்சி, இன்பம், இணைப்பு, இனப்பெருக்கம், நிறைவு இவற்றில் எதை செக்ஸுக்கான விளக்கமாக எடுத்துக்கொள்வது? புகழ்பெற்ற தத்துவ அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு, `எல்லோருடைய பலவீனமும் பலமும் செக்ஸ்தான்’ என்கிறார். அது, வாழ்வில் பிரிக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. அது இல்லையென்றால், உலகம் உயிரினங்களற்ற, உயிரற்ற ஓர் உருண்டை. அவ்வளவுதான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய செக்ஸை நாம் எவ்வளவு மோசமாகப் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதே வேதனையான ஒன்று. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம்... என அத்தனைத் துறைகளும் அபார முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலத்திலும், செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்தான் நம்மை, குறிப்பாக இளைஞர்களை ஆட்டிப்படைக்கின்றன;

எந்த நோயும் இல்லாதவர்களுக்கும், உடலுறவின் போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆணுறுப்பின் முன்பகுதி தோல் (Fore skin) கடினமாக, பின் நோக்கித் தள்ள முடியாதபடி இருப்பது. இந்த நிலைக்கு `ஃபைமோசிஸ்’ (Phimosis) என்று பெயர். இதன் காரணமாக உடலுறவின்போது கடுமையான வலி ஏற்படும். விந்து சீக்கிரமாக வெளியேறாது. தோல் கிழிந்து ஆணுறுப்பு காயமாகலாம். பொதுவாகவே, குளிக்கும்போது, ஆணுறுப்பின் முன் பகுதியில் இருக்கும் தோலைப் பின்பக்கம் தள்ளிவிட்டுவிட்டு, அதை நன்றாகக் கழுவவேண்டியது அவசியம். அப்போதுதான் நோய்த்தொற்றுகள் ஏற்படாது. ஆணுறுப்பின் முன்பகுதியில் உள்ள தோல் (Fore skin) பின்பக்கம் தள்ள முடியாமல் சிலருக்கு இருப்பதுண்டு. சிலருக்குப் பிறப்பிலேயே அதுபோல இருக்கலாம்.அல்லது, ஏதாவது நோய்த் தொற்றின் காரணமாகவும் அப்படி இருக்கலாம். பிறந்ததிலிருந்து அப்படி இருந்தால், அதற்கு ஒரே வழி `சுன்னத் அறுவை சிகிச்சை’ (Circumcision) செய்வதுதான். நோய்த்தொற்றின் காரணமாக இதுபோல இருந்தால், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே சரியாகும்.

`விரைப்புத்தன்மை நீண்ட நேரம் நீடிக்கும்’ என்று சொல்லி, பல எண்ணெய்களையும், மாத்திரைகளையும் விற்பதற்கான விளம்பரங்களைப் பார்த்திருப்போம். ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள். எந்த மருத்துவமாக இருந்தாலும், நல்ல மருந்துக்கு விளம்பரம் தேவையில்லை. நல்ல மருந்துகளை மருத்துவர்களே பரிந்துரைத்துவிடுவார்கள். விரைப்புத்தன்மை பிரச்னைக்கான காரணத்தை முதலில் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். விரைப்புத் தன்மைப் பிரச்னைக்கு ஆணுறுப்பு அமைப்பில், ஹார்மோனில், ரத்தக்குழாய்களில் பிரச்னைகள் இருக்கலாம்... உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக இருக்கலாம்... நரம்பு தொடர்பான பிரச்னைகளும் காரணமாகலாம். இவை உடல்ரீதியான கோளாறுகள். குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்ட சூழலில் ஒருவர் வளர்க்கப்படுகிறார் என்பது மனரீதியான ஒரு காரணி. தன்னம்பிக்கையின்மை, பயம், சோகம், கணவன்-மனைவி இடையேயான மன வேற்றுமை, சுய இன்பத்தால் ஆற்றல் வீணாகிவிடும் போன்ற மூடநம்பிக்கைகளாலும் ஆணுறுப்பு விரைப்புத் தன்மையில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னையைச் சரியான மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்துவிட முடியும் என்பதே உண்மை.
(இன்னும் கற்றுத் தருகிறேன்)
- மு.இளவரசன்