மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி

மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி

கு.கணேசன், பொதுநல மருத்துவர்டெக்னாலஜி

லகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் மக்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது மலேரியா. உலக நாடுகளில் ஆண்டுதோறும் 30 கோடிப் பேருக்குப் புதிதாக மலேரியா வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 30 லட்சம் மக்கள் ஆண்டுதோறும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் மலேரியா ஒழிக்கப்பட்ட உலக நாடுகளில் இலங்கைகூட இணைந்துவிட்டது. ஆனால், இந்தியா இன்னமும் அதற்குத் தயாராகவே இல்லை. ஆனால், மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசியைத் தற்போது கண்டுபிடித்துவிட்டனர்.

மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி
மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி

கடந்த 30 ஆண்டு காலமாக அயராது உழைத்த விஞ்ஞானிகளால் இது சாத்தியமாகி இருக்கிறது. அமெரிக்காவில் கிளாக்ஸோ சுமித்லைன் (Glaxo SmithKline) எனும் மருந்து நிறுவனமும் ‘பாத்’ (PATH) எனும் உலக நலச்சேவை அமைப்பும் இணைந்து இச்சாதனையைச் செய்துள்ளன.

கொசுக்கள் நம் எதிரிகள்

‘பிளாஸ்மோடியம்’ என்னும் கிருமிகள்தான் மலேரியாவுக்கு மூல காரணம். இவை பெண் அனாபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இந்தக் கொசுக்கள். இரவில்தான் நம்மைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து, ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இவை ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி கோடிக்கணக்கில் பெருகி, அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா அறிகுறிகள்

முதல் கட்டமாக நோயாளிக்குக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு உண்டாகும். குளிர்காய்ச்சல் ஏற்படும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகி உடல் அனலாய்க் கொதிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ் போலக் குளிர்ந்துவிடும். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ மீண்டும் அதே நேரத்தில் வரும்.

என்ன பாதிப்புகள்?

மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைப் பெறாவிட்டால் ரத்தச்சோகையும் உடல்தளர்ச்சியும் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மஞ்சள்காமாலை வரும். சிலருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு. இன்னும் சிலருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர்க் காய்ச்சல்’ (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

என்ன பரிசோதனை?

நோயாளியின் விரல் நுனியில் ரத்தம் எடுத்து, அதில் மலேரியாக் கிருமி இருக்கிறதா எனப் பரிசோதிப்பது ஒருவகை. ‘மலேரியா எதிர் அணுக்கள் பரிசோதனை’ என்று மற்றொரு பரிசோதனையில் மலேரியா கிருமியின் வகை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். மலேரியா கிருமிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது நோயைத் தெளிவாகத் தெரிவிக்க ‘க்யூபிசி’ (QBC) பரிசோதனை பயன்படுகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி

சிகிச்சை என்ன?

மலேரியாவைக் குணப்படுத்துவதற்கு குளோரோகுயின், பிரிமாகுயின், குயினின், மெஃப்ளாகுயின், டாக்சிசைக்ளின் மாத்திரைகளும், ஆர்ட்டிசுனேட் ஊசிகளும் மாத்திரைகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்த சிகிச்சையை முறைப்படி எடுத்துக்கொண்டால்தான், மலேரியா மறுபடியும் ஏற்படாது. ஆனால், பல பேர் இவற்றை முறைப்படி சாப்பிடுவதில்லை என்பதால், இந்த மாத்திரைகளையே எதிர்த்துப் போராடுகிற அளவுக்கு இப்போது மலேரியா கிருமிகளுக்கு ஆற்றல் வந்துவிட்டது. இதனால், மலேரியாவைப் பூரணமாகக் குணப்படுத்துவது என்பது மருத்துவ உலகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது.

கொசுக்களை ஒழிப்போம்

மலேரியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. வீட்டைச்சுற்றி சாக்கடை தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுச்சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ அல்லது ‘மாலத்தியான்’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்ரின்’ (Deltamethrin) மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர்நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ப் புகைக்க கொசுக்கள் இறக்கும். குடிநீர்த் தொட்டிகளில் ‘டெமிபாஸ்’ (Temephos) மருந்தைத் தெளிக்க வேண்டும்.

தடுப்பூசித் தயாரிப்பில் சிரமம் ஏன்?

பிளாஸ்மோடியம் கிருமிகளில் ஃபால்சிபேரம், மலேரியே, ஒவேல், விவாக்ஸ் என்று மொத்தம் 4 வகைகள் இருப்பதால், ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனியாகத் தடுப்பூசி தயாரிப்பது சிரமம். அடுத்து, இக்கிருமிகளுக்கு ஸ்போரோசாய்ட், மீரோசாய்ட், ட்ரோபோசாய்ட், சைசாய்ன்ட், கேமிட்டோசைட் என்று பல பருவங்கள் உண்டு. இவற்றில் எந்தப் பருவத்தைத் தடுக்கத் தடுப்பூசி தயாரிப்பது என்பதிலும் தடுமாற்றம். இந்தத் தடைகளையெல்லாம் கடந்து இப்போது RTS, S (Mosquirix) எனும் பெயரில் தடுப்பூசி தயாராகிவிட்டது!

எப்படிப் போடுவது?

குழந்தைக்கு 5 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியைப் போட வேண்டும். அதைத் தொடர்ந்து ஒரு மாதம் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட வேண்டும். அதற்குப் பிறகு 15லிருந்து 18 மாதங்களுக்குள் நான்காவது தவணையையும் போட்டுவிட வேண்டும். ஏதாவது ஒரு தவணைத் தடுப்பூசியைப் போட மறந்தாலோ, விட்டுப்போனாலோ, மலேரியாவுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

கடந்த 10 வருடங்களாக இதை ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்குச் சோதனைமுறையில் போட்டு வருகிறார்கள். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 100 குழந்தைகளில் 70 பேருக்கு மலேரியா வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இறுதிக் கட்டப் பரிசோதனையை வரும் ஆண்டில் தொடங்குகிறார்கள். அதற்குப் பிறகு இந்தத் தடுப்பூசிக்கு உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகாரம் கொடுத்துவிடும். அப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தி மலேரியாவுக்கு மரண அடி கொடுத்துவிடும்.

(தேடுவோம்...)

மரபணுப் பொறியியல் தொழில்நுட்பம்

மலேரியாவை அதிகம் பேருக்கு ஏற்படுத்துகின்ற – மிகவும் ஆபத்து தருகின்ற - பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம் கிருமிக்கு எதிரான தடுப்பூசி இது. மரபணுப் பொறியியல் (Genetic Engineering) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுஇணைப்பு (Recombination) மூலம் செல்லில் உள்ள டி.என்.ஏ. மரபணு மூலக்கூற்றை மாற்றி, புதிய மூலக்கூற்றை உண்டாக்கி, பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற கடத்துநர்கள் வழியாக உடலில் எங்கு மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கு செலுத்தப்படும் நவீன உத்தி இது. பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம் கிருமி நம் உடலுக்குள் நுழையும் முன் ‘ஸ்போரோசாய்ட்’ பருவத்தில் இருக்கிறது. அப்போது அக்கிருமியின் RTS எனும் புரதம் சார்ந்த மரபணுவின் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்துக்கொள்கிறார்கள். பின்னர், ஈஸ்ட் செல் மரபணுவில் ஒரு பகுதியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட மரபணுவை வைத்து இணைத்துவிடுகிறார்கள். இப்படி இணைக்கப்பட்ட புதிய மரபணுவுடன் ஹெப்படைட்டிஸ்-பி கிருமியின் S எனும் புரத மூலக்கூற்றையும் இணைத்து ஈஸ்ட் செல்களுக்குள் செலுத்துகிறார்கள். பிறகு அந்த ஈஸ்டுகளைச் சோதனைச் சாலையில் வளர்க்கிறார்கள். இந்த ஈஸ்டுகளுடன் AS01 துணைப்பொருளைக் (Adjuvant) கலந்து தடுப்பூசி தயாரிக்கிறார்கள். இதில் உள்ளது ஈஸ்ட் செல்கள்தான் என்றாலும், இதில் வளர்ந்துள்ள RTS மற்றும் S புரதங்கள் மலேரியாவுக்கான ‘ஆன்டிஜென்’களாகச் செயல்படுகின்றன. ஆகவே, இத்தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதும், பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம் கிருமிகளுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு அணுக்கள் (Antibodies) தோன்றிவிடுகின்றன. பிறகு, இவர்களுக்குக் கொசுக்கள் கடித்து மலேரியா கிருமிகள் ரத்தத்துக்கு வரும்போது, இந்த எதிர்ப்பு அணுக்கள் அக்கிருமிகளை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடுகின்றன;  கல்லீரலுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. இதன் பலனால், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு மலேரியா ஏற்படுவதில்லை.