ஹெல்த்
Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் 4வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி வாங்கிய பல தொற்றுநோய்களை இன்று பெருமளவு ஒழித்து விட்டோம். ஆனாலும், முற்றிலுமாக அவை ஒழிந்துவிடவில்லை. அவ்வப்போது புதிது புதிதாக வெவ்வேறு தன்மைகளோடு அவை மனிதகுலத்தை தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றன. இன்று மருத்துவ உலகில் பெருமளவு முன்னேற்றங்கள் வந்துவிட்டன. நாளுக்கு நாள், வந்து கொண்டும் இருக்கின்றன. அடுத்த நூறாண்டுகளுக்கு மனிதர்களுக்குச் சவாலாக விளங்கப்போகும் தொற்றுநோய் களுக்காகப் பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இதோ இந்த நிமிடத்திலும் சோதனைக்கூடத்தில் அமர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொற்று நோய்களின் உலகம்!

உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிதாக ஒரு தொற்றுநோய் தாக்குகிறது என்றால் அடுத்த சில நாள்களில் அந்த நோய்க்குக் காரணமான கிருமியைக் கண்டறிந்து அதை அழிக்கும் மருந்தையும் கண்டுபிடித்து விட முடிகிறது. இந்த முன்னேற்றமெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. பல நூறாண்டு கால ஆராய்ச்சியின் விளைவு.

தொற்று நோய்களின் உலகம்!

காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்களுக்குக் காரணம், கிருமிகள் தான் என்பதை 1800-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதகுலம் அறிந்திருக்கவில்லை. காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்களெல்லாம் கெட்ட காற்று காரணமாகவும், முன்னோர் சாபம் காரணமாகவுமே பரவுகின்றன என்று நம்பினார்கள்.

மைக்ரோஸ்கோப் (microscope) கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த ஒரு முன்னேற்றம். 1590 முதல் 1670 வரை தொடர்ந்து மைக்ரோஸ்கோப்பை முழுமைப்படுத்துவதற்கான வேலைகள் நடந்தன. ஆனால் மைக்ரோஸ்கோப் வந்தபிறகும் கூட, தொற்றுநோய்களுக்குக் காரணம் கிருமிகள்தாம் என்று கண்டறிய முடியவில்லை.

முதன்முதலில், மக்களின் நம்பிக்கைகளைத் தாண்டி தொற்றுநோய்களுக்கு வேறு காரணம் இருக்கிறது என்று கண்டுபிடித்தவர், இங்கிலாந்து மயக்கவியல் மருத்துவரான ஜான்ஸ் ஸ்னோ (John Snow-1813 – 1858). 1854-ல் லண்டன் நகரத்தில் காலரா நோயின் தாக்கம் கடுமையாக இருந்தது. பெருமளவு மக்கள் உயிரிழந்தார்கள். கெட்ட காற்று காரணமாகவே இந்த நோய் பரவுகிறது என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.ஆனால், ஜான்ஸ் ஸ்னோ அப்படி நம்பவில்லை. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். காலராவால் பாதிக்கப்பட்ட லண்டன் நகருக்குச் சென்றார். நோயுற்ற மக்களைச் சந்தித்துப் பேசினார்.

தொற்று நோய்களின் உலகம்!

லண்டன் மாநகரத்தின் வரைபடத்தை உருவாக்கி, காலரா பாதித்த பகுதிகளை அந்த வரைபடத்தில் பதிவு செய்தார். அதன் மூலம், காலரா பாதிப்பு குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே இருக்கிறது என்ற உண்மை புலப்பட்டது. அதுமட்டுமல்ல... குறிப்பிட்ட குடிநீர் தொட்டி இருக்கிற இடத்தில் மட்டுமே தாக்கம் அதிகம். அந்தக் குடிநீர் தொட்டியின் நீரை யாரெல்லாம் பயன்படுத்தினார்களோ அவர்கள் எல்லோரும் காலராவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இறுதியில், ‘காலரா, கெட்ட காற்றால் பரவவில்லை. அந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் மூலமாகவே பரவியிருக்கிறது. அந்தத் தண்ணீரில் காலராவைப் பரப்பும் ஏதோ ஒன்று கலந்திருக்கிறது’ என்று அவர் அறிவித்தார். உடனடியாக லண்டன் உள்ளாட்சி நிர்வாகம் அந்தக் குடிநீர்த் தொட்டியை மூடியது. காலராவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தது.

இதுதான் கிருமிகள் பற்றிய முதல் தியரி. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் இன்னொரு முக்கியச் சம்பவமும் நடந்தது. அதுவும் அக்கால மருத்துவ உலக நம்பிக்கையைப் புரட்டிப் போட்டது. இக்னாஸ் செம்மல்வேய்ஸ் (Ignaz Semmelweis) என்ற அந்த ஹங்கேரி மருத்துவரின் கண்டுபிடிப்பு பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- களைவோம்...