ஹெல்த்
Published:Updated:

இது பச்சை ரத்தம்!

இது பச்சை ரத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது பச்சை ரத்தம்!

இது பச்சை ரத்தம்!

``கோதுமை, எல்லோருக்கும் தெரியும். கோதுமைப்புல்...? இது நம்மூர் பயிர் இல்லை. ஆனால் மிகச்சிறந்த இயற்கை மருந்து. இருமல், சளியைக் குணப்படுத்துவதுடன் ரத்தத்தைச் சுத்தம் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. அதுமட்டுமல்ல... தொண்டைப் புண்ணை ஆற்றவும் இது பயன்படுகிறது...’ என்கிறார் சித்த மருத்துவர் க.திருத்தணிகாசலம்.  கோதுமைப்புல்லின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகிறார் அவர்.

இது பச்சை ரத்தம்!

கோதுமைப்புல் சாறு

கோதுமைச் செடி, புல்போல இருக்கும். வளர்ந்த கோதுமைப்புல்லை  அறுவடை செய்து அரைத்துச் சாறாக்கிக் குடிப்பதன்மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.  கோதுமைப்புல் சாற்றை முதன்முதலில் சிகிச்சைக்குப் பயன்படுத்தியவர், ‘ஆன் விக்மோர்’ (Ann Wigmore) என்ற இயற்கை மருத்துவ நிபுணர்.  இவர் வெறும் கோதுமைப்புல் சாற்றை மட்டுமே  கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தினார்.
கோதுமைப்புல் சாற்றில் உயிர்த் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அரிய சத்துகள் உள்ளன. நல்ல உடல்நலத்துடன் உள்ள ஒரு மனிதனின் ரத்தத்தில் உள்ள அனைத்துச் சத்துகளும் கோதுமைப்புல் சாற்றில் இருப்பதால் இதை `பச்சை ரத்தம்’ என்பார்கள்.

இது பச்சை ரத்தம்!

என்னென்ன சத்துகள்?

கோதுமைப்புல் சாற்றில் வைட்டமின்-ஏ, பி, இ, கே போன்றவை அதிக அளவில் உள்ளன. இதில்,  வைட்டமின்-பி கலவைச்சத்து மிக அதிகம் உள்ளது. இதில், ‘லேயிட்ரைல்’ (Laetrile)  என்னும்  வைட்டமின் பி-17 சத்து அதிகமாக இருப்பதால் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்  இதற்கு உண்டு.  கோதுமையைத் தானியமாகப் பயன்படுத்துவதைவிட முளைப்பாரி செய்து பயன்படுத்தினால் 100 மடங்கு லேயிட்ரைல் சத்தைப் பெற முடியும். மனித உடலில் உள்ள என்சைம்கள் சுறுசுறுப்பாக இயங்க, கோதுமைப்புல் சாற்றில் உள்ள மக்னீசியம் உதவும். கோதுமைப்புல் சாற்றில் உள்ள பச்சையம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். குடலில் சேரும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். ரத்தச்சோகையைப் போக்கும். சிறுகுடல், ரத்தக்குழாய்கள், சிறுநீர்ப்பை, நுரையீரல் போன்றவற்றின் செயல்பாடுகளையும் தூண்டும்.

என்னென்ன நோய் தீர்க்கும்?

கோதுமைப்புல் சாறு குடிப்பதன்மூலம் தலைமுடி தொடர்பான நோய்கள், மன- உடல்நலப் பாதிப்புகள், சிறுநீர்ப்பைக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். சர்க்கரைநோய், இதய நோய், மூட்டு வலி, பக்கவாதம், சளி, மூலம், இளநரை, பிரசவம் தொடர்பான பிரச்னைகள், ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு, கண் - காது நோய்கள், தூக்கமின்மை போன்றவை சரியாகும்.

கோதுமைப்புல் வளர்ப்பது எப்படி?

கோதுமையை விதைப்பதற்கு முன் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு வெளியே எடுத்து ஈரமான துணியில் கட்டித் தொங்கவிட வேண்டும். 24 மணி நேரத்தில் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை மண் நிரப்பிய தொட்டிகளில் விதைக்கலாம். விதைத்த ஏழாவது நாளில் கோதுமைப்புல்லை வெட்டிப் பயன்படுத்தலாம். ஒரேநாளில் எல்லாத் தொட்டிகளிலும் வளர்க்காமல் 10 -12 தொட்டிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளாக விதைகளை ஊன்றி முளைக்கவிட்டுப் பயன்படுத்தலாம்.

சாறு எடுப்பது எப்படி?

தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கோதுமைப்புல்லைத் தண்ணீரில் நன்றாகக் கழுவிச் சிறிது தண்ணீர் தெளித்துத் துவையல்போல அரைக்க வேண்டும். அதன்பிறகு மெல்லிய துணியில் வைத்துக் கசக்கிப்பிழிந்து சாறு எடுக்க வேண்டும். சாறு குடிக்க விரும்பாதவர்கள் புல்லை அப்படியே மென்று சாப்பிடலாம். சாற்றை விழுங்கிவிட்டுச் சக்கையைத் துப்பிவிட வேண்டும்.   

சாறு அருந்துவது எப்படி?

தொடக்கத்தில், சில நாள்கள் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கலாம். அல்லது ஏதாவது ஜூஸ் குடித்துவிட்டு அதன் பிறகு குடிக்கலாம். முதலில் குறைந்த அளவில் அருந்திவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அளவைக் கூட்ட வேண்டும். சிலருக்கு வாந்தி, பேதி அல்லது காய்ச்சல் வரலாம். இதைக்கண்டு பயப்படத் தேவையில்லை.  சாற்றுடன் கொஞ்சம் தண்ணீர் அதிகம் சேர்த்துக் குடிக்கலாம். பிரச்னை தொடர்ந்தால் ஒன்றிரண்டு நாள்கள் நிறுத்திவிட்டு மீண்டும் தொடரலாம். சாற்றுடன் வேறு எதையும் சேர்க்க வேண்டாம்.

சாதாரணமாக, தினமும் 100 மி.லி சாறு அல்லது 10 கிராம் கோதுமைப்புல் சாப்பிட்டால் போதும். முதலில் 25 மில்லியில் தொடங்கி 50 மில்லியாக்கி 100 மில்லி வரை குடிக்க வேண்டும். நீண்டகால நோயாளிகள் அல்லது முதியவர்கள் 300 மில்லி வரைகூட சாறு அருந்தலாம்.  கோதுமையில் உள்ள குளூட்டன், மூளையின் செயல்திறனைப் பாதிக்கும் என்பதால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், மனவளர்ச்சியற்ற குழந்தைகள் இதை அருந்தக்கூடாது’’.

- எம்.மரியபெல்சின்