மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!

மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!

டெக்னாலஜிகு.கணேசன், பொதுநல மருத்துவர்

து கணினி யுகம். மருத்துவத்துறையும் விதிவிலக்கல்ல. கடந்த கால் நூற்றாண்டு காலமாக கணினி சார்ந்த பரிசோதனை முறைகளும் சிகிச்சை களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வந்துள்ள ‘வார்ப்’ (VARP) எனும் பரிசோதனை முறை இதை உறுதிப்படுத்துகிறது. இதய நோயாளிகளின் இதயத்துடிப்பில் ஏற்படுகிற பிரச்னைகளைக் கண்டறியும் பரிசோதனை இது. இதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், இதயத்துடிப்பின் அடிப்படை அறிவியலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதயம் துடிப்பது எப்படி?

இதயம் தானாகவே துடிக்கும் தன்மையுள்ள சிறப்புத் தசைகளால் ஆன ஓர் உறுப்பு. இதில் மேற்புறம் இரண்டு; கீழ்ப்புறம் இரண்டு என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. மேலறைகள் சுருங்கும்போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள் சுருங்கும்போது மேலறைகள் விரிகின்றன. இப்படி ஒருமுறை இதயம் சுருங்கி விரிவதை ‘இதயத்துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.

மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!

இப்படி ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உடலிலிருந்து அசுத்த ரத்தத்தைப் பெறுவதும், சுத்த ரத்தத்தை உடலுக்குத் தருவதுமாக இருக்கிறது, இதயம். இது ஓய்வில்லாத சுழற்சியாக நிகழ்கிறது. இதன் பலனால், நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் எல்லா நேரமும் கிடைத்துக்கொண்டிருக்கிறது. நாம் உயிர் வாழ்வதற்கு இந்தத் துடிப்பும் ரத்தச் சுழற்சியும் மிகவும் அவசியம். இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படுகிறது. அதை இதயமே தயாரித்துக்கொள்கிறது என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

இதயத்தின் வலது மேலறையில் ‘சைனோ ஏட்ரியல் நோட்’ (Sino Atrial Node) என்று ஓர் இதயக் கணு உள்ளது. இது ‘ஏட்ரியோ வென்ட்ரிகுலர் நோட்’ (Atrio Ventricular Node) மற்றும் ‘ஹிஸ்-பர்கின்ஜி நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje) ஆகியவற்றின் வழியாக இதயத் தசைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இக்கணுவில்தான் மின்சாரம் உற்பத்தியாகி இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்த மின்விசையானது குறிப்பிட்ட மின்னோட்டப் பாதையில், சீராகவும், முறையாகவும் இதயத்தசைகளுக்கு விநியோகிக்கப்படுவதால், இதயம் சீரான எண்ணிக்கையிலும் லப், டப், லப், டப் என்ற இயல்பான லயத்துடனும் துடிக்கிறது.

பிரச்னை எப்போது?

மாரடைப்பு போன்ற இதயப் பிரச்னைகள் காரணமாகவோ, தைராய்டு பாதிப்பு போன்ற பிற நோய்களின் தாக்கத்தினாலோ இந்த மின்னோட்ட உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டால் அல்லது அதிக அளவு மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிட்டால், இதன் விநியோகத்தில் தவறு நேர்ந்தால், இதயத் துடிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; குறையலாம். அல்லது அதன் லயம் வேறுபடலாம். இவ்வாறு மாற்றம் காணும் இதயத்துடிப்பை ‘பிறழ்வுத் துடிப்பு’ (Arrhythmia) என்கிறோம்.

மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!

அறிகுறிகள்

இதயத்துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். போகப் போக, லேசாக தலை வலிக்கும். தலை சுற்றும். படபடப்பு வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். நெஞ்சு வலிக்கும். காரணம் தெரியாமல் அதிகம் வியர்க்கும். உடல் சோர்வாக இருக்கும். இந்த அறிகுறிகள் தோன்றியதும் சிகிச்சை எடுத்துக்கொண்டால், பின்னால் வரக்கூடிய பக்கவாதம், இதயச் செயலிழப்பு, இதயநிறுத்தம் (Cardiac Arrest) ஆகிய மோசமான விளைவுகளைத் தடுத்துவிடலாம்.

உதறல் நீக்கிக் கருவி

பொதுவாக, இதயத்துடிப்பு மாற்றத்தை இ.சி.ஜி, எக்கோ, ட்ரெட்மில், ஹோல்டர் மானிட்டர் (Holter Monitor Test), எலெக்ட்ரோபிசியாலஜி ஆகிய பரிசோதனைகளில் காணலாம். மற்றவர்களைவிட ஏற்கெனவே  மாரடைப்பு வந்தவர்களுக்கு இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. காரணம், இவர்கள் இதயத்தில் மாரடைப்பு ஏற்பட்ட தசையில் தழும்பு உண்டாகி இருக்கும். இது இதய மின்னோட்டப் பாதையில் இருக்குமானால், அங்கு பயணிக்கும் மின்னோட்ட விசையில் தடங்கல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் பிறழ்வுத் துடிப்பு உருவாகலாம். அப்போது  ‘டீஃபிபிரிலேட்டர்’ (Defibrillator) எனும் உதறல் நீக்கிக் கருவி கொண்டு, மிகக்குறைந்த அளவில் இதயத்துக்கு மின்சாரம் பாய்ச்சுவார்கள். உடனே இதயம் சிறிது நேரத்திற்கு நின்று, பிறகு துடிக்கத் தொடங்கும். மீண்டும் துடிக்கும்போது சீரான லயத்துடன் இதயம் துடிக்கும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்!

இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்கத் தேவையான மருந்துகளைத் தருவார்கள். அடிக்கடி இந்த நிலைமைக்குள்ளாகிறவர்களுக்கு ‘ஐசிடி’ (ICD - Implantable Cardioverter Defibrillator) என்ற கருவியை உடலில் நிரந்தரமாகப் பொருத்தி விடுவார்கள்.  பிறழ்வுத் துடிப்பு உண்டாகும்போது, இக்கருவி தானாகவே செயல்பட்டு, இதயத் துடிப்பைச் சரிசெய்து, உயிருக்கு வரும் ஆபத்தைத் தடுத்துவிடும். ஆனால், இதன் விலை அதிகம். சிகிச்சைக்கான செலவும் அதிகம். அடிக்கடி இதன் இயக்க நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் பாட்டரியை மாற்ற வேண்டும். இதைப் பொருத்திக்கொண்ட இடத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எனவே, மாரடைப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் தராமல், எக்கோ பரிசோதனையில் இதயத்தின் ‘ரத்தம் ஏற்றும் அளவு’  (Ejection Fraction) 35 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் இதைப் பொருத்துவது இப்போதைய நடைமுறையில் உள்ளது.

‘வார்ப்’ கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் கோப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் நடாலியா டிரையனோவா ஒரு பெண் மருத்துவர். இந்தக் குழுவினர் சமீபத்தில் ‘வார்ப்’ (VARP -  Virtual heart Arrhythmia Risk Predictor) எனும் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு ரத்தம் ஏற்றும் அளவு 35 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள 41 நோயாளிகளின் இதயத்தைத் தனித்தனியாக பல பரிமாணங்களில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து, கணினிக்குள் பதிவு செய்து, அதற்கு இணையான ‘டிஜிட்டல் மாடல் இதயத்தை’ 3டி பரிமாணத்தில் வடிவமைத்தனர். இதற்கு ‘மெய்நிகர் இதயம்’ (Virtual heart) என்று பெயர். இது குறிப்பிட்ட நபருக்குப் பிற்காலத்தில் பிறழ்வுத் துடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைத் துல்லியமாகக் கணித்துவிடுகிறது.

இவர்களின் ஆராய்ச்சியில் 30 பேருக்கு பிறழ்வுத் துடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி ‘பிறழ்வுத் துடிப்பு’ ஆபத்து காத்திருக்கிறவர்களுக்கு மட்டும் ஐசிடி கருவியைப் பொருத்துவது; மற்றவர்களுக்குத் தேவையில்லை’ என முடிவு செய்யப்பட்டது.

என்ன நன்மை?

‘இந்தக் கண்டுபிடிப்பு மூலம், தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்து விலை உயர்ந்த ஐசிடி கருவியை நோயாளிகளுக்குப் பொருத்துவது தவிர்க்கப்படுகிறது; சிகிச்சை செலவும் குறைகிறது. அமெரிக்காவில் மட்டும் பிறழ்வுத் துடிப்பினால் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர்  இறக்கிறார்கள்; சுமார் 20 ஆயிரம் புதிய நோயாளிகள் வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ‘வார்ப்’ ஒரு வரப்பிரசாதம்’ என்கிறார் நடாலியா டிரையனோவா.

இந்தப் பரிசோதனை வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. இனி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் வந்துவிடும்.

(அடுத்த இதழில் முடியும்...)