மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 5

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 5

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

`பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’ -


ப்படிச் சொல்கிறார் திருவள்ளுவர். `புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்தில் வரும் இந்தத் திருக்குறளின் பொருள்... `ஒரு நோய் வந்துவிட்டால், அதற்கு மருந்து என வேறு பொருள்கள் இருக்கின்றன. அணிகலன் அணிந்த இந்தப் பெண்ணால் ஏற்பட்ட நோய்க்கு இவள்தான் மருந்து.’ பாலியல் வேட்கையால் உந்தப்பட்ட ஓர் ஆண், தன்னுடைய பிரியத்துக்குரியவள் எங்கிருந்தாலும், தன் வேட்கையைத் தீர்க்கும் மருந்தைத் தேடிச் செல்வதுதானே இயல்பு? ஆசை வெட்கமறியாது. வரவேற்பறையோ, சமையலறையோ, குளியலறையோ... அந்தக் கணத்தில் பெண்ணை வளைத்து இழுக்க, ஆணின் கரம் நீளும் இடம் அது.

  சமையலறை சமைக்க மட்டும்தானா என்ன? பலருக்கும், பல நேரங்களில் காதல் களியாட்டங்கள் அரங்கேறிய இடமாகவும் அது இருக்கும். அங்கே நாயகன், நாயகியைச் சீண்டும், முத்தமிடும், அணைக்கும் காதல் காட்சிகளை எத்தனையோ திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். இங்கே சமையலறையை உறவோடு நான் ஒப்பிடுவதற்குக் காரணம் உண்டு. உப்பு, புளி, காரம், இனிப்பு, துவர்ப்பு... எனச் சமையலில் இருப்பதைப்போலவே அனைத்துச் சுவைகளும் கொண்டது காமம். இவற்றைத் தேவைக்கேற்ப, தேவைப்படும் நேரங்களில், தேர்ந்தெடுத்து ருசிக்கத் தெரிந்தால் வாழ்க்கையில் இறுதிவரை இன்பமே.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 5

எனக்கு மிக நெருக்கமானவரின் மகன் அவன். அவன் மனைவி சமைத்துக்கொண்டிருந்திருக்கிறாள். அவன் மெதுவாகச் சென்று பின்பக்கமாக அவளைப் பாய்ந்து பிடித்திருக்கிறான். பயந்து கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்திருக்கிறான். சட்டென்று இடுப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது அவனுக்கு. என்னைத் தேடி வந்தான். `இது சாதாரண விஷயம்’ என்று அவனுக்கு அறிவுரை சொல்லி, மருந்துகளும் கொடுத்தனுப்பினேன். இப்படி அசந்தர்ப்பமான நேரங்களில், இடுப்புப் பிடித்துக்கொள்ளும் சம்பவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

`இடுப்புவலியோ, இடுப்புப்பிடிப்போ ஏற்பட்டுவிட்டால் முதுகுத்தண்டு பாதிக்கப்படும்; செக்ஸில் சரியாக ஈடுபட முடியாது’ என்ற ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது. உண்மை என்னவென்றால், அசைவதில்தான் பிரச்னை ஏற்படுமே தவிர, செக்ஸில் பாதிப்பு இருக்காது. எனவே, பயப்படத் தேவையில்லை. `பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ (British medical journal) தெரிவித்திருக்கும் ஒரு புள்ளிவிவரம், `உலக அளவில் 58 சதவிகிதம் பேருக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது செக்ஸின்போது இடுப்புவலியோ, பிடிப்போ ஏற்பட்டிருக்கும்’ என்கிறது. இவர்களில், 70 சதவிகிதம் பேருக்கு இடுப்புவலி ஏற்பட, சதைப்பிடிப்பே காரணம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, வராமல் தடுக்க ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி (Stretching Exercise) சிறந்தது. ஸ்ட்ரெச்சிங் தசைகளைத் தளர்வாக்கும்; தசைகள் எளிதாக இயங்க உதவும். எந்தக் கடினமான வேலையைச் செய்வதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 5

முதுகுப்பகுதிக்கு சரியான சப்போர்ட் கிடைக்க படுக்கை சற்றுக் கடினமானதாக இருக்க வேண்டும். நிற்கும்போதோ, நடக்கும்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ முதுகுப்பகுதி நேராக இருக்கவேண்டும். உடலை எவ்வளவு நேராகப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. முதுகுப்பகுதித் தசைகளை வலுப்பட, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

இடுப்புவலி, முதுகுப்பிடிப்பு இருக்கும்போதும் செக்ஸில்  ஈடுபடலாம்.  வலி இருப்பவர் கீழே படுத்துக்கொண்டு உறவுகொண்டால் வலி தெரியாது. அதிக வலி இருந்தால், வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், மாத்திரைகளைத் தவிர்ப்பதே நல்லது. வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். உடற்பயிற்சிகள் மூலம் உடலை வலுவாக்கி, சிரமமில்லாமல் செக்ஸில் ஈடுபடுங்கள்.

 (இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- மு.இளவரசன்