
ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த 25 வயது இளம்பெண் ஒருவரைச் சென்னையைச் சேர்ந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு ‘சிறுநீரகத்தில் கல் இருக்கிறது’ எனச் சொல்லி, அதற்கான மருந்துகளை டாக்டர் பரிந்து ரைத்துள்ளார். அந்த மருந்துகளைச் சாப்பிட்டபிறகும் வயிற்று வலி நிற்கவில்லை. வேறு ஒரு டாக்டரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி தந்தது. பல வருடங்களாக அந்தப் பெண் சாப்பிட்டுவந்த வைட்டமின் டி மருந்தின் பக்க விளைவுதான் அந்த வலி.
ஏன் அவர் வைட்டமின் டி சாப்பிட்டார்? தனக்கு உடல்வலி இருப்பதாகத் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்த போது, ‘‘எனக்கும் இதே பிரச்னைதான். டாக்டர் என்னை வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கச் சொன்னாங்க. இப்போ வலி இல்லை’’ என்று இலவச அட்வைஸை அவர் அள்ளிவிட்டிருக்கிறார். அதைக் கேட்டு இவரும் வைட்டமின் டி மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டதன் விளைவே இது.
இலவச மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதில், படித்தவர்களும் பாமரர்களாகவே மாறிவிடுகிறார்கள். இலவசமாகக் கிடைக்கிற அறிவுரைகளில் மருத்துவ ஆலோசனைகளுக்கே நம்மூரில் முதலிடம். பக்கத்து வீட்டுக்காரருக்குப் பலனளித்த அதே மருந்தும் மாத்திரையும் தனக்கும் உதவும் என்கிற மூடத்தனம் பலருக்கு உள்ளது. இன்னொரு பக்கம் மருந்துக்கடைக் காரர்களும் டாக்டர்களாக மாறுகிறார்கள். காய்ச்சல், தலைவலிக்கு பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பதைப்போல, இப்போதெல்லாம் கை கால் வலி, மூட்டுவலி என வருகிறவர்களுக்குச் சர்வரோக நிவாரணியாக வைட்டமின் டி-யை விற்கிறார்கள்.
‘வருடத்தின் பெரும்பான்மை மாதங்கள் வெயிலுடன் வாழும் நமக்கு, வைட்டமின் டி பற்றாக்குறை வர வாய்ப்பே இல்லை’ என்பதுதான் அதிரவைக்கிற உண்மை. ஏனெனில், வைட்டமின் டி என்பது சூரிய வெளிச்சம் உடலில் படுவதால் உற்பத்தியாவது. ஆனாலும், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோருக்குமே வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை மருத்துவர்கள் சர்வசாதாரணமாகப் பரிந்துரைக்கிறார்கள். இதன் பின்னணியில், மருந்துக் கம்பெனிகளின் மிகப்பெரிய அரசியல் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘இன்று எல்லோருக்கும் வைட்டமின் டி டெஸ்ட் செய்கிறார்கள். டெஸ்ட் ரிப்போர்ட், எல்லோருக்கும் குறைபாடு இருப்பதாகக் காட்டுகிறது. இந்த டெஸ்ட் சரியானதுதானா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது’’ என்கிறார் பிரபல சிறுநீரகவியல் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன். வைட்டமின் டி டெஸ்ட் தேவையற்றது என அடித்துச் சொல்கிற அவர், அதற்காகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்.
‘‘இங்கே செய்யப்படுகிற வைட்டமின் டி சோதனை என்பது மொத்த வைட்ட மின் டி-யைக் கணக்கிடுவது. வைட்டமின் டி-யில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று, புரோட்டீனுடன் இணைந்த வடிவில் இருப்பது. அதாவது, உடலிலுள்ள ஆல்புமினுடன் இணைந்த பவுண்டு வடிவம். இது ‘ஸ்டோரேஜ் ஃபார்ம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இன்னொன்று, ஃப்ரீ ஃபார்ம். வெயிலில் இருந்து பழகுபவர்களுக்கு பவுண்டு ஃபார்ம் குறைவாக இருக்கும். இயற்கையாக வெளிச்சம் கிடைப்பதால் ஸ்டோரேஜ் தேவையில்லை என உடல் தீர்மானித்துக்கொள்கிறது.
இந்த இரண்டையும் சேர்த்துத்தான் வைட்டமின் டி டெஸ்ட் கணக்கிடுகிறது. ஃப்ரீ ஃபார்மை மட்டும் தனியே கணக்கிடுவதில்லை. அப்படித் தனியே ஃப்ரீ ஃபார்மைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது நார்மலாக இருக்கலாம். அதுவே மொத்த அளவைக் கணக்கிடும்
போதுதான் குறைவாகக் காட்டுகிறது. இந்த நிலையில், வைட்டமின் டி அளவைச் சரியாகக் கணக்கிடுவதே கஷ்டம். இன்று உலகம் முழுக்க வைட்டமின் டி குறைபாடு பெரிதாகப் பேசப்படுகிறது. எல்லா வயதினருக்கும் எல்லா நோய்களுக்கும் வைட்டமின் டி டெஸ்ட்டைப் பரிந்துரைக்கிறார்கள். குறைபாடு எனக் காட்டுகிற ரிப்போர்ட்டை வைத்து, அதற்கு மருந்தும் கொடுக்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, வைட்டமின் டி சப்ளிமென்ட் தயாரிப்புக்கான மருந்துக் கம்பெனிகள் பெரியளவில் இல்லை. இன்று வைட்டமின் டி தயாரிப்பு என்பது மிகப்பெரிய பிசினஸாகி விட்டது.

வைட்டமின் டி குறைபாடு என்பது நோயல்ல. அது ஓர் அறிகுறி. உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான அறிகுறி. வேறு ஏதேனும் நோய்களால் உடல் பலவீனமாக இருக்கும்போது, வைட்டமின் டி டெஸ்ட் செய்துபார்த்தால் குறைவாகக் காட்டும். அதை ஒரு குறை பாடாகக் கருத வேண்டிய தில்லை. உங்கள் உடல்நலனில் அக்கறை தேவை என்பதை உணர்த்தும் அறிகுறியாகக் கருதினால் போதும். இதய நோய் தீவிரமாக இருக்கும் நபருக்கு வைட்டமின் டி டெஸ்ட் செய்தால், அது குறைவாகத்தான் காட்டும். அவருக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுப்பதால், இதய நோய் சரியாகிவிடாது. உடற்பயிற்சிகள் செய்வது, உணவில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் அக்கறை அவசரம் என்பதை உணர வேண்டும். உண்மையான வைட்டமின் டி குறைபாடு என்பது அரிதினும் அரிதானது. உடலில் வெளிச்சமே படாத நிலையில், படுத்த படுக்கையாக வெளியில் எட்டிப்பார்க்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவருக்கு, வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பு இருக்கிறது. வெளிநாடுகளில் இது சகஜம். குளிர்காலத்தில் மாதக் கணக்கில் வீட்டுக்கு உள்ளேயே இருப்பார்கள். அதனால், அவர்களுக்கு வரலாம். இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு’’ என்கிற ராஜன் ரவிச்சந்திரன், ஏசி அறையில் இருப்பதாலோ, சன் ஸ்கிரீன் உபயோகிப்ப தாலோ, வைட்டமின் டி பற்றாக்குறை வராது எனத் தெளிவுபடுத்துகிறார்.

‘‘தேவையில்லாமல் வைட்ட மின் டி சப்ளிமென்ட்டுகள் கொடுக்கும்போது, சிறுநீரகக் கற்கள் உற்பத்தியாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக அறிஞர்கள், ‘வைட்டமின் டி குறைபாடு என்பதே கேள்விக் குரியது’ என்கிறார்கள். இதில் மேற்கொண்டு ஆராய்ச்சி தேவை என்றும் வலியுறுத்தி யுள்ளனர். ஆனால், ‘இது வைட்டமின் தானே, எடுத்துக் கொண்டால் என்னவாகிவிடப் போகிறது’ என எடுத்துக் கொள்கிறவர்கள் அதிகம். தண்ணீரில் கரையக்கூடிய பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி போன்றவற்றுக் கெல்லாம் பெரிய பக்க விளைவுகள் கிடை யாது. ஆனால், வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக் கூடியது என்பதால், பக்க விளைவுகள் அதிகம். அளவை மிஞ்சினால் கிட்னி ஸ்டோன், வாந்தி, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வரலாம். வெளிநாடுகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடைகளிலேயே வைட்டமின் டி சப்ளிமென்ட் வாங்க முடியும். அவற்றின் அளவு 400 யூனிட் முதல் 1000 யூனிட் வரைதான் இருக்கும். அதுவே, இந்தியாவில் பரிந்துரைக்கப் படுவதோ 60,000 யூனிட் முதல் ஆறு லட்சம் யூனிட் வரை என ஹைடோஸ். அந்தளவு நமக்குத் தேவையே கிடையாது. இந்தப் பிரச்னை ஒருநாள் பெரிதாக வெடிக்கும். அப்போது உண்மை தெரிய வரும்...’’ என்கிறார் ராஜன் ரவிச்சந்திரன்.
“எல்லாப் பிரச்னைகளுக்கும் மருந்து கம்பெனி களின் லாப நோக்கத்தைக் காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
“அதற்காக மருந்துக் கம்பெனிகள் தவறே செய்வதில்லை என்றும் சொல்ல முடியாது. எவற்றையெல்லாம் லாப நோக்கில் மருந்து கம்பெனிகள் செய்கின்றன எனத் தெரிந்து தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம். சிஸ்டம் சரியில்லாததுதான் அடிப்படைப் பிரச்னை. இன்று பலருக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. சூரிய ஒளிபடாத சூழலில், பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுகிறோம். நைட் ஷிஃப்ட் வேலை அதிகரித்திருக்கிறது. மைதானத்தில் வெயில் பட விளையாடுவதைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுகிறார்கள் குழந்தைகள். அப்பார்ட்மென்ட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை மட்டுமின்றி, அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோமும் சேர்ந்தே பாதிப்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால், எல்லோருக்கும் இந்தப் பரிசோதனை அவசியமா என்பதுதான் கேள்வி. இதற்கெனத் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மிகப்பெரிய ஆய்வு அமைப்பு அவசியம். அப்படி எதுவும் இல்லாததுதான் பிரச்னையே. அரசுத் தரப்பில் இதற்கெனத் தனிப்பட்ட ஆய்வுகள் தேவை. இன்று பன்னாட்டு நிறுவனங்கள்தான் உலகையே ஆளுகின்றன. எல்லா நாடுகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, அவற்றை ஊக்கப்படுத்துவது, அவற்றின் முடிவுகளை வெளியிடுவது, நார்மல் வேல்யூக்களை மாற்றுவது என எல்லாமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா நாட்டு அரசாங்கங்களும் அரசு சார்பாக ஆராய்ச்சிகளை வலியுறுத்த வேண்டும். இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், உண்மை நிலவரம் தெரியாமல், மருந்து கம்பெனிகள் சொல்வதை நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஒருமுறை மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அடுத்தடுத்த முறைகளும் தாமாகவே வாங்கிச் சாப்பிடுவது, வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களிடம் மீன் எண்ணெய் மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லிச் சாப்பிடுவது போன்றவை யெல்லாம் ஆபத்தானவை. பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதும் இந்தியாவில் நோயாளி களுக்குப் பொது மருத்துவமனைகளின் மூலம் சிகிச்சை அளிக்கிற பழக்கமும்தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கான தீர்வு’’ என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.
- ஆர்.வைதேகி

வைட்டமின் டி எதில் கிடைக்கும்?
‘‘மாத்திரையாக வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளும்போது, அது மற்ற வைட்டமின்களை அழித்துவிடும். கூடியவரை இ்தை இயற்கையான வழிகளில் பெறுவதே பாதுகாப்பானது’’ என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வைட்டமின் டி கிடைக்கும் வழிகளை அவர் பட்டியலிடுகிறார். ‘‘கீரைகள், காய்கறிகள், நட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால், வெண்ணெய், சில வகை மீன்கள், ஈரல், மீன் எண்ணெய், சோயா, பால், சீஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகிய உணவுகளைச் சாப்பிடுவதோடு மிக முக்கியமாக, சூரிய வெளிச்சம் உடலில் பட வேண்டும்.’’

எது குறைபாடு?
* 30 நானோகிராம்/மில்லி லிட்டருக்குமேல் இருந்தால் சிறப்பு.
* 20 முதல் 30 நானோகிராம்/மில்லி லிட்டர் இருப்பது இயல்பானது.
* 20 நானோகிராம்/மில்லி லிட்டருக்குக்கீழ் இருந்தால், அது குறைந்த அளவு.
* 10 நானோகிராம்/மில்லி லிட்டருக்குக்கீழ் இருந்தால்தான் குறைபாடு.
* அப்போதுமே, ஃப்ரீ ஃபார்ம் அளவை டெஸ்ட் செய்தால்தான் சரியான அளவு தெரியும்.